வையத்தலைமை கொள்!

15 Dec

பல்லவி

வல்லமை பெற்றிடுவோம் – பாரில்

வல்லரசாய் எழுவோம்!

நல்லவை புவியில் நிலைத்திட வேண்டின்

நல்லரசாய் அமைவோம்!

 

அனுபல்லவி

அல்லவை நீக்கிடுவோம் – பாரில்

அறத்தை நாட் டிடுவோம்!

நல்லவை புவியில் நிலைத்திட வேண்டின்

வல்லரசாய் எழுவோம்!

(வல்லமை பெற்றிடுவோம்!)

சரணங்கள்

எண்களை உலகினுக்கே – தந்து

ஏற்றம் அமைத்தவர் நாம்!

விண்ணியல் விதிகளையும் – தந்து

விதியினைச் சமைத்தவர் நாம்! 1

கலகம் இல்லாது – மக்கள்

களிப்பாய் வாழ்ந்திடவே

‘உலகம் ஒருகுடும்பம்’ – என

உரைத்த தேசம் இது! 2

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

அன்பினை தவமெனவே – கொண்ட

அருட்கடல் புத்தனையே,

வன்மை தவிர்த்திடவே – உலகின்

வளமெனத் தந்தவர் நாம்! 3

பலமொழி பேசிடுவோர்- ஒன்றாய்ப்

பரவிய பெருமையுடன்,

உலகப் பொதுமறையாம்- குறள்

உரைத்தவர் தேசம் இது! 4

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

மறவழி தவிர்த்திடவே – அஹிம்சை

மரபினில் திளைத்தவர் நாம்!

அறவழி ஆயுதத்தை – வலிய

அரணென விளைத்தவர் நாம்! 5

வாழ்வின் பூரணத்தைக் கதையாய்

வழங்கும் காவியங்கள்

சூழ்கடல் உலகினுக்கே தந்து

சுடர்ந்திடும் நாடு இது! 6

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

அறம்,பொருள், இன்பமென – வீட்டை

அடையும் வழிமுறையை,

துறவினைப் பெருமையென – கொண்ட

தூய்மையின் மைந்தர்கள் நாம்! 7

பதினெண் புராணங்களும் – சங்கப்

பைந்தமிழ் இலக்கியமும்

நிதியென வேதங்களும் – நித்தம்

நிலைத்திடும் நாடு இது! 8

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

பல்கலை வளர்த்தவர்நாம் – மிகப்

பழமையின் காவலர் நாம்!

இல்லற வாழ்வியலை – ஈந்த

இன்புறு மானுடர் நாம்! 9

நலமுறத் திகழ்ந்திடவே – அரும்

நல்லுயிர் போற்றிடவே

பொலிவுறு யோகமுறை தனை

போதித்த நாடு இது! 10

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

வற்றா ஜீவநதி போன்ற

வளம்மிகு பண்பாட்டை

கற்றவர் போற்றுகிறார் – அதன்

காரணம் ஆனவர் நாம்! 11

தத்தம் வழிகளிலே சென்றால்

தாமே உய்ந்திடலாம்!

உத்தம மதங்கள்பல – இதனை

உரைத்தநல் தேசம் இது! 12

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

வானுயர் ஆலயங்கள்- மலையில்

வடித்தபல் குடைவரைகள்!

கானுயர் வனத்தொகைகள் கொண்ட

கவின்மிகு நாட்டவர் நாம்! 13

எல்லையை மீறாத – யாரையும்

எதிரியாய்க் கருதாத,

நல்லவர் போற்றுகிற தேசம்

நலந்திகழ் பாரதமே! 14

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

வித்தகப் பெரும்புகழும் – கலைகள்

விளைந்த நற்குணமும்

அத்தனை நற்பதமும் – நமக்கு

அமைந்தது திருவருளே! 15

இத்தனை அரும்பொருளும் – உலகிற்

கீந்திட வேண்டாமா?

தத்தம் அளித்திடவே – வையத்

தலைமையை ஏற்றிடுவோம்! 16

(வல்லமை பெற்றிடுவோம்!)

 

குறிப்பு:

வானவில் பண்பாட்டு மையம் நடத்திய பாரதி விழா- 2021 கவிதைப் போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை இது.

அவர்களால் தேர்வு செய்யப்படாத கவிதை.


Leave a comment