பண்பாட்டின் அச்சாணிகளைப் பாதுகாப்போம்!

13 Jul

அண்மையில்  கோவில் திருவிழாக்களில் நடந்த சில அசம்பாவிதங்கள், விழா முன்னேற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி உள்ளன. குறிப்பாக, ஒரு வார காலத்துக்குள் ஐந்து வெவ்வேறு இடங்களில் நடந்த தேரோட்ட நிகழ்வுகளில் விபத்துக்கள் நேரிட்டு, பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.

குடியாத்தம் சிவகாமசுந்தரி- பாலசாதுலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மே 2ல் நடைபெற்றது. அப்போது தேரின் கலசம் மின்கம்பியில் உராய்ந்ததில் ஏற்பட்ட மின்சார விபத்தில் 4 பக்தர்கள் பலியாகினர்.

அதேநாளில் நாகூரில் நடந்த சந்தனக்குட ஊர்வலத்தில் அலங்கார வாகனத்தில் மின்சார விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகினர். இவ்விரு விபத்துகளிலும் மின்இணைப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள்வதில் இருந்த கவனக்குறைவு விழாவை அமங்கலமாக்கிவிட்டது.

ஆரணி, கோட்டை கைலாசநாதர் கோவில் தேரோட்டம் மே 3ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சக்கரம் உடைந்து தேர் கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில் தேரோட்டம் மே 4ல் நடந்தது. இதில் தேர் கட்டுப்பாடிழந்து பக்கவாட்டில் சுவர் மீது மோதியதை அடுத்து தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் தேரோட்டம் மே 6ல் நடந்தது. அப்போது தேரின் அச்சாணி முறிந்ததால் தேர் கவிழும் நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இத்தேரோட்டம் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்டது.

கோவை அருகிலுள்ள பாலமலை மீது மே 5ல் நடந்த தேரோட்டம், சாலையில் இருந்த பள்ளத்தால் விபத்தைச் சந்தித்தது. இதில் தேர் கவிழ்ந்து பக்தர் ஒருவரது உயிரைக் காவு கொண்டது; மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கண்ட விபத்துக்கள், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் கோவில் திருவிழாக்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசிந்தனைக்குள்ளாக்கி உள்ளன. ÷ஊர் கூடித் தேர் இழுப்பது என்பது தமிழகப் பண்பாட்டின் சிறப்பான அங்கம். தேரோட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு சமூக மக்களின் பங்களிப்பு கட்டாயமாக உள்ளது. அனைவரும் இணைந்து தேரோட்டம் நடத்தும்போது சமூக ஒற்றுமை உறுதிப்படுகிறது.

இதை உணராமல் கண்டதேவி கோவிலில் தேரோட்டத்தில் நடந்த குளறுபடிகளால் சமூக ஒற்றுமை பாதிக்கப்பட்டதை அறிவோம். இப்போது தேரோட்டமே ஆபத்தானதாக மாறி வருவது, அறநிலையத் துறையிலுள்ள குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

நமது மரச்சிற்பிகளின் அற்புதக் கலையாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை கோவில் தேர்கள். நுண்ணிய, அழகிய சிற்பங்கள் நிறைந்த திருவாரூர் ஆழித்தேரும், அவிநாசித் தேரும் பிரபலமானவை. ஆனால் தேர்களை நமது கோவில் நிர்வாகங்கள் பராமரிப்பது எப்படி என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.

மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியில் உறைந்து, சாலையோரம் தகரத் தடுப்புகளுக்குள் தத்தளிக்கின்றன நமது கோவில் தேர்கள். தேரோட்டத்தின்போது மட்டுமே இவற்றுக்கு மரியாதை.

இந்தத் தகரத் தடுப்புகளும் கூட 1989ல் அவிநாசி கோவில் தேர் எரிந்த பிறகு ஏற்பட்ட ஞானோதயத்தால் தான் அறநிலையத் துறையால் அமைக்கப்பட்டன. மற்றபடி தேரை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கு எந்த வழிகாட்டிக் குறிப்புகளும் கோவில்களில் இல்லை.

இயற்கையாகவே உளுத்துப் போகும் தன்மை கொண்ட மரத்தேர்களைப் பாதுகாப்பது குறித்து அறநிலையத் துறை கவலைப்படுவதும் இல்லை. தேரோட்டத்துக்கு ஒரு வாரம் முன்னதாக வார்னிஷ் பூசுவதும், சக்கரங்களைச் செப்பனிட்டு உயவு எண்ணெய் பூசுவதும், தோரணங்களால் அலங்கரிப்பதும் மட்டுமே பராமரிப்பு என்று கருதப்படுகிறது.

இதே நிலை நீடித்தால், நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழகத் தேர்கள் பலவும் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கோவில் கோபுரம் போலவே பூஜைக்குரியதான கோவில் தேர்களின் அவல நிலை குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டிய வேளை வந்துவிட்டது.

ரதவீதிகளின் பராமரிப்பு, விழாக்காலங்களில் மின்இணைப்பு பராமரிப்பு, திருவிழாக் கூட்டத்தைக் கையாள்வது ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்விஷயத்திலும் அரசு தெளிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டுதான் அதிகமான தேரோட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கோவில் கொடிக்கம்பம் சாய்வதும் கோவில் தேர் கவிழ்வதும் அரசுக்கு ஆபத்தான அறிகுறிகளாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன. இவற்றின் பின்னணியில் வேறு சதிச்செயல்கள் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவது நல்லது.

கோவில் திருவிழாக்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான மாறுதலை அளித்து, ஆண்டு முழுமைக்குமான உந்துசக்தியைத் தர வல்லவை. அவ்விழாக்களில் நேரிடும் விபத்துக்கள் நமது சிறப்பான பாரம்பரியம் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்வதாக மாறிவிடும்.

எனவே ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள், தேர்களைப் பராமரிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

கோவில் தேர்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள்; நமது ஒற்றுமையின் அச்சாணிகள். அவை முறிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.

மீள்பதிவு: குழலும்யாழும் (17.05.2012)

.

One Response to “பண்பாட்டின் அச்சாணிகளைப் பாதுகாப்போம்!”

  1. Vishvarajan July 21, 2012 at 3:14 PM #

    Nice essay. Very correct. If we neglect the symbols of our religion and heritage, we won’t be able to leave anything for our next generation. it is our utmost duty to preserve all these.

    Like

Leave a comment