இதயங்களை இணைக்கும் சமயம் தந்தவர்!

9 Dec

குரு நானக் தேவர்

(இந்த ஆண்டு சீக்கிய சமய ஸ்தாபகர் நானக்ஜியின் 550வது ஆண்டு)

சத்ஸ்ரீ அகால்!

பாரத நாட்டின் வரலாற்றில் மகான் குரு நானக் தேவருக்கு முதன்மை இடம் உண்டு. அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் நாடு அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்திருந்தபோது, வாராது வந்த மாமணியாகத் தோன்றியவர் குரு நானக். எங்கும் நிராசை தாண்டவமாடிய சூழலில், இறை வழிபாட்டை புதிய திசையில் செலுத்தி, ஆக்கிரமிப்பாளர்களையும் ஈர்த்து தன்வயப்படுத்தியவர் அவர். சநாதன தர்மத்தைக் காக்க 1500 ஆம் ஆண்டுகளில் சமயோசிதமாக அவர் உருவாக்கிய சீக்கிய சம்பிரதாயம், அதன் ஐந்தாவது குருவின் காலத்தில், ஹிந்து தர்மம் காக்க வாளேந்திய கரமாக உருவெடுத்தது. ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் அந்த சம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள் தங்களை தனிப்பட்ட சமயத்தினராக தங்களைக் கருதிக் கொள்ளும் துர்பாக்கியம் பின்னாளில் ஏற்பட்டிருக்கிறது.

குரு நானக் தேவர் இறையுணர்வின் உச்சத்தைத் தொட்டவர். பாரதத்துக்கே உரித்தான ஆன்மிகச் செழுமையை அவரது போதனைகளில் காண முடியும். அதேபோல, இறைவன் ஒருவரே, அவர் எந்த வடிவில் இருந்தாலும், உருவமற்றவராக இருந்தாலும்  ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற பேருண்மையை உலகிற்கு உபதேசித்தவர். அதற்காக பௌத்தர்கள் வணங்கும் சுமேரு மலைக்கும், இஸ்லாமியர்கள் வணங்கும் மெக்கா, மெதினாவுக்கும் அவர் சென்றிருக்கிறார். பாரத நாடு முழுவதும் அவரது புணிதப் பயணம் நிகழ்ந்திருக்கிறது. தனது வாழ்நாளான 70 ஆண்டுகளுக்குள் தனது 4 புனித யாத்திரைகளை (உதாஸி) நிறைவு செய்ததுடன், தான் கண்டறிந்த ஆன்மிக உண்மைகளை உபதேசிக்க, வைராக்கியம் மிகுந்த ஒரு தனி சம்பிரதாயத்தை தனது 30வது வயதில் அவர் உருவாக்கினார். அதற்கு தனது மகன்களை வாரிசாக நியமிக்காமல், தனது சீடர்களுள் முதனமையான குரு அங்கத் என்பவரை இரண்டாவது குருவாக நியமித்தும் சென்றார்.

பாரத நாடு முழுவதிலுமே இத்தகைய தனிப்பட்ட சம்பிரதாயங்களின் உருவாக்கங்களையும் அவற்றிற்கான தேவைகளையும் காண முடியும். அனைத்து சம்பிரதாயங்களும் தனி ஆளுமை கொண்டவையே. ஆனால், அவை அனைத்தும் பின்னிப் பிணைந்தும், ஒன்றுக்கொன்று உரையாடியும் தான் நமது சநாதன தர்மம் ஹிந்து என்ற மதமாக உருவெடுத்தது.

கால சஞ்சீவி:

அத்தகைய ஹிந்து மதத்தின் வணிகர் குடியில் பிறந்தார் நானக். தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் ராய் போய் கி தல்வாண்டி கிராமத்தில் (தற்போதைய நான்கானா சாஹிப்) 1469 ஆம் ஆண்டு கார்த்திகை மாத பௌர்ணமி அன்று கல்யாண் சந்த் தாஸ் பேடி- மாதா திரிபதா தம்பதியின் இரண்டாவது குழந்தையாக அவதரித்தார் நானக். அவரது ஐந்து வயது மூத்த தமக்கை பீபி நானகி.

