மாநில தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க வேண்டும்!

9 Jan

நாடு முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் காக்க, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் (நேஷனல் கமிஷன் ஃபார் சஃபாய் கரம்சாரிஸ் – என்சிஎஸ்கே) செயல்பட்டு வருகிறது.

இதுவரை பெயரளவில் இயங்கிவந்த இந்த ஆணையத்தை, தனது இடைவிடாத கள ஆய்வுகளால் ஆக்கபூர்வமான செயல்தளம் ஆக்கியிருக்கிறார், இதன் தலைவராக உள்ள தமிழகத்தைச் சார்ந்த சமூக சேவகரும் எழுத்தாளருமான ம.வெங்கடேசன்.

அண்மையில் ஆய்வுப் பயணமாக தருமபுரி வந்த அவருடனான உரையாடலிலிருந்து…

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் எவ்வாறு இயங்குகிறது?

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் ஓர் அரசியல் சாசன அமைப்பு. 1993ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய சஃபாய் கரம்சாரி ஆணையச் சட்டத்தின்படி, 1994ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையம் இயங்கி வருகிறது.

நாடு முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர்களின் நலன், கௌரவம், வாழ்வாதாரம் ஆகியவற்றைக் காப்பதே ஆணையத்தின் பணி. இந்த ஆணையத்தின் தலைவர் பதவி, மத்திய இணை அமைச்சருக்கு இணையானது. இதன் துணைத் தலைவர், 5 உறுப்பினர்கள் ஆகியோர் மத்திய அரசுச் செயலருக்கு இணையானவர்கள். மத்திய, மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு, துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்குவதே ஆணையத்தின் நோக்கம்.

நாடு முழுவதும் பயணித்து, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை அறிந்து, அவர்களின் நலம் காக்கத் தேவையான பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு அளிப்பது ஆணையத்தின் செயல்முறை. துப்புரவுத் தொழிலாளர்களின் புகார்களை விசாரிப்பது, விபத்துகளில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு உதவுவது, விதிமீறல்களின்போது எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுவது ஆகியனவும் இதன் பணிகள்.

இதில் எவ்வாறு தலைவராகப் பொறுப்பேற்றீர்கள்?

அடிப்படையில் நான் சமூக சேவகன். தவிர, பாஜகவிலும் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டிருக்கிறேன். வரலாற்று ஆய்வாளராக பல நூல்களை எழுதி இருக்கிறேன். அந்த அடிப்படையில், தற்போதைய மத்திய அரசு என்னை தலைவராக நியமித்துள்ளது.

2021 பிப். 16 இல் ஆணையத் தலைவராகப் பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு, வட மாநிலங்களைச் சார்ந்தவர்களே ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டு வந்தனர். அவர்களது கவனம் வட மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்தது. முந்தைய ஆட்சிக் காலங்களில் இந்த அமைப்பு பெயரளவிலான கெüரவ அமைப்பாக இருந்ததும் உண்டு. நான் பொறுப்பேற்றதும், ஆணையத் தலைவருக்கு உரிய அதிகாரங்களின் அடிப்படையில், நாடு முழுவதும் மாவட்டவாரியாக ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறேன்.

இதுவரை 20 மாநிலங்களில் கள ஆய்வுகளை நடத்தியுள்ளேன். அனைத்து மாநில அரசுகளும் எங்களுக்குப் போதிய வசதிகளை செய்து கொடுக்கின்றன. இந்த ஆய்வுகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து அதிகாரிகளும் கலந்துகொள்வதால், துப்புரவுப் பணியாளர்களின் பிரச்னைகளை அரசு நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்தி தீர்வு காண முடிகிறது.

தூய்மைத் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன?

நாம் அனைவரும் சுகாதாரமாக வாழ வழிவகுப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள். அரசு நிறுவனங்கள், உள்ளாட்சிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் இவர்களது துப்புரவுப் பணியால்தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடிகிறது. ஆனால் இவர்களது வாழ்க்கைத் தரம் நல்ல நிலையில் இல்லை.

பெரும்பாலான தூய்மைத் தொழிலாளர்கள், வருங்கால வைப்பு நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்பு வசதிகளோ, பணிப் பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், சமுதாய கௌரவம், வார விடுமுறை போன்ற அடிப்படை அம்சங்களோ இல்லாமல்தான் பணிபுரிகின்றனர்.

ஒப்பந்தப் பணி, குறைந்த ஊதியம், அதிக நேர வேலை, சுகாதாரமற்ற பணிச்சூழல், ஆரோக்கியக் குறைபாடு, ஜாதி பாகுபாடு, உழைப்புச் சுரண்டல், பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்னைகளால் இவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச தினசரிக் கூலிகூட இன்றி, பலர் ரூ. 150 மட்டுமே கூலியாகப் பெறுகின்றனர். இதிலும் பல மாதங்கள் நிலுவை வைத்துள்ளனர். தங்கள் உரிமைகளுக்கு உரக்கக் குரல் கொடுக்கும் நிலையிலும் இவர்கள் இல்லை.

