மாலத்தீவின் ஆட்சி மாற்றம்!

4 Nov

-மனீஷ் திவாரி

மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், இந்தியாவைப் பொருத்த வரை  எதிர்பாராதது மட்டுமல்ல, மிகவும் துரதிர்ஷ்டமானது. இந்திய எதிர்ப்பு அரசியல்வாதியும், சீன ஆதரவாளராகக் கருதப்படுபவருமான டாக்டர் முகமது மூயிஸ் அங்கு நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இனம், மொழி, கலாச்சாரம், வர்த்தகம் எனப் பல வழிகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் நெருங்கிய உறவு உண்டு. மாலத்தீவு என்ற பெயரே  ‘மாலத்வீபம்’ என்ற சமஸ்கிருதச் சொல்லின் திரிபு தான். தீவுகளின் மாலை என்று இதற்குப் பொருள். மாலத்தீவின் அதிகாரப்பூர்வ மொழியான  ‘திவெயி’, சமஸ்கிருதம், பிராகிருதம், தமிழ் ஆகிய இந்திய மொழிகளின் தாக்கம் கொண்டது.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1965 ஜூலை 26இல் மாலத்தீவுகள் விடுதலை பெற்றபோது, அந்தத் தீவுக்கூட்டத்தை  சுதந்திர நாடாக அங்கீகரித்த முதல் நாடு இந்தியா தான். 1981இல் இரு நாடுகளிடையே உருவான விரிவான வர்த்தக ஒப்பந்தம், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இரு நாடுகளின் வர்த்தக நலன்களை மேம்படுத்தியதுடன், இருதரப்பு உறவையும் வலுப்படுத்தி இருக்கிறது.

தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் சார்க் கூட்டமைப்பை உருவாக்கியதில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் பெரும் பங்குண்டு. தெற்காசிய பொருளாதார ஒன்றியத்திலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுகின்றன.

2004இல் சுனாமி தாக்குதலின்போது, மாலத்தீவுகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய முதல் நாடு இந்தியா. கொவைட் தொற்றின்போது,  ‘வாக்ஸின் மைத்ரி’ திட்டத்தில் தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து பெற்ற முதல் நாடும் மாலத்தீவுகள் தான். அந்த அளவுக்கு அந்நாடு இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாகவே இருந்து வந்திருக்கிறது.

1988இல் மாலத்தீவுகளின் அதிபரான மாமூன் அப்துல் கயூமுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றபோது ‘கற்றாழை நடவடிக்கை’  என்ற பெயரில் இந்திய ராணுவம் அங்கு 1988 நவ. 3இல் களமிறங்கியது. அந்த அதிரடி நடவடிக்கையால் தான் அந்நாட்டின் ஜனநாயகம் அப்போது காக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட அப்துல்லா லுதுஃபி தலைமையிலான கும்பலும், இலங்கையிலிருந்து வருவிக்கப்பட்ட கூலிப்படையினரும் முடக்கப்பட்டனர்.

அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் துணிச்சலான இந்த நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் பலவும் பாராட்டின. குறிப்பாக, மாலத்தீவுகளில் ஜனநாயகம் தடம்புரளாமல் இந்தியாவின் செயலூக்கம் மிகுந்த நடவடிக்கை  காத்துள்ளது என்று, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனும், பிரிட்டன் பிரதமர் மார்கரெட் தாட்சரும் புகழ்ந்தனர்.

ஆனால் முகமது மூயிஸின் தற்போதைய வெற்றி, இந்தியா- மாலத்தீவுகள் ஆகிய இரு நாடுகளிடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைப்பதாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. அவரது சீன ஆதரவு ரகசியமானதல்ல. அவர் சீன ஆதரவாளராக இருப்பது இந்திய விரோதமாக மாற வேண்டிய அவசியமில்லை என்று கருதுவோர் உள்ளனர். ஆனால், அவரது கடந்தகாலச் செயல்பாடுகளும்,  இந்திய விரோதப் போக்கும் செய்திகளாகப் பதிவாகி இருக்கின்றன. அதையும் புறக்கணிக்க இயலாது.

