பண்பாட்டின் அடிச்சுவடு ஏறுதழுவல்

14 Jan

தமிழ்ப் பண்பாட்டில்  ‘ஏறு தழுவல’ எனப்படும் ஜல்லிக்கட்டுக்கு முதன்மையான இடமுண்டு. அறுவடைத் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, நமது சமுதாயத்தின் வீரத்தையும், கால்நடைச் செல்வத்தின் சிறப்பையும் ஒருங்கே வலுப்படுத்துவதாகத் திகழ்கிறது.

விவசாயமே உலகின் முதுகெலும்பு. விவசாயத்தின் ஆதாரம் கதிரவன். எனவேதான் தை முதல்நாளில் அறுவடையான பயிர்களைப் படைத்து, கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு மகிழ்கிறோம்.

அதுபோலவே விவசாயிகளுக்கு நண்பனாகத் திகழ்வது கால்நடைச் செல்வமே. அதற்காகவே தை இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கலிட்டு, மாடுகளுக்கு நன்றி செலுத்துகிறோம். தை மூன்றாம் நாளில் பெண் குழந்தைகளும் இளம்பெண்களும் கன்னிப் பொங்கலிட்டு பாவை நோன்பை நிறைவு செய்வர். கூடவே பல இடங்களில் மஞ்சுவிரட்டு எனப்படும் ஏறுதழுவல் நடைபெறுவது பாரம்பரிய நிகழ்வாகும்.

இந்த வரிசைக்கிரமமான விழா ஏற்பாடு என்று தோன்றியதென்று அறியாத அளவில் நீண்டகாலமாக தமிழகத்தில் நிலவி வந்துள்ளது. பண்டிகைகள் மக்களின் அன்றாட வாழ்வின் அலுப்பிலிருந்து சிறு இடைவேளையையும் இன்பத்தையும் நல்கவே அமைக்கப்பட்டன. அதிலும்கூட நன்றியுடைமையை வெளிப்படுத்தும் விதமாக தைப்பொங்கல் வழிபாடுகள் திகழ்வது, தமிழரின் பண்பாட்டுச் செழுமையை வெளிப்படுத்துகிறது.

தைப்பொங்கலிட்டு முடிந்ததும், வாடிவாசலில் காளைகளை அடக்க முறுக்கேறிய இளைஞர் பட்டாளம் கிளம்பும். அதற்காகவே தொடர் பயிற்சி செய்து, விரதமிருந்து உள்ளத் தூய்மை, உடல் வலிமையுடன் இளங்காளைகளென இளைஞர்கள் திரள்வர். மறுபுறம், ஆண்டு முழுவதும் போஷித்து வளர்க்கப்படும் திணவேறிய காளைகளுடன் மாடு வளர்ப்போரும் காத்திருப்பர்.

சீறிப் பாயும் காளைகளை துணிவுடன் எதிர்கொள்ளும் இளைஞர்களின் சாகசம் காண ஆயிரக் கணக்கான மக்கள் திரள்வதே கண்கொள்ளாக் காட்சி. காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகளும் புகழ்மாலையும் கிடைக்கும். அடக்க முடியாத காளைகளுக்கும் பரிசுகள் உண்டு.

அடிப்படையில், ஏறு தழுவல் என்பது முல்லைத்தின மக்களான ஆயர்களின் வீர விளையாட்டு. ஏறு தழுவி வெல்லும் இளைஞனுக்கே ஆயரின இளம்பெண் மாலை சூடுவாள். இதுதொடர்பாக, சங்க இலக்கியமான கலித்தொகையில்,  “கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாலே ஆயமகள்” என்று பாடுகிறது.

மகாபாரதத்திலும் பாகவதத்திலும் கூட ஏறுதழுவல் குறித்த காட்சிகள் உண்டு. சிந்துச் சமவெளியில் கிடைத்த  ‘காளையை அடக்கும் வீரன்’முத்திரை, ஏறு தழுவல் நாடு முழுவதும் பரவியிருந்ததற்கு சான்று பகர்கிறது. தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனின் கருத்துப்படி, பொது யுகம் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே ஏறுதழுவல் நடந்துள்ளது.

தமிழகத்தில் பிற்காலத்தில் இந்த வீர விளையாட்டு அனைத்து மக்களும் பங்கேற்கும் விழாவாக மாறியது. விவசாயிகளின் தோழனான காளைகளை கௌரவிப்பதாக, ஏறு தழுவல் எனப்படும் ஜல்லிக்கட்டு பிரபலமடைந்தது. எனினும் கால்நடைகள் ஜல்லிக்கட்டில் வதைக்கப்படுவதாக தவறான பிரசாரம் செய்யப்பட்டதால், ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் இதற்கு தடைவிதித்தது. ஆயினும் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் புதிய சட்டம் உருவாக்கப்பட்டு சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு தாமதமாக நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் புகார்கள், அதன் விதிகளை அறியாதவர்களால் பரப்பப்பட்டவை. எனினும், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்பமுறுவதைத் தடுக்க, 2009-இல் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டத்தை மாநில அரசு இயற்றியுள்ளது.

உண்மையில் நாட்டுக் காளையினங்களின் பாதுகாப்புக்கு ஜல்லிக்கட்டு பேருதவி புரிகிறது. மிகவும் கவனமாகவும், சத்துள்ள தீவனங்கள் கொடுத்தும் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் நாட்டுக் காளையின மாடுகள் மூலமாக, நாட்டு மாடுகளின் இனவிருத்தி சாத்தியமாகிறது. அதனால் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கிறது.

தமிழகத்தின் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், சிராவயல், நார்த்தாமலை உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டுக் காண மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கால்நடைச் செல்வத்தின் பாரம்பரியத்தைக் காக்கவும், உடல் வலிமை மிகுந்த இளைஞர்களின் வீரத்தை வெளிப்படுத்தவும் வாய்ப்பளிக்கும் ஏறுதழுவல் மூலமாக, தமிழரின் பாரம்பரியச் சிறப்பு வெளிப்படுகிறது.

இந்த ஆண்டு புதிய உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டுக் களம் காண, துடிப்பான இளைஞர்களுக்குப் போட்டியாக வீரமிகு காளைகள் காத்திருக்கின்றன.

-தினமணி – பொங்கலோ பொங்கல்!

விளம்பரச் சிறப்பிதழ்- கோவை (14.01.2018)

 

Leave a comment