மகர சங்கராந்தியும் பொங்கல் விழாவும்…

13 Jan

பொங்குக பொங்கல்!

தமிழகத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, நாடு முழுவதும் ‘மகர சங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பாரதக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட தெற்காசிய நாடுகளிலும் கூட இவ்விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, இந்த உலகை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாகவும் இருக்கிறது. கதிரவனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விழா நமது முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரிய வழிபாடு நமதுநாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருவதாகும். நாட்டின் பல இடங்களில் பழமையான சூரியன் கோவில்கள் இன்றும் உள்ளன. ஆதிசங்கரர் நிறுவிய ஷண்மத வழிபாட்டில் சூரிய வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட ‘சௌரம்’ உள்ளது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம் ‘ஞாயிறு போற்றுதும்’ என்று துவங்குவதில் இருந்தே அக்காலத்தில் சூரிய வழிபாட்டின் தாக்கத்தை உணர முடியும். உண்மையில், சூரியனின் இயக்கத்தில் ஏற்படும் வருடாந்திர மாற்றத்தை வரவேற்று உருவானது தான் மகர சங்கராந்தியும் பொங்கல் பண்டிகையும்.

விஞ்ஞான விளக்கம்:

நாம் வாழும் பூமி 23 பாகைக் கோணத்தில் தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவருவதை நாம் அறிவோம். அதேபோல சூரியனும் ஏதோ ஒரு மையசக்தியைச் சுற்றுகிறது. இதுவே பிரபஞ்சம்.

பூமி சூரியனைச் சுற்றிவர 365.5 நாட்கள்- ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில், சூரியனின் பார்வை பூமியின் வட பகுதியிலும் தென்பகுதியிலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை திசை மாறுகிறது. இதனை அயனம் என்பர்.

அதாவது, பூமியின் தென்பகுதியில் சூரியனின் பார்வை இருப்பது தட்சிணாயனம் எனப்படுகிறது. ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்களும் தட்சிணாயனம் எனப்படுகின்றன. இக்காலத்தில் சூரியனின் கதிர்வீச்சும் பகல் பொழுதும் குறையும்; குளிர்ச்சி அதிகரிக்கும். இந்நிலை தைமாதம் மாறுகிறது. தை முதல் ஆனி வரையிலான ஆறு மாதங்கள் பகல் பொழுதும் உஷ்ணமும் அதிகரிக்கும் உத்தராயணம் எனப்படுகின்றன.

சூரியக் கதிர்களின் ஆற்றல் அதிகரிப்பால் மந்தநிலை மாறி உலகம் உவகை கொள்கிறது.   ‘பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்; புன்மை இருட்கணம் போயின யாவும்’ என்று பாடுவார் மகாகவி பாரதி.

‘சங்கரணம்’ என்றால் சமஸ்கிருதத்தில் நகர்தல் என்று பொருள். உலக உயிர்களை இயக்கும் சூரியனின் திசைமாற்றத்தால் தைமாதம் ஏற்படும் பெரும் நிகழ்வே மகர சங்கராந்தி. வான மண்டலத்தை நமது முன்னோர் 12 ராசிகளாகப் பகுத்துள்ளனர். இதில் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு சூரியன் இடம்பெயர்வதே ‘மகர சங்கராந்தி’ ஆகும்.

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றாலும், தட்சிணாயன காலத்தில் தெற்கு திசை சார்ந்தும், உத்தராயண காலத்தில் வடக்கு திசை சார்ந்தும் உதிப்பதை, உன்னிப்பாகக் கவனித்தால் உணர முடியும். சூரியனின் இந்த திசைமாற்றமே நம்மால் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.

சமய விளக்கம்:

இதில் தட்சிணாயன காலமான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். உத்தராயண காலமான ஆறு மாதங்களும் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். அதாவது மனிதர்களின் ஓராண்டு காலம் தேவர்களுக்கு ஒரு நாளாகிறது. அதிலும், தேவர்கள் துயிலெழும் நேரமே தை மாதமாகும். எனவே தான் இம்மாதத்தின் துவக்க நாள் புனிதம் பெறுகிறது.

உத்தராயண காலமே புண்ணியகாலம் என்று புராண நூல்கள் போற்றுகின்றன. பாரதப் போரில் படுகாயமுற்ற பீஷ்மர், உத்தராயண காலம் வரும்வரை உயிர் துறக்காமல் காத்திருந்ததை மகாபாரதக் கதையில் அறிகிறோம்.

பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கும்பமேளா, மகர சங்கராந்தியில் தான் துவங்குகிறது. ஆடிப்பட்டம் தேடி விதைத்து, நீர் பாய்ச்சி, களையெடுத்து சாகுபடி செய்த பயிரினங்களை அறுவடை செய்யும் காலம் தை மாதம். ஆகவே, விவசாயத்தின் ஆணிவேராக உள்ள சூரியனின் கதிர்களுக்கு நன்றி கூறும் நாளாக, அறுவடைத் திருநாளாக மகர சங்கராந்தி அனுசரிக்கப்படுகிறது.