இந்தப் பிரச்னைகள் அனைத்தையும் ஆணையத்தால் தீர்க்க முடிகிறதா?

எங்களது கள ஆய்வுகள் மூலமாக, இந்தத் தொழிலாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி, அரசு நிர்வாகத்தால் இயன்ற உதவிகளைச் செய்ய முனைகிறோம். எனினும் இந்தப் பணியில் நாம் இன்னமும் அதிக தொலைவு செல்ல வேண்டியுள்ளது.

எங்கள் முயற்சிகளில் 10 சதவீதம் தான் முழுமையான பயன் தருகிறது. ஏனெனில் இது முழுவதும் பல அரசுத் துறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த பணி. நாங்கள் மத்திய அரசின் பிரதிநிதிகள் மட்டுமே. எங்களால், பணியாளர்களின் பிரச்னைகளுக்கு நேரடியாகத் தீர்வு காண முடியாது. தவிர, எந்த ஒரு பிரச்னை குறித்தும் தொடர்ந்து கண்காணிக்கவும் எங்களால் இயலாது. எனவேதான் மாநில அளவிலான தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

இதுவரை ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் மாநில தூய்மைப் பணியாளர் ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கர்நாடக மாநில ஆணையம் மிகச் சிறப்பாக இயங்குகிறது.

தூய்மைப் பணியாளர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு ஆணையம் செய்யும் பணிகள் என்ன?

நாடு முழுவதிலும் பதிவு செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 7 லட்சம் மட்டுமே. நமது நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் இந்தப் புள்ளிவிவரத்தின் அபத்தம் புரியும். தூய்மைப்பணி ஒப்பந்தமயமாக்கப்படுவதன் விபரீத விளைவு இது. எனவேதான், ஒப்பந்த முறை தவிர்க்கப்பட்டு, நிரந்தரப் பணியாளர்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று ஆணையம் அறிவுறுத்தி வருகிறது.

இந்தப் பணியிலிருந்து பல காரணங்களால் வெளியேறும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதும் அரசின் கடமை. சில மாநிலங்களில் தூய்மைப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டு, தொழில் முதலீட்டுக் கடனுதவி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

பணியின்போது இறக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஈட்டுத்தொகை அளிப்பதும் அவசியம். இதற்கான பரிந்துரைகளை மாநில அரசுகளுக்கு ஆணையம் அளிக்கிறது. இந்த 10 மாதங்களில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு சுமார் ரூ. 2 கோடி ஈட்டுத்தொகை பெற்றுத் தந்துள்ளேன். எங்கள் எல்லைக்கு உட்பட்டு தீவிரமான முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.

தூய்மைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு, உதவித்தொகை ஆகியவற்றை அளிப்பதும் முக்கியம். இவை அனைத்தும், துப்புரவுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும்போது மட்டுமே சாத்தியமாகும்.

அரசியல் சாசனத்தின்படி சுகாதாரத் துறை மாநில அரசுப் பட்டியலில் வருகிறது. எனவே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டியது மாநில அரசுகளின் கடமை.

தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் நிலை எவ்வாறு உள்ளது?

தேசிய அளவில் பார்க்கும்போது தமிழகத்தில் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத் தரம் மெச்சும்படியாக இல்லை. பெரும்பாலான உள்ளாட்சிகளில் தூய்மைப் பணி, குறைந்த ஊதியம் அளிக்கும் ஒப்பந்தத் தொழிலாகிவிட்டது. சில இடங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பெயரில் இவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது.

புதிய பணியாளர்களை நியமித்தால் அதிகச் செலவாகும் என்று காரணம் கூறுவோர், தூய்மைப் பணியாளர்களின் அவல நிலை குறித்து சற்றே சிந்திக்க வேண்டும். இந்தப் பணியில் ஈடுபடுவோரில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பட்டியலினத்தவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஒருமைப்பாடு மற்றும் பாகுபாடற்ற வளர்ச்சிக்கு இந்தத் தொழிலாளர்களின் மேம்பாடு இன்றியமையாதது. இதனை உறுதிப்படுத்த, தமிழகத்தில் மாநில தூய்மைப் பணியாளர் ஆணையம், தூய்மைப் பணியாளர் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றை மாநில அரசு அமைக்க வேண்டும். இதன்மூலமாக, உள்ளூர்த் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் குறித்து மாநில அரசே கவனம் செலுத்த முடியும். இதனை தேசிய ஆணையம் கண்காணித்து வழிநடத்தினால் போதும். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.

-தினமணி- ஞாயிறு கொண்டாட்டம் (09.01.2022)

Leave a comment