சுவாமி விவேகானந்தரின் வலதுகை

19 Jan

 

சுவாமி விவேகானந்தரின் உரைகள் அனைத்தும் நூலாகத் தொகுக்கப்பட்டு விவேகானந்த இலக்கியம் என்று அவைக்கப்படுகின்றன. அதற்கு அடிப்படைக் காரணமானவர், அப்பணியை சிரமேற்கொண்ட பத்திரிகையாளர் ஜே.ஜே.குட்வின். அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுக வரலாறே இந்நூல்.

1893 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவின் சிகாகோவில் நிகழ்ந்த சர்வ சமயப் பேரவையில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைக்குப் பிறகு உலகப்புகழ் பெற்றவரானார். அதன்பிறகு பல நாடுகளில் ஆன்மிகப் பிரசாரம் செய்தார். கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் பாலமாக பாரத ஆன்மிகத் தத்துவ சாரத்தை, தனது கம்பீரமான இனிய ஆங்கிலத்தில் சுவாமி விவேகானந்தர் உரைத்தபோது, அதன் சிறப்பு புரிந்தது.

சுவாமிஜியின் அதிவேகமான உரையைத் தொகுக்க வேண்டுமென்ற எண்ணம் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் வேதாந்த சங்கத்துக்குத் தோன்றியபோது, அவர்கள் 1895-இல் வெளியிட்ட பத்திரிகை விளம்பரத்தால் கிடைத்த இளைஞர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோசையா ஜான் குட்வின்.

ஆன்மிகத் தேடலும் பரந்த மனப்பான்மையும் கொண்டவராக விளங்கிய குட்வின் பத்திரிகை நிருபர், சுருக்கெழுத்தர் என்ற சிறப்பம்சங்களையும் கொண்டிருந்தார். தவிர சுவாமி விவேகானந்தரின் பயணங்களில் உடன் சென்ற அனுபவங்களால் அவரது பேரன்புக்குப் பாத்திரமான அவர் விரைவிலேயே பிரம்மச்சரிய தீட்சை பெற்று சீடராகவும் ஆனார்.

1895 முதல் 1898 வரையிலான மூன்று ஆண்டுகளில் சுவாமி விவேகானந்தரின் ஆன்மிக உரைப்பெருக்கு பேரளவில் இருந்தது. குட்வினின் தேர்ந்த உழைப்பால், பல வெளிநாடுகளில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரைகள் முழுமையாகவும், பொருள் பிறழாதவையாகவும் நமக்குக் கிடைத்தன. எனவேதான் ‘சுவாமி விவேகானந்தரின் வலதுகை’ என்று அவரைச் செல்லமாகக் கூறுவர். சுவாமிஜியே அவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும், இளம் வயதிலேயே குட்வினை காலன் அழைத்துக் கொண்டுவிட்டான். தமிழகத்தின் உதகையில் 1898 ஜூன் 2}இல் உடல்நலக்குறைவால் அவர் காலமானபோது வயது 28 மட்டுமே. குட்வினின் உடல் அடக்கம் செய்யப்பட்ட உதகை புனித தாமஸ் தேவாலய வளாகத்தில் அவருக்கு நினைவுச்சின்னம் இருக்கிறது.

குட்வினின் இளமைப்பருவம், சுவாமி விவேகானந்தரிடம் சுருக்கெழுத்து உதவியாளராகச் சேர்ந்தது, அவரது அணுக்கத் தொண்டராக மாறியது, ராமகிருஷ்ணர் இயக்கத்தில் அவரது பணிகள், இறுதி நாட்கள், அவரது மறைவால் வருந்திய விவேகானந்தரின் வேதனை, சுவாமிஜியின் இரங்கல் கவிதை, முக்கியமான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை மிகவும் சிரமப்பட்டுத் தொகுத்த நூலாசிரியரின் பக்திப்பூர்வமான முயற்சி இந்நூலில் வெளிப்படுகிறது.

“வரம்பு கடந்த பேரன்பு வாழும் இதயம் உன்வீடு” என்ற சுவாமி விவேகானந்தரின் அஞ்சலிக் கவிதை வரிகள், குட்வினின் அர்ப்பண வாழ்வை அற்புதமாக விளக்குகின்றன.

***

குருபக்தி மிக்க குட்வின்

(சுவாமி விவேகானந்தரின் வலதுகை)

-நாரை. ச.நெல்லையப்பன்

102 பக்கங்கள், விலை: ரூ. 70-
வெளியீடு: ராமகிருஷ்ண மடம்,
ராமகிருஷ்ணபுரம்,
ஊட்டி, நீலகிரி மாவட்டம்,
தொலைபேசி எண்: 0423- 244 3150

 

-தினமணி- நூல் அரங்கம் (18.01.2021)

Leave a comment