உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்!

18 Oct

சமுதாயம் வாழ்வதும் வளர்வதும் அதன் உழைப்பின் அடிப்படையில் மட்டுமே. குறிப்பாக உலகுக்கு உணவளிக்கும் விவசாயமும், மானம் காக்கும் நெசவுத் தொழிலும், இருப்பிடம் அமைக்கும் கட்டுமானத் தொழிலும் எந்த ஒரு நாட்டுக்கும் அடிப்படையானவை. இந்த மூன்று அடிப்படைத் தொழில்களுக்கு உறுதுணையாக மண்பாண்டம், மரவேலை, உலோகத் தொழில், பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு, வணிகம், கல்வி என தொழில்கள் பல்கிப் பெருகின.

நாம் இன்று நவீன உலகமாக வளர்ந்திருக்கிறோம். நமது தொழில் துறைகளும் பலவிதமாகப் பெருகி உள்ளன. அறிவியலின் வளர்ச்சியாலும், தொழில்நுட்ப மேம்பாட்டாலும் உலகம் உள்ளங்கைக்குள் சுருங்கிவிட்டது. அதேசமயம், தொழில்வளத்தால் இதுவரை உலகம் கண்டிராத புதுமைகளையும் அற்புத வசதிகளையும் கொண்டவர்களாக நாம் உள்ளோம்.

இந்த நிலையை அடைய மானுட சமுதாயம் பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது. உழைப்பே உயர்வு தரும் என்ற தாரக மந்திரத்துடன் மானுட சமுதாயம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடத்திவந்த தொழில்களின் வளர்ச்சியே நாகரிக மேம்பாட்டின் அடிப்படை.

நமது நாட்டில் தொழில்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கு, அவற்றை தெய்வமாக வணங்கும் பண்பாடே உதாரணம். இங்கு அனைத்துத் தொழில்களின் கடவுளாக விஸ்வகர்மா வழிபடப்படுகிறார்; கலைகளின் தெய்வமாக சரஸ்வதி துதிக்கப்படுகிறார்; தொழிற்கருவிகள் அனைத்தும் ஆயுத பூஜை நன்னாளில் பூஜிக்கப்படுகின்றன. இத்தகைய நிலையை வேறெந்த நாட்டிலும் காண முடியாது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்ட வானுயர் கோபுரங்களுடன் கூடிய கோயில்களும், கற்கோட்டைகளும், சிற்பக் கலைக் கூடங்களும் நமது தொழில் வல்லுநர்கள், கலைஞர்களின் திறனுக்கு சான்று பகர்கின்றன. கோயில்களில் உள்ள உற்சவர் சிலைகளில் காணப்படும் உலோகவியல் தொழில்நுட்பம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்துகிறது. கல்லிலும் காவியம் படைத்த அந்தத் தொழில் வினைஞர்களின் நினைவே பெருமிதம் அளிக்கிறது.

ஆய கலைகள் அறுபத்து நான்கு எனக் கலைகளை வகுத்த பாரம்பரியம் கொண்டது நம் நாடு. அந்தக் கலைகளில் பலவும் தொழில் சார்ந்தவை. கலைகளும் தொழில்களும் மரபு சார்ந்தவையாக வளர்ந்து, இந்தச் சமுதாயத்தை வலுப்படுத்தி இருக்கின்றன. எனினும் காலத்துக்கேற்ப நமது தொழில் வளமும் நடைமுறைகளும் இயல்பாக மாற்றம் கண்டிருக்கின்றன.

காலத்துக்கேற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ளாத சமுதாயமும் நாடும் தேக்கமடைந்து வீழும். வீரியக் கனவுகளுடன் புதிய திசை நோக்கி நடை பயிலும் நாடும் சமுதாயமுமே முன்னேறும். நமது நாடு கடந்து வந்த நாட்களில் அடைந்துள்ள மேம்பாடே, சமுதாயத்தின் புதியன விரும்பும் மனப்பாங்கை வெளிப்படுத்துகிறது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக, தமிழக தவப்புதல்வர் மகாகவி பாரதியின் கவிதை வரிகளை சுட்டிக் காட்டலாம்.

நூறு ஆண்டுகளுக்கு முன் “பாரத தேசம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதை, பாரத தேசம் என்று பெயரைச் சொன்னாலே பகைவர்கள் அஞ்சுவர் என்ற கருத்துடன், நாடு அடையப்போகிற தொழில் வளத்தை தீர்க்க தரிசனமாக உரைக்கிறது.

