விடுதலை வீரரின் காவியம்

4 Nov

விடுதலைப் போராட்ட வீரர்களுள் பிற எல்லோரையும் விட கொடிய தண்டனைகளையும் கடும் சித்ரவதைகளையும் பெற்றவர் வீர சாவர்க்கர் என்று அழைக்கப்படும் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883- 1966).

சட்டம் படிக்க லண்டன் சென்ற இடத்தில், ஆங்கிலேய அரசுக்கு எதிராக ‘இந்திய சுதந்திர சங்கம்’ என்ற புரட்சிகர இளைஞர் குழுவைத் திரட்டி, இந்திய சுதந்திரத்துக்காகக் குரல் கொடுத்தவர் அவர். லண்டனில் அவர் தங்கியிருந்த இந்தியா ஹவுஸ் விடுதி விடுதலை வீரர்களின் பாசறையாக விளங்கியது. அங்கு இருந்தவர்தான் தமிழகத்தின் வ.வே.சு.ஐயர்.

அந்த அமைப்பைச் சார்ந்த இளைஞன் மதன்லால் திங்ரா ஆங்கிலேய அதிகாரி கர்ஸான் வில்லியை 1909-இல் லண்டனில் சுட்டுக் கொன்றார். அதன் காரணமாக திங்ரா மரண தண்டனை பெற்றார். அவரைத் தூண்டியதாக கைது செய்யப்பட்ட சாவர்க்கர், இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

இந்தியா வரும் வழியில் கப்பலில் இருந்து குதித்து, கடலில் நீத்தித் தப்பி பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல்ஸில் கரையேறிய சாவர்க்கரை, துரத்திவந்த பிரிட்டீஷ் போலீசார் கைது செய்தனர். வேறொரு நாட்டின் போலீசார் பிரான்ஸ் நாட்டுக்குள் நுழைந்து, அகதியாக அடைக்கலம் கோரி வந்தவரைக் கைது செய்யலாமா என்ற விவாதம் எழுந்தது. அது சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்காக விசாரிக்கப்பட்டது. ஆயினும் அந்த வழக்கில் பிரிட்டீஷ் அரசு வென்றது.இந்த நிகழ்வுகள் அந்நாளில் சர்வதேச அளவில் பெரும் விவாதப் பொருளாகின.

ஏற்கனவே பூனாவில் சாவர்க்கர் துவங்கியிருந்த அபிநவ பாரத இயக்கம் நடத்திய பல வன்முறை நிகழ்வுகளையும், லண்டனில் நிகழ்ந்த ஆங்கிலேய அதிகாரி கொலையையும் விசாரித்த ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், சாவர்க்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை (50 ஆண்டுகள்- 1910- 1960) அளித்து, தீவாந்திர (நாடுகடத்தல்) தண்டனையாக அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அந்தத் தண்டனையை நிறைவேற்ற அந்தமான் தீவுகளுக்கு அவர் நாடு கடத்தப்பட்டார். கொடிய குற்றவாளிகளை மட்டுமே அடைக்கும் செல்லுலர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ராஜதுரோகம், புரட்சியைத் தூண்டியது, ஆயுதங்களைக் கடத்தியது ஆகிய காரணங்கள் அவருக்கு எதிராக வலுவாக இருந்தன.

எனினும் பின்னாளில் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற அவரது போராட்டம், வேண்டுகோள்கள் காரணமாக தண்டனை குறைக்கப்பட்டு, 1921-இல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். இங்கும் ரத்தினகிரி சிறையில் 1924 வரை வைக்கப்பட்டிருந்த அவரை, வெளியுலகத் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் அரசு விடுவித்தது.இவ்வாறாக நாட்டுக்காக சுமார் 14 ஆண்டுகள் அவரது சிறைவாசம் அமைந்தது.

தனது தண்டனைக் காலத்தை, சிறைவாச அனுபவங்களை அவரே பின்னாளில் ’கேசரி’ வார இதழிலும், ’ஷ்ரத்தானந்த்’ என்ற பத்திரிகையிலும் தொடராக எழுதினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 1927இல் எனது அந்தமான் சிறை அனுபவங்கள்’ என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூலின் பல பகுதிகள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இருந்ததால் தடை செய்யப்பட்டது. 1946இல் இந்தத் தடை விலகியது.

அந்த நூல் தற்போது வழக்குரைஞர் எஸ்.ஜி.சூர்யாவால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அழகிய நூலாக கிழக்குப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. நூலின் பல பக்கங்களைப் படிக்கும்போது கண்களில் நீர்திரண்டு படிக்க முடியாமல் செய்து விடுகிறது. எத்தனை வேதனைகள்! எவ்வளவு அவமானங்கள்! கொடுமைகளின் கூடாரமான அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைந்த கஷ்டங்களை அவருள் இருக்கும் எழுத்தாளனும் தத்துவ அறிஞரும், கவிஞரும், அற்புதமான மனிதரும் பல கண்ணோட்டங்களில் காண்பதை அவரது எழுத்தே புலப்படுத்துகிறது.

