கோவை மக்களின் இஷ்டதெய்வம் ஈச்சனாரி விநாயகர்

20 Sep

இன்று விநாயகர் சதுர்த்தி- சிறப்புத் தகவல்கள்

கோவை மாவட்ட மக்களின் இஷ்ட தெய்வமாக அருள் பாலித்து வருகிறார், ஈச்சனாரியில் எழுந்தருளியுள்ள விநாயகர். 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்டவராக, கோவை மாவட்டத்திலுள்ள இரண்டாவது பெரிய விநாயகராக இவர் தரிசனம் தருகிறார்.

இக்கோவில் 500 ஆண்டுகள் பழமையானது; 30 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் நாடிவரும் பக்தர்களின் குறைதீர்த்து வருகிறது. கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் 9 கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.

கோவை அருகிலுள்ள பேரூரில் அமைந்திருக்கும் பழமையான பட்டீஸ்வரர் கோவிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வதற்காக வண்டியில் கொண்டு செல்லும்போது ஈச்சனாரி பகுதியில் வண்டியின் அச்சு முறிந்ததாம். அதே இடத்தில் அமர்ந்து அருளாசி புரியத் துவங்கினாராம் விக்னேஸ்வரர். இது இக்கோவில் பற்றிய செவிவழிக் கதை.

எடுத்த காரியம் தடங்கலின்றி வெற்றி பெற இங்குள்ள விநாயகரைப் பிரார்த்தித்துச் செல்கின்றனர் பக்தர்கள். இங்கு ஒவ்வொரு நாளும் அன்றைய நட்சத்திரப்படி விநாயகருக்கு அலங்காரம் செய்வது சிறப்பு.

***

தாராபுரம் கோவிலில் மனிதத் தலையுடன் விநாயகர்

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்திலுள்ள பழமையான தில்லாபுரி அம்மன் கோவிலில் மனிதத் தலையுடன் கூடிய விநாயகர் சிலை உள்ளது.

மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் இருந்த நகரம் விராடபுரம். இதுவே தற்போது தாராபுரம் என்று வழங்கப்படுவதாக இப்பகுதியில் நம்பிக்கை நிலவுகிறது. அஞ்ஞாதவாசம் துவங்குவதற்கு முன் தன்னிடமிருந்த ஆயுதங்களை வன்னிமரத்தில் அர்ஜுனன் மறைத்து வைத்ததாகவும் மகாபாரதம் கூறுகிறது. அந்த மரம் இருந்த பகுதியில் அமைந்த கோவில்தான் தில்லாபுரி அம்மன் கோவில் என்கிறார்கள்.

இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சிறிய கோவில்தான். இங்குள்ள மனிதத் தலையுடன் கூடிய ஆதிவிநாயகர்தான் இக்கோவிலின் சிறப்பம்சம். விநாயகர் உருவமேதான், ஆனால் தும்பிக்கை மட்டும் இல்லை. இங்குள்ள யாருக்கும் இதன் காரணம் தெரியவில்லை. ஆயினும் இந்தச் சிற்பத்தை ஆதிவிநாயகர் என்று வழிபட்டு வருகிறார்கள்.

– தினமணி (வெள்ளிமணி- 14.09.2012)

.

Leave a comment