நானக்கிற்கு ஐந்து வயதிலேயே ஆன்மிக அனுபவங்கள் கிடைத்ததாக வரது வாழ்க்கை சரிதம் கூறுகிறது. அவரது இளம்பருவத்தில் பல தெய்வீக நிகழ்வுகள் நிகழ்ந்தன. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல, முதல் வகுப்பிலேயே பள்ளி ஆசிரியரிடம் அவர் ஓரிறைக் கோட்பாட்டை விளக்கினார். தன்னையொத்த குழந்தைகளை வட்டமாக அமரச்செய்து இறைப்பாடல்களைப் பாடுவது நானக்கின் வழக்கம். அவரது ஜனன ஜாதகத்தைக் கண்ட ஜோதிடர்கள் அவர் உலகை உய்விக்கும் மார்க்கம் காண்பார் என்றனர்.

அஅவர் பிறந்த காலகட்டம், பாரதத்தின் வடமேற்கு பிரதேசங்களில் அமைதியின்மை கோலோச்சிய காலகட்டம்; 400 ஆண்டுகளாக வரிசையாக அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்ததும், ஆக்கிரமிப்பாளர்களால் கொள்ளை, கொலை, கற்பழிப்பு நிகழ்வுகள் தொடர்கதையானதும் மக்களை அச்சத்திலும் நிராசையிலும் ஆழ்த்தி இருந்தன. தில்லியில் சுல்தான்களின் ராஜ்ஜியம் அமைந்திருந்தது. அவர்களின் ஆட்சியில் இஸ்லாம் மார்க்கம் ஆதிக்க முறையில் பரப்பப்பட்டது.

நானக்கின் தந்தை உள்ளூரில் ராய்புல்லர் பாட்டி என்பவரிடம் பயிர் வருவாய்க் கணக்கராக இருந்தார். இந்த ராய் புல்லர்தான் நானக்கிடம் இருந்த தெய்வீகத்தன்மையை முதலில் உணர்ந்தவர். 1475இல் தமக்கை நானகிக்கு ஜெய்ராம் என்பவருடன் திருமணமானது. அக்கா மீது மிகுந்த பாசமாக இருந்த நானக், அவருடன் ஜெய்ராமின் ஊரான சுல்தான்பூருக்குச் சென்றார். அக்காவுக்கு உதவியாக இருந்த நானக், தனது 16வது வயதில் தௌலத்கான் லோடி என்ற இஸ்லாமியரிடம் வேலையில் சேர்ந்தார். அவரது பணியிட அனுபவம் இஸ்லாம் மார்க்கம் குறித்து அறிவதற்கான வாய்ப்பாக அமைந்தது. அப்போது சமஸ்கிருதம், பாரசீகம், குர்முகி, ஹிந்தி ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

1487இல் படாலா நகரில் மாதா சுலக்கினியை நானக் திருமணம் செய்தார். அவர்களுக்கு ஸ்ரீசந்த், லக்‌ஷ்மி சந்த் ஆகிய இரு புதல்வர்கள் பிறந்தனர்.

ஞானம் பெறுதல்:

இயல்பிலேயே ஹிந்து சமய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டிருந்த நானக், இஸ்லாமிய தத்துவங்களையும் முறைப்படி கற்றார். அவருக்கு புனிதப் பயணங்களிலும் சமய அறிஞர்களுடனான சம்வாதங்களிலும் மிகுந்த ஈடுபாடு இருந்தது. அவரது 4 புனித யாத்திரைகளும் அவரைப் பண்படுத்தின. அதன் விளைவாக, அப்போதைய காலத்துக்கேற்ற மருந்தாக சீக்கிய சம்பிரதாயத்தை 1499இல் அவர் துவக்கினார்.

