பண்பாட்டு வரலாற்றின் பதிவேடு

9 Mar

உலகம் சுற்றிய தமிழறிஞரான சோமலெ  எழுதிய ஆய்வு நூல் இது.  தமிழ்நாட்டின் நிலப்பரப்பு, இயற்கை வளங்கள், இங்கு காணப்படும் மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழிபாடு உள்ளிட்ட அம்சங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார். மானுடவியல், பண்பாட்டியல் ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய அரிய பணியை, தனது பயண அனுபவங்கள் வாயிலாக மிகவும் எளிமையாக நிறைவேற்றி இருக்கிறார்.

நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் அவர்களின் வாழ்க்கை நிலைகளையும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவர்களது மரபான வாழ்க்கை முறையையும் பண்பாட்டையும் புரிந்துகொள்ள முடியும். அதற்கு முன்னதாக, அந்த மக்கள் வாழும் நிலப்பரப்பின் வரலாறு, மொழிவளம்,  எழுதப்பட்ட இலக்கியம், வாய்மொழி இலக்கியம், சமய நம்பிக்கைகள் குறித்து அறிந்திருப்பதும் அவசியம். அந்த வகையில் சோமலெ அவர்களின் இந்நூல், மானுடவியலாளர்களுக்கு வழிகாட்டும் குறிப்புதவி நூலாக விளங்குகிறது.

இடமும் மக்களும், கற்பனைப் பாத்திரங்களும் இதிகாச மாந்தர்களும், மதமும் மந்திரமும், வழக்கங்களும் மரபுகளும், தேரும் திருவிழாவும், வாய்மொழி இலக்கியம், பாமர மக்களின் இசையும் நடனமும், தெருக்கூத்தும் பிற பொழுதுபோக்குகளும் } என எட்டுத் தலைப்புகளில் சோமலெ தொகுத்தளித்துள்ள தகவல்கள், தமிழ்நாடு குறித்து நாம் அறிந்தும் அறியாமல் இருக்கும் பல சிறப்புகளை வெளிப்படுத்தி இருக்கின்றன.

மாநிலத்திலுள்ள பல்வேறு ஜாதியினரிடத்திலும் பழங்குடி மக்களிடத்திலும் காணப்படும் பண்பாட்டுக் கூறுகள், திருமண நிகழ்வு முறைகள், ஆலயங்களில் இசைக்கப்படும் பலவிதமான இசைக்கருவிகள், சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மாதந்தோறும் நடந்தேறும் பெருவிழாக்கள், தேரோட்டச் சிறப்பு, நாட்டை ஒன்றுபடுத்தும் சமய நம்பிக்கைகள் ஆகியவை குறித்த ஆசிரியரின் குறிப்புகள் மிகுந்த கவனத்திற்குரியவை.

1975இல் எழுதப்பட்ட இந்நூலில், அறிவியல் வளர்ச்சியும் நகர மயமாதலும் பண்பாட்டை மறு வடிவமைப்பதை சோமலெ பதிவு செய்திருக்கிறார். சுமார் ஐம்பது ஆண்டுகள் கழிந்த நிலையில் இந்நூலிலுள்ள பல தகவல்களை,  சரித்திரச் சான்று என்றே கொள்ளலாம்.

கும்மி, ஒயில் கும்மி, கோலாட்டம், கரகாட்டம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு,   லாவணி, காவடியாட்டம்,  குறவஞ்சி, குரவைக்கூத்து, கழைக்கூத்து, புரவியாட்டம் போன்ற நாட்டுப்புறக் கலைகளும், பரத நாட்டியம், ஹரிகதா காலட்சேபம் போன்ற பாரம்பரியக் கலைகளும் தமிழ்நாட்டில் இணக்கமாகப் பரவி இருப்பதை சுருக்கமாகக் கூறி இருக்கிறார் சோமலெ. இந்நூலிலுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் விரிவான தளத்தில் ஆய்வுகள் நடத்த முடியும்.

***

தமிழ்நாடு மக்களின் மரபும் பண்பாடும்

-சோமலெ

304 பக்கங்கள்; விலை: ரூ. 300-

வெளியீடு: முல்லை பதிப்பகம், சென்னை-40

போன்: 98403 58301

தினமணி (04.03.2024)

.

Leave a comment