தனக்கு நேர்ந்த அவலங்களைச் சொல்லிச் செல்கையிலும் கூட சுயகேலியும், நகைச்சுவை உணர்வும் அவரிடம் வெளிப்படுகின்றன. ஆயினும் அவரது அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மை நிலைகுலையச் செய்கின்றன.

சாவர்க்கரின் இரு சகோதரர்களாான கணேஷ் சாவர்க்கரும் நாராயண் சாவர்க்கரும் கூட ஆங்கிலேய அரசின் கொடிய சட்டங்களில் சிக்கி தண்டனை அனுபவித்தவர்களே. கணேஷ் சாவர்க்கர் அந்தமான் சிறையில் தனது தனயன் விநாயக் தாமோதர் சாவர்க்கர் இருந்த அதே காலத்தில் வேறு பகுதியில் சிறையில் இருந்தார். விடுதலைப் போரில் ஈடுபட்டதால் இவர்களது சொத்துகளும் அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களின் குடும்பங்கள் நிர்கதியாகின.

இத்தனைக்கும் பிறகும்கூட, நாட்டு நலனுக்காக சாவர்க்கர் பாடுபட்டார். அரசியலை ஹிந்து மயமாக்க வேண்டும் என்ற ‘ஹிந்துத்துவ’ அரசியல் கோட்பாட்டின் ஆரம்ப மூலவராக சாவர்க்கர் கருதப்படுகிறார். தீண்டாமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம், சமுதாய ஒற்றுமைப் பணிகளில் ஈடுபட்ட அவர் ஹிந்து மகா சபை என்ற கட்சியையும் நிறுவினார்.

பின்னாளில் மகாத்மா காந்தி கொலை வழக்கிலும் (1948) அவர் சுதந்திர இந்திய அரசால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கில் அவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

மகத்தான தியாகியான வீர சாவர்க்கர், இன்றும் சிலரால்- மன்னிப்புக் கடிதம் கொடுத்து அந்தமான் சிறையில் இருந்து வெளியேறியவர், மகாத்மா கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று- நாக்கூசாமல் விமர்சிக்கப்படுவதைக் காண்கிறோம். அதற்கு, அவர் முன்வைத்த ‘ஹிந்துத்துவம்’ கோட்பாடே காரணம். அவர்கள் இந்நூலை ஒருதடவை படிக்க வேண்டும்.

வாழ்வில் இறுதிக்கணத்தைத் தொடும் நேரத்தில்கூட, அடுத்த வேளை என்னவாகுமோ என்ற நிச்சயமற்ற நிலையிலும் கூட உள்ளம் கலங்காமல் இருப்பது என்பது வீரர்களுக்கே உரித்தானது. அவர் சிறைக்குள் சென்றபோது அவரது வயது 25 மட்டுமே. அவர் நினைத்திருந்தால் பாரிஸ்டர் பட்டம் பெற்று வசந்த வாழவில் இன்புற்றிருக்கலாம். ஆனால் நாட்டு விடுதலைக்காக தனது வாழ்வையே அவர் ஈந்தார். ஆங்கிலேயனின் நாட்டிலேயே அவர்களுக்கு எதிராக புரட்சி இயக்கம் நடத்தியதால் தான் கொடூர சித்ரவதைகளுக்கு அவர் ஆளானார். அவரது வாழ்க்கையே சாகசங்கள் நிரம்பியது. இன்றைய காலகட்டத்திலும் கூட அவற்றை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஹென்றி ஷாரியரின் ‘பாப்பிலான்’ (பட்டாம்பூச்சி) புதினத்தை (குமுதத்தில் தொடராக வெளிவந்தது) நாம் பலரும் படித்து மெய் சிலிர்த்திருப்போம். சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ நூலுடன் ஒப்பிட்டால் பாப்பிலான் ஒன்றுமே இல்லை.ஆனால், இந்நூல் தமிழில் வெளிவர இத்தனைக் காலம் ஆகி இருக்கிறது.

நாட்டுக்காக வாழ்ந்தவர்கள் சாவதில்லை. அவர்கள் அமரத்துவ ஆன்மாக்கள். சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அரசியல் அரங்கில் கேட்கின்றன். அரசால் அறிவிக்கப்படாவிட்டாலும் அவர் என்றும் பாரதத்தின் ரத்தினம் தான்.

இந்நூல் சுயசரிதை மட்டுமல்ல, ஒரு காலகட்டத்தின் மறைக்கப்பட்ட வரலாறு.சும்மா வரவில்லை சுதந்திரம் என்பதற்கான ஆவணம்.இந்த நூல், இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.

***

அந்தமான் சிறை அனுபவங்கள்

சாவர்க்கர்

தமிழில் எஸ்.ஜி.சூர்யா.

632 பக்கங்கள்; விலை: ரூ. 650.

வெளியீடு:

கிழக்கு பதிப்பகம்,

177/103, முதல் தளம்

அம்பாள் பில்டிங்,

லாயிட்ஸ் சாலை,

ராயப்பேட்டை,

சென்னை– 600 014

போன்: 044-4200 9603

 

Leave a comment