முன்னதாக, ஓடையில் குளிக்கும்போது நீரில் மூழ்கி நானக் மாயமானார். மூன்று நாள்கள் கழித்து அவர் மீன்உம் தோன்றினார். அப்போது, “யாருடைய பாதையை நான் பின்பற்ற வேண்டும்? ஹிந்து மதமா, அல்லது இஸ்லாமா? நான் கடவுளின் பாதையையே பின்பற்ற வேண்டும். கடவுள் ஹிந்து மதமும் அல்ல, முஸ்லிம் மதமும் அல்ல; நான் பின்பற்ற வேண்டிய பாதை கடவுளின் பாதையாகும்’’ என்று அறிவித்தார். நீரில் மூழ்கியபோது கடவுளின் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு,  அவருக்கு தேன் நிரம்பிய பாத்திரம் வழங்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.  “இது கடவுளின் ஆற்றல் நிரப்பப்பட்ட கோப்பை, இதை அருந்து; நான் உன்னுடன் இருக்கிறேன்.  நான் உன்னை ஆசீர்வதித்து உன்னை உயர்த்துகிறேன். யார் உன்னை நினைக்கிறார்களோ, அவர்கள் என் ஆசீர்வாத்தையும் பெறுவர்’’ என்று கடவுள் தன்னிடம் சொன்னதாகவும் நானக் கூறினார். அந்த அற்புதத்துக்குப் பிறகு அவர் குரு நானக் என்று அழைக்கப்பட்டார்.

அப்போது அவர் பாடிய தோத்திரப் பாடல் ‘ஜபுஜி’ என்று அழைக்கப்படுகிறது. அதுவே சீகிய சம்பிரதாயத்தின் வேதமான ஆதிகிரந்தத்தின் ஆணிவேராகும். இதோ அந்த மந்திரம்:

ஏக் ஓம்கார: சத்நாம் அஜனி சைபாம் கர்தபுராஹ்

நிர்பய நிர்வைர அகாலமுரத் குருபிரசாத்!

இதன் பொருள்:

ஓங்கார ரூபமான அவர் உண்மையானவர்; அவர் நாமம் உண்மையானது; படைப்பு உண்மையானது; கடவுள் பயமில்லாதவர்; எதிரிகள் இல்லாதவர்;  அன்பு நிறைந்தவர்; அமரத்துவமானவர்!

தனது போதனைகளை மக்களிடையே பரப்ப, சீடர் பரம்பரையை அவர் உருவாக்க விரும்பினார்.  ‘சிஷ்ய’ என்ற சமஸ்கிருதச் சொல்லில் இருந்தே குர்முகியில் சீக்கியன் என்ற வார்த்தை உருவானது. நானக்கின் சிஷ்யன் என்பதே அதன் பொருள்.

மேலும் உணர முடிந்த இறைவனை  ‘ஓம்காரா’ என்று அழைப்பதுடன் அவனுக்கு பல சிறப்புப் பெயர்களையும் அளித்தார் குரு நானக். அவையாவன:

கர்த்தர்- படைப்பாளர்.
அகல்- நிலையானவர்.
சத்தனமா- புனிதமானவர்.
சாஹிப்- கடவுள்.
பர்வர்திகர்- பேணிக்காப்பவர்.
ரஹீம்- கருணையாளர்.
கரீம்- அன்பாளர்.

தனது போதனைகளின் அடிநாதமாக சமூக சீர்திருத்ததை அவர் கொண்டிருந்தார். அன்றைய நம்பிக்கையற்ற சூழலுக்கு மாற்று வைராக்கியமான பக்தி நெறியே என்பதே அவரது கோட்பாடு. அவரது தெய்வீக அனுபவங்கள் அவரை நாடி மக்களை வரச் செய்தன. ஒவ்வொரு ஹிந்து குடும்பமும் தங்கள் பிள்ளைகளை அவரிடம் கற்க அனுப்பத் துவங்கின. அவரது சீடர் குழாம் பெருகியது. அவர்களிடம் அவர் மூன்று அத்தியாவசியக் கடமைகளை வலியுறுத்தினார். அவை:

தெய்வீக நாமத்தை தியானம் செய்க!

கண்ணியமாகவும் நேர்மையாகவும் பணிபுரிக!

கிடைக்கும் பலனை அனைவரும் பகிர்ந்துகொள்க!

குரு நானக்கின் போதனைகள் மிகவும் வேகமாகப் பரவின. அன்றைய சுல்தான் ஆட்சிக்காலத்தில், ராமனும் ரஹீமும் ஒன்றே என்ற அவரது போதனை, ஆட்சியாளர்களை சினமூட்டாமல், அதே சமயம், மக்களுக்கும் தன்னம்பிக்கை அளிப்பதாக அமைந்ததன. தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்கத்தையும் அவர் உபதேசித்தார்.