முகமது மூயிஸின் இந்திய எதிர்ப்புக் கொள்கைகள், இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் செல்வாக்கிற்கு சவாலையும், புவிசார் அரசியலில் தேவையற்ற சிக்கலையும் ஏற்படுத்துவனவாக உள்ளன.  இது நமது வியூகங்களை மறுபரிசீலனை செய்தாக வேண்டிய தேவையை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவுகளில் உருவாக்கப்பட்ட  கருத்தாக்கம் அங்கு தேசிய அரசியலில் பிரதான இடம் வகித்துள்ளது. நல்ல நோக்கத்துடன் இந்தியா செய்த உதவிகளையும் கூட உள்நோக்கத்துடன் திரித்துக் கூறும் இந்திய எதிர்ப்பாளர்களின் கரம் அங்கு ஓங்கிவிட்டது. இஸ்லாமிய தீவிரவாதமும் இந்திய எதிர்ப்புணர்வும் இணைந்து, இந்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றன.

2010இல் இந்தியா மாலத்தீவுகளுக்கு கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வழங்கியபோது இந்திய எதிர்ப்புப் பிரசாரம் அங்கு தொடங்கியது. மாலத்தீவுகளை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியை இரு நாடுகளும் இணைந்து கண்காணிக்க இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் அப்போது கையொப்பமானது. அதனை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அப்துல்லா யமீன் கடுமையாக எதிர்த்தார்.  

மாலத்தீவுகளின் இறையாண்மையில் இந்தியா அத்துமீறித் தலையிடுவதாகவும், அளவுக்கு மீறி இந்தியா மேலாதிக்கம் செலுத்துவதாகவும் யமீன் குற்றம் சாட்டினார். அவர் அதிபராக ஆனபோது இரு நாட்டு உறவு குலையத் தொடங்கியது. அவரது அரசில் (2013 – 2018) அமைச்சராக இருந்த முகமது மூயிஸ் தான் தற்போது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் நவ. 17இல் பொறுப்பேற்க உள்ளார்.

2012இல் இந்தியாவைச் சார்ந்த ஜிஎம்ஆர் குழுமம், மாலே சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தி 25 ஆண்டுகளுக்குப் பராமரிக்கும் ஒப்பந்தத்தைப் பெற்றபோது, அதற்கு எதிரான அரசியல் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 511 மில்லியன் டாலர் (தற்போதைய இந்திய மதிப்பில் ரூ. 4,250 கோடி) பெருமானமுள்ள அந்தப் பணி, சர்வதேச விதிமுறைப்படி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஜிஎம்ஆர் நிறுவனத்தால் பெறப்பட்டது.

ஆனால், விமானப் பயணிகளிடம் விமானநிலைய மேம்பாட்டுக்காகவும் பயணிகளின் காப்பீட்டுக்காகவும் 25 டாலர் கட்டணமாகப் பெறப்பட்டதை பெரிய குற்றமாகப் பிரசாரம் செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தடையாணை பெற்றனர். அந்த வழக்கு சர்வதேச தீர்ப்பாயத்தில் இருக்கும்போதே ஜிஎம்ஆருடனான பணி ஒப்பந்தத்தை ரத்து செய்தது அந்நாட்டு அரசு.

அதையடுத்து, 2013இல் அப்துல்லா யமீன் அதிபரானதும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசாரம் வரிசை கட்டியது. இந்தியாவுக்கு ஆதரவாக இருந்த மாலத்தீவு மக்களின் மனநிலையில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கருத்துருவாக்கம் அப்போது தான் விதைக்கப்பட்டது. இஸ்லாமிய மத அடிப்படைவாத உணர்வையும்,  மாலத்தீவு தேசிய வெறியையும் தூண்டிவிட்டு, இந்தியாவுக்கு எதிரான சிந்தனையைப் பெரிதுபடுத்தினார் யமீன். அப்போது, சீனாவின் ஆதிக்கம் அங்கு பரவத் தொடங்கியது.

