நீயும் நானே!

30 Aug

Adi Sankara

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

ஆண்டவனின் படைப்பினிலே அனைவரும் ஒன்று!
அதையுணர்த்த அவதரித்தார் சங்கரர் அன்று!
தூண்டுவதால் சுடராகும் ஜோதியைப் போலே
தூயோனே சங்கரரை மூண்டுஎழுப்பினான்!

(ஜய)

அன்றொரு நாள் பாலகனார் விடியற்காலையில்
அவசரமாய் நீராடித் திரும்பி வந்தனர்!
அன்றலர்ந்த தாமரை போல் தேகம் ஒளிவிட
ஆதவனை வணங்கிக்கொண்டு நடந்து வந்தனர்!
என்றாலும் மனம் குழம்பி, மதி மயங்கியே
அமைதியற்று, நடை தயங்கி வந்த போதிலே,
‘சண்டாளன்’ என்றொருவன் எதிரில் வந்தனன்;
சங்கரரின் பாதம் தொட்டுப் பணிந்து நின்றனன்!

(ஆண்டவனின்)

சங்கரரோ மனம் குலைந்து வெறுப்பு கொண்டனர்!
‘சண்டாளன்’ எனக் கூசித் தள்ளி நின்றனர்!
அங்கம் உடன் ஒளி குறைந்து மாசுபட்டது
பாலகனோ பதைபதைத்து பரிதவித்தனர்!
அப்போதே சண்டாளன் காட்சி கொடுத்தான்;
அவன் வேறு யாருமில்லை- ஈசன்! ஈசன்!
அப்போதே சங்கரரும் சபதம் எடுத்தார்;
அது வேறு எதுவுமில்லை- ‘நீயும் நானே’!

(ஆண்டவனின்)

சரித்திரமாய் நம் முன்னே சங்கரர் உள்ளார்!
சற்குருவாய், ஞானத்தை வழங்கிய வல்லார்!
ஹரிஹரனை சண்மதமாய் வணங்கிடச் சொன்னார்!
சங்கமென ஒற்றுமையாய் வாழ்ந்திடச் சொன்னார்!
பிறப்பினிலே ஜாதி இல்லை! தாழ்வும் இல்லை!
சண்டாளன், மாமுனிவன் என்பதும் இல்லை!
மறப்பது ஏன், மானிடனே? மதியுள்ளோனே!
மனிதர்கள் நாம்- ஆத்மாவின் ராகம் தானே?

(ஆண்டவனின்)
(ஜய)
குறிப்பு: 1991இம் ஆண்டு காஞ்சி சங்கர மடம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்று ஆறுதல் பரிசாக ‘வெள்ளிக்காசு’ பெற்ற கவிதை இது.
.

One Response to “நீயும் நானே!”

  1. sakthi74 August 30, 2013 at 10:08 PM #

    வாழ்த்துக்கள் முரளி சார்

    Like

Leave a comment