மிக விரைவில், அவரது வாழ்வின் இறுதிக்குல் சீக்கிய சம்பிரதாயம் குறிப்பிடத்தக்க செல்வாக்குப் பெற்றது. அப்போது காபூலிலிருந்து படையெடுத்து வந்த பாபர் தில்லியில் 1526இல் மொகலாயப் பேரரசை நிறுவி இருந்தார். மக்களிடையே குரு நானக் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டு வியந்த பாபர் அவரைச் சந்தித்து பரிசுகள் அளித்தார். ஆனால், மொகலாயப் படையின் கொடுமைகளை அறிந்திருந்த குரு நானக் அவற்றைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அடுத்து தனது உபதேசங்களால் சீடர் குழாமை விரிவுபடுத்திய குரு நானக், தனது இறுதிக்காலம் நேருங்குவதை உணர்ந்து தனது அத்யந்த சீடர் பை லென்னாவுக்கு குரு அங்கத் என நாமகரணம் செய்து, சீக்கிய சம்பிரதாயத்துக்கு இரண்டாவது குருவாக நியமித்தார்.

அதையடுத்து கர்தார்பூரில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது), 1539, செப்டம்பர் 15-இல் இரைவனுடன் ஐக்கியமானார்.

சீக்கிய குருமார்கள்:

அடுத்தடுத்து பொறுப்பேற்ற சீக்கிய சம்பிரதாயத்தை மேலும் வலுப்படுத்தினார்கள். அவர்களின் பட்டியல்:

  1. குரு நானக் (1539 ஜூன் 13 வரை)
  2. குரு அங்கத் (1539 ஜூன் 13- 1552 மார்ச் 26)
  3. குரு அமர்தாஸ் (1552 மார்ச் 26- 1574)
  4. குரு ராம்தாஸ் (1574- 1581)
  5. குரு அர்ஜூன் தேவ் (1581- 1606)
  6. குரு ஹர்கோவிந்த் (1606 மே 30- 1644 மார்ச் 8)
  7. குரு ஹரி ராய் (1644 மார்ச் 8- 1661 அக்.6)
  8. குரு ஹரிகிருஷ்ணன் (1661 அக்.6 – 1664 ஆகஸ்ட்)
  9. குரு தேக்பகதூர் (1664 ஆகஸ்ட்- 1674)
  10. குரு கோவிந்த் சிங் (1674 மார்ச் 29- 1708)
  11. ஸ்ரீ குரு கிரந்தம் (1708 முதல்).

ஒவ்வொரு சிக்கிய குருவும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்கவர்கள். இரண்டாவது குருவான குரு அங்கத் (1504- 1552) குர்முகி மொழி சீர்திருத்ததைச் செய்தவர்.

அடுத்த வந்த மூன்றாவது குரு அமர்தாஸ் (1479- 1574), மொகலாய அரசர் அக்பர் ஹிந்துக்கள் மீது விதித்திருந்த புனித யாத்திரை மீதான வரியை நீக்கச் செய்தார். அக்பரின் தீன் இலாஹி மார்க்கத் தேடலில் உதவி புரிந்த அமர்தாஸ், சீக்கியக் குடும்பங்களின் இல்லச் சடங்குகளுக்கான மந்திரங்களை உருவாக்கினார். சீக்கிய வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் அன்னதானமான ‘லங்கர்’ முறையைத் தோற்றுவித்தவரும் இவரே. இன்றைய பொற்கோயில் உள்ள அமிர்தசரஸ் இடத்தை தேர்வு செய்தவரும் இவரே.

அடுத்து பொறுப்பேற்ற நான்காம் குருவான குரு ராம்தாஸ் (1534- 1581), அமிர்தசரஸில் அழகிய குளத்தின் மையத்தில் குருத்துவாரா எனப்படும் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலத்தை நிர்மாணித்தார். ‘மசந்த்’ என்ற நிதி வசூல்  முறையையும் தோற்றுவித்தார். 1574இல் துவங்கிய கோயில் பணி தொடர்ந்து நடைபெற்று 1604இல் முற்றுப்பெற்றது.

