கல்வியாளரின் சிந்தனைகள்…

5 Feb

29DPALLI

ஒரு நாட்டின் மதிப்பை நிர்ணயிப்பது அதன் கல்வித்துறை தான் என்று சொல்வார்கள். இன்று நம் நாடு உலக அரங்கில் வளரும் நாடாகவே மதிப்பிடப்படுகிறது. அதற்கு சற்றும் சளைக்காத வகையில் நமது கல்விமுறையும் இப்போது தான் வளர்ந்து வருகிறது. இதன் அபாயகரமான விளைவுதான், வேலைக்காகக் காத்திருக்கும் கோடிக் கணக்கான இளைஞர்களைக் கொண்ட நாடாக நாம் மாறியிருக்கும் காட்சி. வேலைக்குத் தகுதியற்ற இளைஞர்களையே நமது கல்விமுறை உருவாக்குகிறது. இது எரிமலை மீது அமர்ந்திருப்பது போன்றது என்கிறார் நூலாசிரியர்.

நமது கல்வி முறையின் சிக்கல் என்ன? நமது பாடத்திட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என்ன? கல்வித்துறையை நமது அரசுகள் புறக்கணிக்கின்றனவா? அனைவருக்கும் கல்வி வெற்றுக் கனவு தானா? அடிப்படை பள்ளிக் கல்வியின் சரிவு உயர்கல்வியை எவ்வாறு பாதிக்கிறது? எனப் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றுக்குப் பதில் அளிக்கத் தகுதியான கல்வியாளராக நூலாசிரியர் விளங்குகிறார்.

தாம்பரத்தில் நடேசன் வித்யாலயா என்ற பள்ளியை சுமார் 20 ஆண்டுகளாக நடத்திவரும் நூலாசிரியர், வழக்குரைஞர், நிர்வாக ஆலோசகர், பேராசிரியர், எழுத்தாளர் எனப் பல முகங்களை உடையவர். பல வெளிநாடுகளுக்குச் சென்று அங்குள்ள கல்விமுறையை நேரில் அறியும் வாய்ப்புப் பெற்ற ஆசிரியருக்கு, நமது நாட்டின் கல்வித்தர வீழ்ச்சியின் ஆணிவேர் பிடிபடுவது இயல்பே. அத்துடன் நில்லாமல், அதற்கான தீர்வுகளையும் தனது அனுபவ அறிவால் கூறிச் செல்கிறார்.

தமிழக பள்ளிக் கல்வியின் குழப்பமான நிலைக்கு சமச்சீர் கல்வி மாற்றாகுமா? சிபிஎஸ்இ பள்ளிகள் பெருகுவதன் மர்மம், மாற்றப்பட வேண்டிய பாடத்திட்டங்கள், கல்வி தனியார் மயம், மாணவர்களிடையே தலைதூக்கும் வன்முறை, தேர்வு முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள் என நமது கல்விமுறை எதிர்கொள்ளும் பல சவால்களை விரிவாக அலசுகிறார் நூலாசிரியர்.

அரசுப் பள்ளிகளின் தரமின்மையால் தனியார் பள்ளிகள் தராதரமின்றி புற்றீசலாக முளைத்தன என்பதைக் குறிப்பிடும் நூலாசிரியர், தனியார் பள்ளிகளின் சிரமங்களையும் சில இடங்களில் பேசுகிறார்.

மொத்தத்தில் இந்நூல், கல்வி குறித்த முழுமையான பார்வையை வாசகருக்கு ஏற்படுத்துகிறது. எனினும், கல்வி அளிப்பதில் அரசின் பொறுப்புணர்வு குறைந்து வருவதற்கு கல்வி தனியார் மயமாக்கமே தீர்வு என்று கூறுவதைத்தான் ஏற்க முடியவில்லை. இது அரசு தனது கடமையை பிறர் தோளில் சுமத்தித் தப்பிக்க வாய்ப்பு ஏற்படுத்திவிடக் கூடாது.

***

எண்ணங்கள்! அனுபவங்கள்!
பள்ளிக் கல்வி மாற்றங்கள்

டாக்டர் ந.ராமசுப்பிரமணியன்

224 பக்கங்கள், விலை: ரூ. 150.

நடேசன் சாரிட்டிஸ்,
12, பிருந்தாவன் அவென்யூ,
தாம்பரம், சென்னை- 600 045
தொலைபேசி: 044- 2226 6614.

.

Leave a comment