அரசியல்வாதி

21 May

அவன் தான் அரசியல்வாதி- அட
அவனது நெஞ்சம் முழுவதும் வஞ்சம்!

கொள்கைகள் பற்பல சொல்வான்- பின்
கொள்ளையடித்திட நோட்டம் விடுப்பான்!
பில்லி சூனியம் இன்றி – தன்
பின்னே மக்களை பொய்யினில் வெல்வான்!

சாதியில் வேற்றுமை சொல்லி – பெருஞ்
சண்டைகள் மூண்டிட கண்டு களிப்பான்!
வீதியில் சென்றிடக் கூட – கீழ்
விரித்திட மலர்களை வாரி இறைப்பான்!

பல நிறமாய் ஒரு துண்டு – அது
பலமுறை பற்பல வகையினில் மாறும்!
ஊழலதே அவன் மூச்சு – வெறும்
ஊகமதே அவன் பேச்சென நாறும்!

துரோகம் செய்திட விழைவான் – அவன்
துணையாய் சென்றிட துயரம் சேரும்!
பாகம் பிரித்திடுவானே- லஞ்சப்
பணத்திலும் பங்குக்கு மோசடி செய்வான்!

ஊர்தொறும் முழங்கிடுவானே- பல
ஊரிலும் கூத்திகள் கொண்டிருப்பானே!
காரியம் ஆகிற வரையில் – நம்
காலைப் பிடித்துடன் வாரியும் விடுவான்!

கொலைகளும் மறைவாய்ச் செய்வான்- நற்
கொற்றவனென்று பேசித் திரிவான்!
அலைகிற நெஞ்சம் கொண்டான் – பெரும்
ஆசையினாலே சொத்துகள் சேர்ப்பான்!

பாடையில் போகிற வரைக்கும் -அவன்
பாவம் செய்திட விழைகிற பாவி!
மேடையில் ஊர்ந்திடும் ஜந்து -மிக
மேன்மைகள் கண்டிட காரணம் யாரோ?

 

குறிப்பு: சொந்த அனுபவமே கவிதை ஆகிறது என்பதற்கு இக்கவிதை நல்ல எ.டு.
எழுதிய நாள்: 07.05.1994

Leave a comment