அடுத்து அவரது மகன் குரு அர்ஜூன் தேவ் ஐந்தாவது குருவானார். தந்தை துவக்கிய அமிர்தசரஸ் கோயில் திருப்பணியை நிறைவு செய்ததுடன், ஆதிகிரந்தத்தை முழுமையாகத் தொகுத்தார்.

குரு அர்ஜூன் தேவின் காலம் (1563- 1606) போராட்டமான காலகட்டமாக இருந்தது தில்லியில் முடிசூடிய ஜஹாங்கீர் தனது தந்தை போலல்லாது மத சகிப்புத்தன்மை அற்றவனாக இருந்தான். ஹிந்துக்களை மதம் மாற்றத் தடையாக இருந்த குரு அர்ஜூன் தேவை முஸ்லிமாக மாற்றிவிட்டால் பிறரும் விரைவில் மாறிவிடுவார்கள் என்று மௌலவிகள் அரசனுக்கு தூபமிட, குரு அர்ஜூன் தேவ் மொகலாய அரசால் கைது செய்யப்பட்டார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறு குரு அர்ஜூன் தேவுக்கு ஆசைகள் காட்டப்பட்டன. பிறகு அச்சுறுத்தியும் பார்த்தனர். லகூர் கோட்டையில் வைத்து கொடுமையான சித்ரவதைகளும் செய்யப்பட்டன. ஆயினும் குரு இஸ்லாம் மதத்துக்கு மாற சம்மதிக்கவில்லை. இறுதியில் 1606இல் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவர் ராவி நதியில் மூழ்கி மறைந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

தந்தையின் மரணத்துக்குப் பிறகு, அவரது புதல்வர் ஹர் கோவிந்த் (1595- 1644) ஆறாவது குருவாகப் பொறுப்பேற்றார்.  அதிக காலம் குரிவாக இருந்த பெருமைக்குரியவர் இவர். மொகலாய அரசின் மதவெறிக்கு எதிராக சீக்கியர்களை போர்ப்படையாகத் திரட்டியவர் இவரே. சீக்கியர்களுக்கு ஆன்மிக உபதேசத்துடன் படைக்கலப் பயிற்சியும் அவசியம் என்றார். அதற்கான பயிற்சி மையங்களை உருவாக்கியதுடன், ஆயுதங்களையும் தயாரித்தார். ஜஹாங்கீருக்கு எதிராக மக்கலைத் திரட்டி போர்கலையும் நடத்தினார். தனது காலத்தில் ராம்தாஸ்பூரில் ஒரு கோட்டையையும் கட்டினார். சீக்கியர்களின் நீதி அமைப்பான அகால்தக்த் இவரால் நிறுவப்பட்டது.

1612இல் ஜஹாங்கீர் அரசல் கைது செய்யப்பட்டு சிறிதுகாலம் குவாலியர் சிறையில் இருந்த குரு ஹர்கோவிந்த், மொகலாய அரச குடும்பத்தில் நிலவிய சிக்கல்களால் விடுவிக்கப்பட்டார். அப்போது, குவாலியர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 52 நாட்டு இளவரசர்களையும், ஜஹாங்கீரிடம் வாதிட்டு விடுவித்தார். (1617)

ஜஹாங்கீரை அடுத்து மொகலாய மன்னரான ஷாஜகானுடனும் குரு ஹர்கோவிந்துக்கு நக்ல்லுரவு இருக்கவில்லை. அவரது சேனையுடன் 4 போர்களில் ஈடுபட்டார். இதனிடையே, 1630இல் ஹிந்து சந்யாசி சமர்த்த ராமதாசரை ஸ்ரீநகரில் குரு ஹர்கோவிந்த் சந்தித்து ஆசி பெற்றார். தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பேரன் ஹரி ராயை ஏழாவது குருவாக அறிவித்தார் (1644).

