இனவாதப் பொய்களுக்கு சாட்டையடி

29 Oct

தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட முக்கியமான கருத்தியல், வெளிநாட்டு அறிஞர்கள் சிலரால்  முன்வைக்கப்பட்ட ஆரிய- திராவிட இனவரைவுக் கொள்கை எனில் மிகையில்லை. ஆரிய இனம் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் புகுந்தது; தென்இந்தியாவில் வாழ்ந்த திராவிட மக்களை அடக்கி ஆண்டது என்பதே இந்தக் கருத்தியலின் வேராகும்.

ஆனால் இதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளார் டாக்டர் அம்பேத்கர். தற்கால மானுடவியலாளர்களும் இக்கருத்தியலை ஏற்பதில்லை. இதுபோன்ற வரலாற்று ஆதாரங்களுடன், ஆரிய-  திராவிட இனவாதத்தை விமர்சிக்கும் வகையில் இந்நூலை எழுதி இருக்கிறார், தமிழகத்தின் முன்னணி மேடைப் பேச்சாளர் கு.சடகோபன்.

காமராஜர், ம.பொ.சி, ஈ.வெ.ரா. பெரியார், கி.வா.ஜகந்நாதன் போன்ற சென்ற நூற்றாண்டின் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பதால், திராவிடக் கருத்தியலும் தமிழக அரசியலும் எவ்வாறு இரட்டைத் தண்டவாளங்களாக மாறின என்பதை சுவாரசியமாக விளக்க இவரால் முடிந்திருக்கிறது.

ஆரியக் கோட்பாட்டுக்குக் காரணமான மாக்ஸ்முல்லர், திராவிட இனக் கருத்தியலின் தோற்றுவாயான கால்டுவெல், பிராமண வெறுப்பைக் கொண்டு திராவிட இயக்கம் வளர்ந்த வரலாறு, அதற்குள் ஏற்பட்ட பிரிவினைகள், அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட பல விவரங்களை தக்க தரவுகளுடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

ஆரியர் என்பது குணத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்; திராவிடம் என்பது தென்பகுதியைக் குறிக்கும் இடப்பெயர். இவ்விரண்டுமே சமஸ்கிருதச் சொற்கள். ஆனால் இவை தவறான பொருளில் இனப்பெயராகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன என்பதே இந்நூலின் பிரதானக் கருத்து.  

மொழியியல், இன வரைவியல், மானுடவியல், அரசியல், ஆன்மிகம், தத்துவம், வரலாறு எனப் பல துறை சார்ந்த ஆதாரங்களுடன் ஆரிய- திராவிட இனவாதக் கோட்பாட்டை நிராகரிக்கும் நூலாசிரியர், அதற்கு ஆதரவாக சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதி, திரு.வி.க., ம.பொ.சி., உள்ளிட்ட பல பெரியோரின் கருத்துகளைத் தொகுத்திருக்கிறார். இயல்பான பேச்சு வழக்கிலான எழுத்துநடை படிக்க எளிதாக இருக்கிறது.

***

ஆரிய திராவிட மாயை
-டாக்டர் கு.சடகோபன்
424 பக்கங்கள்; விலை: ரூ. 460-
சுவாசம் பதிப்பகம், சென்னை
போன்: 81480 66645

தினமணி (23.09.2023)

.

Leave a comment