மதமேறிய வரலாறு

6 Feb

 

nool4c

உலக வரலாறு நெடுகிலும் இறை நம்பிக்கைக்காக ரத்தம் சிந்திய கொடிய அத்தியாயங்கள் நிறைந்துள்ளன. தான் நம்பும் மதத்தைப் பரப்ப ஆயுதமேந்திய அரசுகளால் மானுடம் அடைந்த துயரம் அளவிட முடியாதது. அதிலும், இந்தியாவின் கோவாவில் போர்த்துக்கீசிய கத்தோலிக்க மிஷனரிகள் நடத்திய கொடூரமான சித்ரவதைகள், காலத்தால் அழிக்க இயலாத வடுக்களாகவே உள்ளன.

கொங்கனி பேசும் அமைதியான மக்கள் வாழ்ந்த அந்தப் பிரதேசத்தில் 15-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் போர்ச்சுக்கீசியர்கள் கால் பதித்தனர். ஆயுத பலத்துடன் புதிய பகுதியில் ஆளப் புகுந்த போர்ச்சுக்கல் மன்னரின் பிரதிநிதிகள், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் நல்லாதரவுக்காக மதப் பரப்புரையை கடமையாகவே செய்தனர். அதற்காக அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளை நினைத்தாலே நெஞ்சம் நடுங்கும்.

 

‘விச் ஹன்ட்’ எனப்படும் சூனிய வேட்டை, ‘இன்குவிசிஸன்’ எனப்படும் சமயக்குற்ற விசாரணை ஆகிய கொடிய நிகழ்வுகளால், போர்ச்சுக்கலைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள் உள்ளூர் மக்களை மிரட்டி கிறிஸ்தவர்களாக மாற்றினர். அப்போது நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டன.

goa_inquisition

ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் ஏகாதிபத்திய எண்ணத்துடன் கத்தோலிக்கத் திருச்சபை அமைத்த கூட்டணியின் கோர விளைவு அது. சுமார் 450 ஆண்டுகள் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக கொங்கனி மக்கள் நடத்திய சமரும் வரலாற்றின் மறு பக்கமாகும்.

இந்நூலில் போர்ச்சுக்கீசியர்களின் கொடுங்கோலாட்சி, கொடிய சித்ரவதைகள், பேரழிவுகள், அவற்றை எதிர்த்த மக்களின் தொடர் போராட்டம், இறுதியில் வென்ற மானுடம் ஆகியவற்றின் பதிவுகளை நீரோடை போலத் தொகுத்து வழங்கி இருக்கிறார், கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ரங்கஹரி.

மலையாளத்தில் எழுதப்பட்ட மூல நூலை தமிழில் அலமேலு கிருஷ்ணன் வழங்கி இருக்கிறார். வரலாற்றுப் பேராசிரியர் சி.ஐ.ஐசக்கின் அணிந்துரை நூலுக்கு மகுடமாக உள்ளது. இறந்த காலத்திலிருந்துதான் எதிர்காலத்துக்கான பாடத்தைக் கற்க முடியும். அந்த வகையில், தமிழில் இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய முக்கியமான நூல் இது.

***

கோவாவில் மதமாற்றம்-துயரக் கதை:

மலையாளத்தில்- ரங்கஹரி,
தமிழில்- அலமேலு கிருஷ்ணன்.

200 பக்கங்கள், விலை: ரூ. 120,

விஜயபாரதம் பதிப்பகம்,
12, எம்.வி.நாயுடு தெரு,
சேத்துப்பட்டு, சென்னை- 600 031,
தொலைபேசி: 044- 2836 2271.

Leave a comment