தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது எப்படி?

3 May

.

‘சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தான்’ என்ற பொன்மொழியைக் கேட்டிருப்போம். அதற்கான வாய்ப்புகளை வழங்கவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வண்ணமயமான விழாவான தீபாவளி பண்டிகையின் அடிப்படை நோக்கமே பிறரை மகிழ்விப்பதாக உள்ளது.

பெற்ற அன்னையைத் தவிர வேறு யாராலும் தான் கொல்லப்படக் கூடாது என்று பெற்ற வரத்தால் நரகாசுரன் ஆணவம் அடைந்து உலக மக்களை வாட்டினான். அவனை அழிக்கக் கிளம்பிய கிருஷ்ணனுக்கு உதவியாக, நரகாசுரனின் அன்னையான பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவே தேர் ஓட்டினாள்.

போர்க்களத்தில் கிருஷ்ணன் அடிபட்டு மயங்க, தானே போரிட்டு கணவனைக் காத்ததுடன், நரகனையும் வீழ்த்தினாள் சத்தியபாமா. அப்போது தாய்மை உணர்வுடன் கிருஷ்ணனிடம் பாமா பெற்ற வரமே நராசுர சதுர்த்தி.

அசுரன் கொல்லப்பட்ட ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியன்று மக்கள் அனைவரும் அதிகாலையில் நரகாசுரனை நினைந்து எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும்; அவர்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பாமா வேண்டினாள். இதுவே தீபாவளிக்கான புராணக் கதை.

தனது மகன் இறந்தாலும், உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற தியாகச் சிந்தையுடன், எந்த அன்னையும் செய்யத் தயங்கும் செயலை பாமா செய்தாள். தனது மகன் இறந்த நாள் வருத்தத்திற்குரியதாக இல்லாமல் மகிழ்ச்சிக்குரியதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வரமும் பெற்றாள். அதனால்தான் இன்றும் நரகாசுரன் நம் இதயங்களில் வாழ்கிறான்.

தற்போது தீபாவளி நாடு முழுவதும் அற்புதமான வர்த்தக வாய்ப்பாக மாறிவிட்டது. புதிய ஆடை ராகங்கள், அணிகலன்களின் அறிமுகத்துக்கு ஏற்ற காலமாக தீபாவளி மாறிவிட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சுவைத்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறோம். உறவுகளுடன் அளவளாவி, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்சிகளில் லயித்து, பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிறோம். சந்தோஷம்தான்.

ஆனால், உறவுகளை இழந்த முதியவர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் இந்த தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவார்கள்? ஊர் முழுவதும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், ஒதுக்குப்புறமாய் நின்று இயலாமையுடன் வேடிக்கை பார்க்கும் இவர்களும் தீபாவளி கொண்டாட வேண்டாமா? அப்போதுதானே ஊர் முழுவதும் தீபாவளிக் கோலாகலம் முழுமையாகும்?

உலக வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் பிறரைச் சார்ந்தே வாழ்கிறோம். சமுதாயத்திடம் இருந்து நாம் பெரும் பயன்கள் கணக்கற்றவை. உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, வசிக்கும் வீடு, வாழும் சுற்றுப்புறம்… அனைத்திலும் சமுதாயத்தின் பங்களிப்பு உள்ளது. அந்த சமுதாயத்திற்கு நாம் என்ன பிரதிபலன் செய்ய முடியும்?

இதற்கான வாய்ப்பே பண்டிகைகள். இவற்றை நாம் மட்டும் கொண்டாடினால் போதாது. பண்டிகை கொண்டாட வாய்ப்பற்றவர்களுக்கும் அதற்கான உரிமை உண்டு. அதற்கான வழிகளை நாம் உருவாக்கலாமே!

நாட்டு மக்களுக்காக அன்னையே போர்க்கோலம் தரித்து, மகன் என்றும் பாராது அசுரனை வீழ்த்திய நாளை ‘தீபாவளி’ என்று கொண்டாடுகிறோம். இன்னாளில், நம்மால் இயன்ற அளவு செலவிட்டு புத்தாடைகளையும் பலகாரங்களையும் பட்டாசுகளையும் வாங்கி, ஆதரவற்ற அன்புள்ளங்களுக்கு வழங்கலாமே!

கைவிடப்பட்ட முதியோரையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும் இன்னாளில் சந்தித்து அளவளாவி மகிழலாமே. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தானே?

– தினமணி (02.11.2010)
‘தித்திக்கும் தீபாவளி’ விளம்பரச் சிறப்பிதழ்- திருப்பூர்.

.

.

 

One Response to “தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது எப்படி?”

Trackbacks/Pingbacks

  1. தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது எப்படி? | தேசிய சிந்தனை - October 22, 2014

    […] நன்றி: வ.மு.முரளி இணையதளம் […]

    Like

Leave a comment