இஸ்ரோ தலைவரான தமிழக விஞ்ஞானி

16 Jan

கே.சிவன்

விண்வெளி ஆய்விலும், செயற்கைக்கோள்களை ஏவுவதிலும் சாதனைகளை ஆரவாரமின்றி நிகழ்த்தி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) 9-வது தலைவராக, தமிழரான கே.சிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார். தனது 35 ஆண்டு கால இஸ்ரோ பணிக் காலத்தில் சிவன் நிகழ்த்திய அரிய சாதனைகளே, அவரை இந்தியாவின் மிகச் சிறந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு உயர்த்தியுள்ளன.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாரக்காவிளை என்ற கிராமத்தில் 1957-இல் பிறந்தவர் கே.சிவன். அவரது பெற்றோர்: கைலாசவடிவு நாடார்- செல்லம் தம்பதியர். 

சாரக்காவிளையில் ஆரமபப் பள்ளியிலும், வல்லங்குமாரவிளை கிராமத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பயின்ற சிவன்,  நாகர்கோவில் எஸ்.டி.ஹிந்து கல்லூரியில் கல்லூரி அறிமுக வகுப்பு முடித்தார். சென்னை எம்.ஐ.டி.யில் விண்கலப் பொறியியலில் பி.இ. பட்டம் (1980) பெற்ற அவர், பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி.யில் விண்வெளிப் பொறியியலில் எம்.இ. பட்டம் (1982) பெற்றார்.  விவசாயம் சார்ந்த தனது குடும்பத்தில் முதல் பட்டதாரி சிவன்தான்.

அதையடுத்து, இஸ்ரோவில் இணைந்த சிவன், அங்கு துருவ செயற்கைக்கோள் ஏவுகலன் (பிஎஸ்எல்வி) திட்டத்தில் பணிபுரிந்தார். அதன் துவக்கம் முதல் இறுதி வரையிலான அனைத்து நிலைகளிலும் திட்டமிடுதல், வடிவமைப்பு, ஒருங்கிணைப்பு, பகுப்பாய்வு ஆகிய பணிகளில் அவர் செயல்பட்டார்.

2006-இல் மும்பை ஐ.ஐடி.யில் விண்வெளிப் பொறியியலில் பிஹெச்.டி. பட்டம் பெற்றார். இஸ்ரோவில் எம்.எஸ்.எஸ்.ஜி. குழு இயக்குநர், ஆர்.எல்.வி-டி.டி. திட்ட இயக்குநர், விண்கல நிறுவனத் திட்ட துணை இயக்குநர், ஜி.எஸ்.எல்.வி. திட்ட இயக்குநர், வி.எஸ்.எஸ்.சி. தலைமைக் கட்டுப்பாட்டாளர், எல்.பி.எஸ்.சி. திட்ட இயக்குநர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ள அவர், துருவ செயற்கைக்கோள் ஏவுகலன் (பி.எஸ்.எல்.வி.), புவி இடைநிலை செயற்கைக்கோள் ஏவுகலன் (ஜி.எஸ்.எல்.வி.) திட்டங்களிலும் பெரும் பங்காற்றினார்.

சிவன் ஆற்றிய பணிகளுள் முத்ன்மையானது, ஏவுகலனின் பயணப்பாதையை துல்லியமாகத் திட்டமிட உதவும் சித்தாரா (SITARA) என்ற மென்பொருளை உருவாக்கியதாகும். இது அறுபரிமாண உருவக கணிணி இயக்க ஆய்வுச் செயல்முறை ஆகும். ராக்கெட்டின் பயணப்பாதையை கணினியில் கணித்து அதை செயல்முறைப்படுத்துவதில் இந்த மென்பொருள் திறமையாக இயங்குகிறது. இதுவே இஸ்ரோ ஏவுகலன்களின் தொடர் வெற்றிக்கும் வித்திட்டது. இதற்காக உலகத்தரமான நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஆய்வகத்தை சிவன் அமைத்தார். எந்தப் பருவ சூழலிலிலும் ஏவுகலனைச் செலுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பத்தையும் சிவன் உருவாக்கியுள்ளார்.

இணைக் கணினித் தொழில்நுட்பத்தையும் (Parellel Computing), மீஅதிவேக காற்றுச் சுரங்கத் தொழில்நுட்பத்தையும் (Hypersonic Wind Tunnel) ஒருங்கிணைக்கும் கணினிமய திரவ இயக்கவியலில் அவர் குறிப்பிடத்தக்க பணிகளை ஆற்றியுள்ளார். ராக்கெட் வடிவமைப்பில் மிகவும் பயன்படும் இத் தொழில்நுட்பத்தில் இந்தியா தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது.