தைமுதல் நாளே மகர சங்கராந்தி. அந்நாளில் தான் புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்குப் படையலிட்டு வணங்குகிறோம். கூடவே, சூரியனின் ஆற்றல் மிகுந்த மஞ்சள், கரும்பு ஆகியவற்றையும் படையலிட்டு பூஜிக்கிறோம்.

வழிபடு முறைகளில் வேறுபாடு:

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களில் இப்பண்டிகை மகர சங்கராந்தி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.

குஜராத்தில் இப்பண்டிகையின் பெயர் ‘உத்ராயண்’. ராஜஸ்தானில் ‘மகர் சக்ராத்’, பஞ்சாபில் ‘லோஹ்ரி’, இமாச்சலில் ‘மகா சாஜா’, மேற்கு வங்கத்தில் ‘பௌஸ் சங்கராந்தி’, ஹரியானாவில் ‘மாகி’ என்ற பெயர்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

குஜராத்தில் உத்ராயண் பண்டிகையின் முக்கிய அம்சம், பட்டம் பறக்கவிடும் போட்டியாகும். அண்மைக்காலமாக இந்நிகழ்வு உலக அளவில் பிரபலமடைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

அண்டை மாநிலமான கேரளம், சபரிமலை ஐயப்பன் கோவிலால் அனைவரையும் கவர்கிறது. அங்கு மகர சங்கராந்தியன்று நிகழும் மகரவிளக்கு திருவிழா பிரசித்தி பெற்றது.

பிகாரில் எள்ளுருண்டையைப் படையலிட்டுப் பூஜித்து, அனைவருக்கும் வழங்கி மகிழ்கின்றனர். இதன்காரணமாக இப்பண்டிகை அங்கு ‘தில் சங்கராந்தி’ என்று பெயர் பெற்றுள்ளது (தில் என்றால் இந்தியில் எள் என்று பொருள்).

மத்தியப் பிரதேசத்தில் இனிப்புப் பதார்த்தங்களை ஒருவருக்கொருவர் வழங்கி மகிழ்வர். இங்கு ‘சகராத்’ என்று இப்பண்டிகை பெயர் பெறுகிறது. அசாமில் இப்பண்டிகையை ‘போகாலி பிகு’ என்ற பெயரில் அனுஷ்டிக்கிறார்கள்.

நான்கு நாள் வழிபாடு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 4 நாள் வழிபாடாகும். மார்கழி கடைசிநாளில் போகிப் பண்டிகையுடன் பொங்கல் விழா துவங்குகிறது. அன்று பழையன கழித்து புதியன விரும்பும் குறியீடாக, இல்லங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, உபயோகமற்ற பொருட்கள் எரிக்கப்படுகின்றன; மங்கலச் சின்னமான பூளைப்பூ, ஆவாரம்பூ, மாவிலை, வேப்பிலைக் கொத்துகளால் வீடுகள் அலங்கரிக்கப்படுகின்றன.

தை முதல் நாள், கதிரவனுக்கு நன்றி கூறி வணங்கும் பொங்கல் திருநாள். தை இரண்டாம் நாள், விவசாயத்தின் உயிர்நாடியான பசுக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை 3-ஆம் நாள் கன்னிப் பெண்கள் நல்ல மணாளனுக்காகப் பிராத்திக்கும் காணும் பொங்கல். சகோதரர்களின் நலனுக்காகவும் பெண்கள் அன்று விரதம் இருந்து வழிபடுவர்.

இதே வரிசைமுறையை பல்வேறு மாநிலங்களிலும் காண முடிகிறது. போகி, சங்கராந்தி, காணுமு, முக்காணுமு என்ற பெயர்களில் ஆந்திரத்தில் 4 நாள் திருவிழாவாக இப்பண்டிகை அமைந்துள்ளது.

தாய்லாந்து நாட்டில் ‘சொங்க்ரான்’ என்ற பெயரிலும், லாவோஸில் ‘பிம லாவோ’ என்ற பெயரிலும், மியான்மரில் ‘திங்க்யான்’ என்ற பெயரிலும், நேபாளத்தில் ‘மாகே சங்கராந்தி’ என்ற பெயரிலும், இலங்கையில் புத்தாண்டாகவும் இப்பண்டிகையைக் கொண்டாடி அந்தந்த நாடுகளின் மக்கள் மகிழ்கிறார்கள்.

இவ்வாறாக, தேச எல்லை கடந்தும் கொண்டாடப்படும் மகர சங்கராந்தி திருவிழா, நமது நாட்டின் இயல்பான ஆன்மிக ஒருமைப்பாட்டின் சின்னமாகத் திகழ்கிறது. சர்க்கரையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் இனிப்பே அதன் குணம் என்பதுபோல, பொங்கலை எப்பெயரிட்டு அழைத்தாலும் அதன் சுவை குறையாது அல்லவா?

(பொங்கல் திருநாள்- 2014 சிறப்பிதழ்- கோவை)
.

Leave a comment