அடுத்து குருவான குரு ஹரி ராய் (1630- 1661), மொகலாய அரச்க் குடும்பத்தில் நிலவிய பூசலில் தாராஷிகோவின் பக்கம் நின்றார். அவர் சூஃபி தத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். ஆனால், ஆட்சிக்கான பூசலில் ஔரங்கசீப் வென்று அரசரானார். உடனே அவரது கோபம், தனது தமையன் தாராவுக்கு உதவிய குரு ஹரி ராய் மீது திரும்பியது. அவரது ஆணையை ஏற்று தில்லிக்கு தனது மகன் ராம் ராயை பேச்சு நடத்த அனுப்பி வைத்தார். ஆனால், ராம் ராய் ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலால் மிரண்டு தவறான விளக்கம் அளித்துவிட்டார். ஆதிகிரந்தத்தில் திருத்தம் செய்வதாகவும் ஒப்புக் கொண்டார். இதனை குரு ஹரி ராய் விரும்பவில்லை. அதையடுத்து, தனது இரண்டாவது மகன் ஹரிகிருஷ்ணனை (5 வயது) அடுத்த குருவாக அறிவித்தார்.

குரு ஹரி ராய்க்குப் பிறகு எட்டாவது குருவானார் குரு ஹரிகிருஷ்ணன் (1656- 1604). பாலகுரு என்றழைக்கப்பட்ட அவர், அம்மை நோயால் தக்கப்ப்டு மூன்றாண்டுகளில் மறைந்தார். இறப்பதற்கு முன்  ‘பாபா பகலே’ என்ர கிராமத்தில் அடுத்த குரு இருப்பதாகக் கூறிச் சென்றார் பாலகுரு.

படையணி ஆக்கிய தந்தையும் தனயனும்:

பாபா பகலே கிராமத்தில் இருந்த தேக் பகதூர் (1621- 1675), ஆறாவது குருவான ஹர்கோவிந்தின் ஐந்தாவது மகனாவார். அவரது இயற்பெயர் தியாக மல். வாள்போரில் சிறந்து விளங்கினார் மல். எட்டாவது குருவின் அறிவுரைப்படி தேடிய சீக்கிய நிர்வாகிகள் தேக்பகதூரைக் கண்டறிந்து அவரை ஒன்பதாவது குருவாக ஏற்றனர்.

அன்ரைய மொகலாய அரசன் ஔரக்கசீப் தனக்கு முந்தைய குருநாதர்களை அவமதித்தை அறிந்திருந்த குரு தேக்பகதூர் சீக்கியர்களை படையாகத் திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தினார். அதே சமயம் நாடு முழுவதும் பயணம் செய்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். பல இடங்களில் சமுதாயக் கிணறுகள் அமைக்கவும், லங்கர் மையங்களை நிறுவவும் உத்வேகம் அளித்தார்.

காஷ்மீரில் இருந்த ஹிந்து பண்டிட்கள் அப்போதைய ஔரக்கசீப் அரசால் மதம் மாறுமாறு நிர்பந்திக்கப்பட்டனர். அவர்கள் குரு தேக்பகதூரிடம் வந்து முறையிட்டனர். அரசரின் ஆணையை எதிர்த்தார் குரு தேக்பகதூர். அதனால் கைது செய்யப்பட்ட அவர், தில்லியில் கடும் சித்ரவதை செய்யப்பட்டார். குரு இஸ்லாமியராக மாறினால் மக்களை எளிதில் மதம் மாற்றிவிடலாம் என்று எண்ணிய ஔரங்கசீப் அனைத்து வகையான சித்ரவதைகளையும் நடத்தினான். ஆனால், குரு தேக்பகதூர் நிலைகுலையவில்லை. “தலையை இழப்பேனே ஒழிய தர்மத்தை இழக்க மாட்டேன்” என்று நெஞ்சுரத்துடன் முழங்கினார் அவர். அதன் விளைவாக அவர் கொல்லப்பட்டார் (1675, நவ. 24).

தந்தையின் தியாக மரணத்தை அடுத்து, அவரது புதல்வர் கோவிந்த் (1666- 1708) பத்தாவது குருவாகப் பொறுப்பேற்றார். குரு கோவிந்த் சிங், சீக்கிய சம்பிரதாயத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்றார். அதனை அரசியல்ரீதியாகவும், ராணுவரீதியாகவும் வலிமையான சமுதாயம் ஆக்கினார்.

மொகலாயர்களின் மதவெறிக்கு எதிராக அவர் தொடர்ந்து போரிட்டார். மொகலாய பேரரசின் வீழ்ச்சியில் குரு கோவிந்தருக்கும் பெரும் பங்குண்டு.

 

 

Leave a comment