செயற்கைக்கோள்களை ஏவும் கலங்கள் பணி முடிந்தவுடன் விண்வெளியிலேயே பயனின்றி குப்பையாகச் சுற்றுகின்றன. இதனை மாற்ற மறுபயன்பாட்டு விண்கலப் பயன்பாட்டில் வல்லரசு நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இந்தியாவும் இதற்கான திட்டத்தை (Reusable Launch Vehicle – Technology Demonstrator- RLV-TD) துவங்கிவிட்டது. இதிலும், ஜி.எஸ்.எல்.வி-மார்க் 3 திட்டத்திலும் சிவன் பெரும்பங்காற்றியுள்ளார்.

சந்திரயான், மங்கள்யான் திட்டங்களிலும் ஏவுகலன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் குழுவில் சிவன் பணி புரிந்துள்ளார். 2011 ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. திட்டக் குழுவில் அவர் இணைந்தார். உறைபனி நிலையில் எரிவாயுவை திரவமாக்கிப் பயன்படுத்தும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயக்கும் இத்திட்டம் இஸ்ரோவின் விண்வெளிப் பாய்ச்சலில் அடுத்தகட்ட வளர்ச்சியாகும்.

2014-இல், திருவனந்தபுரம் வலியமாலாவில் உள்ள திரவ இயக்க திட்ட மையத்தின் (LPSC) இயக்குநராகப் பொறுப்பேற்ற சிவன், 2015 ஜூனில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தின் (VSSC) இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

2017, பிப். 15-இல் 114 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி- சி37 ஏவுகலன் இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு, அனைத்து செயற்கைக்கோள்களும் அதனதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. இது ஓர் உலக சாதனையாகும். இத்திட்டத்தின் பின்னணியில் பிரதானமாக இருந்தவர் சிவன்.

இந்திய சுதேசி விண்கலத் திட்டத்தின் ஓர் அங்கமான ஜி.எஸ்.எல்.வி- மார்க்2 ஏவுகலன் வடிவமைப்பில் அவர் கவனம் செலுத்தி வந்தார். இது, மறு பயன்பாட்டு விண்கலமாகும்.

சென்ற ஆண்டு விண்ணில் ஏவப்பட்டபோது தோல்வியில் முடிந்த பி.எஸ்.எல்.வி.-சி39 திட்டத்தைப் புதுப்பித்து, மீண்டும் இந்த ஆண்டு  ஏவும் வகையில் மறு சீரமைத்தவரும் சிவனே. இது (பி.எஸ்.எல்.வி.-சி40) கடந்த ஜன. 12-இல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு, 31 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.

விண்வெளிப் பொறியியலில் பல ஆய்வுக் கட்டுரைகளை சிவன் எழுதியுள்ளார். இந்திய தேசிய அறிவியல் அகாதெமி, இந்திய விண்கலப் பொறியியல் சங்கம், சிஸ்டம்ஸ் சொஸைட்டி ஆஃப் இந்தியா ஆகியவற்றில் அவர் ஆய்வுக்குழு உறுப்பினராக உள்ளார். விக்ரம் சாராபாய் விருது (1999), இஸ்ரோவின் சிறப்புத் தகுதி விருது (2007), டாக்டர் பிரேன் ராய் விண்வெளி அறிவியல் விருது (2011) உள்ளிட்ட பல கௌரவங்களை சிவன் பெற்றுள்ளார்.

கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சின் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க பங்களித்தமைக்காக, இவரை இஸ்ரோ வட்டாரத்தில் ‘ராக்கெட் மனிதர்’ என்று பாராட்டுகிறார்கள்.

இவ்வாறு இஸ்ரோ (Indian Space Research Organization-ISRO) நிறுவனத்தின் வளர்ச்சியில் பலகட்டங்களில் பங்கேற்ற சிவனை, தற்போது அதன் தலைவராகவும், மத்திய விண்வெளித் துறை செயலாளராகவும் இந்திய அரசு நியமித்துள்ளது, தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமிதம் அளிப்பதாகும்.

“மாபெரும் ஆளுமைகளான விக்ரம் சாராபாய், சதீஷ் தவான் ஆகியோர் இஸ்ரோ நிறுவனத்துக்கு மிகவும் உயர்ந்த இலக்குகளையும் தர அடிப்படையையும் உருவாக்கிச் சென்றுள்ளனர். அவர்களின் அடியொற்றி, இஸ்ரோவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குப் பணிபுரிவேன்” என்று கூறி இருக்கிறார் சிவன். அவருக்கு நமது வாழ்த்துகள்!

.

-தினமணி இளைஞர்மணி (16.01.2018)

 

Leave a comment