அதன் விளைவாக சீனாவின் முக்கியமான முன்னெடுப்பான பட்டை மற்றும் கடல்வழி பட்டுச்சாலை (பிஆர்ஐ) திட்டத்தில் மாலத்தீவுகள் உறுப்பினரானது. இந்தியாவை மட்டம் தட்டுவதற்காக, அந்நாட்டில் சீன முதலீடுகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

2018இல் இப்ராஹிம் சோலி அதிபரானவுடன், இந்தியாவுக்கு விரோதமான கொள்கைகளை மாற்றி அமைத்தார். முந்தைய அரசின் தவறுகளை அவர் சரிப்படுத்தினார். மாலத்தீவுகளின் நலனில் மீண்டும் இந்தியாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டது. இரு நாடுகளிடையிலான பொருளாதார, ராணுவ ஒத்துழைப்பு வலுப்பெற்றது. தவிர, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் பெருகுவதைத் தடுப்பதிலும் மாலத்தீவுகள் அரசின் இந்த மாற்றம் உதவிகரமாக இருந்தது.

ஆனால் இதற்கு எதிராக, உள்நாட்டு அரசியலில் மீண்டும் இந்திய எதிர்ப்பு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்நாட்டின் மக்கள் தேசியக்கட்சியும் (தற்போது அதிபராகத் தேர்வாகியுள்ள முகமது மூயிஸின் கட்சி), மாலத்தீவுகள் முற்போக்குக் கட்சியும் இணைந்து  உருவாக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி  ‘இந்தியாவே வெளியேறு’ என்ற பிரசார இயக்கத்தை தொடர்ந்து நடத்தின.

அந்தப் பிரசார இயக்கத்தின் நோக்கம், மாலத்தீவுகளில் பணி அமர்த்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவது தான். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாட்டிலுள்ள இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 75 மட்டுமே. மாலத்தீவுகளுக்கு இந்தியா பரிசாக வழங்கிய டோர்னியர் விமானத்தையும் இரு கண்காணிப்பு ஹெலிகாப்டர்களையும் இயக்குவதில் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவவே அவர்கள் அங்கு உள்ளனர். அவர்களுக்கு எதிராகவே பெரும் வெறுப்புணர்வுப் பிரசார இயக்கம் நடத்தப்பட்டது.

இந்தியாவில் தற்போது ஆட்சியிலுள்ள பாஜக அரசின் ஹிந்துப் பெரும்பான்மையின வாதமும் மாலத்தீவுகளில் வாழும் இஸ்லாமிய மக்களிடையே உணர்ச்சியைத் தூண்டுவதில் பெரும் பங்களித்துள்ளது.  

மாலத்தீவுகள் நாட்டின் மக்கள் பழமைவாதிகள். அந்த நாட்டின் அரசாங்க மதமாக இஸ்லாம் உள்ளது. எனவே இந்தியாவிலிருந்து வெளிவரும், ஹிந்துக்களுக்கு ஆதரவான, இஸ்லாமியர்களுக்கு எதிரான செய்திகளை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. மக்களை இந்திய எதிர்ப்பின் அடிப்படையில் மதரீதியாகத் தூண்டிவிட்டதால் மட்டுமே, எதிர்க்கட்சிகள் தற்போதைய தேர்தலில் வென்றுள்ளன.  

ஆசியாவையும் ஐரோப்பாவையும் கடல்வழியில் இணைக்கும்  கடல் வர்த்தகப் பாதை (எஸ்எல்ஓசி) இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும். தென்சீனக் கடலிலிருந்து  இந்தியப் பெருங்கடலின் வடபகுதி மீது சீன கடற்படையின் செல்வாக்கு பரவுவதைத் தடுக்கும் தாங்குதளமாக மாலத்தீவுகள் இருந்து வந்தது. எனவே இந்தியாவுக்கு அந்நாடு ராணுவவியூக ரீதியாகவும், கடல் வர்த்தகப் பாதையிலும் இன்றியமையாதது.

ஏற்கெனவே, பாகிஸ்தானின் குவாடரிலும், இலங்கையின் ஹம்பந்தோட்டையிலும் துறைமுகங்களை நிர்மாணித்தல் என்ற பெயரில் சீனா ஊடுருவி விட்டது. மாலத்தீவுகளிலும் சீன ஆதரவு அரசு அமைவது அந்நாட்டின் ராணுவ ஆதிக்கம் இந்தியாவைச் சுற்றிலும் பெருக வாய்ப்பளித்துவிடும். இது நமது பாதுகாப்பு  எல்லைக்கு உள்பட்ட பகுதியில் எதிரிகள் நுழையக் கூடாது என்ற மன்றோ அயலுறவுக் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கிவிடும். (மன்றோ கோட்பாடு என்பது ஐரோப்பாவுக்குக் கடிவாளமிடும் வகையிலான, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கியமான கருதுகோளாகும்).