பட்டினில் ஆடையும் பஞ்சினில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்!
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்!

-என்று அவர் பாடியது, இன்றைய நமது ஜவுளித்தொழில் வளர்ச்சியையும் ஏற்றுமதி உயர்வையும் தானே காட்டுகின்றன?

அடுத்து, ‘ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம், ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்’ என்று பாடும் அவர்,

குடைகள் செய்வோம், 
உழு படைகள் செய்வோம்!
கோணிகள் செய்வோம், 
இரும்பாணிகள் செய்வோம்!
நடையும் பறப்புமுணர் 
வண்டிகள் செய்வோம்!
ஞாலம் நடுங்க வரும்
கப்பல்கள் செய்வோம்!

என்று தொடர்வார். அவரது பார்வையில் இரும்பாணிகள் செய்வதும் கப்பல்கள் செய்வதும் சமமானவை. ஏனெனில் சிறு ஆணியிலிருந்துதான் மிகப் பெரிய கப்பல் உருவாகிறது. குடைகளும் விவசாயக் கருவிகளும் கோணிகளும் கூட அவசியமானவை. எந்தத் தொழிலும் ஒப்புநோக்க கீழானதோ, மேலானதோ அல்ல என்ற பாரதப் பண்பாட்டின் பார்வையையே பாரதி பிரதிபலிக்கிறார்.

தொழில் வளத்துக்குத் தேவையான கல்வியும், வினைத் தந்திரங்களும் முக்கியமானவை. அதற்கும் நமது நாட்டில் குருகுலக் கல்வி முறையில் தகுந்த இடம் அளிக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு அந்தக் கல்வி முறை அருகினாலும், குடும்ப அமைப்பு முறை மூலமாக பல தொழில்கள் இன்றைய தலைமுறை வரை பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. அதேசமயம் நவீனத்தை எதிர்கொள்ளத் தயங்கும் மனநிலை நம்மிடையே இருந்ததில்லை.

அதனால்தான், ‘மந்திரம் கற்போம், வினைத் தந்திரம் கற்போம்; வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்; சந்தி தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்’ என்று பாரதி தனது கவிதையின் அடுத்த வரிகளில் நாட்டின் வளர்ச்சிக்கான அறைகூவலை விடுக்கிறார்.

அவரது பார்வையில், காவியம் செய்வதும் ஒரு தொழிலே. நல்ல காடு வளர்ப்பதும் தொழிலே. கலை வளர்ப்பதும் கொல்லர் உலை வளர்ப்பதும் நல்ல தொழில்களே. ஓவியம் செய்வதும், நல்ல ஊசிகள் செய்வதும் இன்றியமையாத் தொழில்களே. இறுதியாக அவர் ‘உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்’ என்று குறிப்பிடுவது நாம் இன்று அடைந்திருக்கும் மகத்தான உயர்வை அல்லவா கட்டியம் கூறுகிறது!

ஐரோப்பா கண்டத்தில் 500 ஆண்டுகளுக்கு முன் உருவான நவீன அறிவியல் விழிப்புணர்வும், 350 ஆண்டுகளுக்கு முன் உருவான தொழிற்புரட்சியும் இன்றைய உலகைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன. அந்தக் காலகட்டத்தில் நமது நாடு அடிமைப்பட்டிருந்தது. நாம் சுதந்திரம் பெற்ற பிறகு, மிகக் குறுகிய காலத்தில் புதிய உலகின் முன்னேற்றத்துக்குத் தக்கவாறு நம்மைத் தகவமைத்துக் கொண்டிருக்கிறோம். அதன் விளைவாகவே இன்று உலகில் இந்திய தொழில் வல்லுநர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.

முற்காலத்தில் உலகிற்கு பண்பாட்டுச் செழுமையை வாரி வழங்கிய பாரதம், இன்று தொழில் வல்லுநர்களையும், கலைஞர்களையும் திசைதோறும் வழங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆதாரமாக, உந்து விசையாக, கல்வி மற்றும் கலைகளின் கடவுளான வாணியையும் தொழில்களின் ஆதாரமான கருவிகளையும் வழிபடும் தொன்றுதொட்ட பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.

நமது இந்தத் தொழில் பண்பாடு மேலும் சிறந்தோங்கி வளரட்டும். உலகத் தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்! அதன்மூலம் நாமும் உய்வடைந்து உலகையும் உய்விப்போம்!

-தினமணி தொழில்மலர் (கோவை) 18.08.2018

Leave a comment