துரதிர்ஷ்டவசமாக முகமது மூயிஸின் வெற்றி இந்தியாவுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. அதேசமயம், இந்தியாவுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய மூயிஸால் பின்வாங்க முடியாத நிலையும் காணப்படுகிறது. மாலத்தீவுகளிலுள்ள இந்திய ராணுவ வீரர்களை நாட்டைவிட்டுத் துரத்தப்போவதாக அவர் கூறியிருப்பது இருநாட்டு உறவில்  பெரும் சிக்கலைத் தோற்றுவிக்கலாம். அந்த நாட்டில் 1988இல் ஆட்சிக்கவிழ்ப்பைத் தடுத்து ஜனநாயகத்தைக் காத்தது இந்திய ராணுவமே என்பதை அந்நாட்டு இளைய தலைமுறையினர் அறிய மாட்டார்கள்.

தான் அதிபரானால், ஊழல் வழக்கில் 11 ஆண்டு தண்டனை பெற்று சிறையிலிருக்கும் அப்துல்லா யமீனை விடுவிப்பேன் என்று முகமது மூயிஸ் தேர்தலின்போது அறிவித்திருந்தார். அதுபோலவே, தேர்தல் வெற்றி குறித்த தகவல் கிடைத்தவுடன், தற்போதைய அதிபர் முகமது சோலியை வலியுறுத்தி, அப்துல்லா யமீனை சிறையிலிருந்து விடுவித்திருக்கிறார். யமீன் தற்போது சிறைக்குப் பதிலாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

சன்னி இஸ்லாமியர்களிடையே பிரபலமான சீர்திருத்தவாத இயக்கமான சலாபியிஸம் மாலத்தீவுகளில் மிகுந்த செல்வாக்கு செலுத்தி வருகிறது. இது இஸ்லாமிய  அடிப்படைவாத இயக்கமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பெருவாரியாகப் பின்பற்றப்படும்  தாராளமயமான தேவ்பந்தி இஸ்லாமுடனும், இந்திய துணைக்கண்டத்தில் தனித்துவமான இஸ்லாம் நெறிமுறைகளை வடிவமைத்த சூஃபியிஸத்துடனும் முரணான பார்வையைக் கொண்டிருக்கிறது சலாபியிஸம். இதனை தீவிரமாகப் பின்பற்றுபவர் தான் முகமது மூயிஸ்.

இவை அனைத்தையும்விட கவலைக்குரியது, மாலத்தீவுகளில் பெருகிவரும் மதஅடிப்படைவாதமும், இஸ்லாமிய தீவிரப்போக்கும் தான். அல்-குவைதா, ஐஎஸ்ஐஎஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு பிற நாடுகளிலிருந்து போராளிகளை அதிக அளவில் அனுப்பிய நாடாக மாலத்தீவுகள் மாறியுள்ளது.

எனவே வரும் நாட்களில் மாலத்தீவுகள் விஷயத்தில் இந்தியா நிதானமாகவும் சிந்தித்தும் செயல்பட வேண்டியிருக்கும். சீன ஆதரவும் இந்திய எதிர்ப்பும் கொண்டவர்கள் வெல்லக்கூடும் என்பதை  எதிர்பார்த்து இருந்தாலும், இந்த புதிய மாற்றம் இரு நாட்டு உறவுகளுக்கு சவாலாகவே  இருக்கும்.

அண்டைநாடான மாலத்தீவுகளில் பெருகிவரும் மத அடிப்படைவாதம் நிச்சயமாக இந்தியாவுக்கு நல்லதல்ல. எனவே மாலத்தீவுகளுடனான நமது வியூகங்களை ஆழ்ந்து மறுபரிசீலனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

தினமணி (03.11.2023)

.

Leave a comment