கண்ணியமான ஓய்வூதியம் கிடைக்குமா?

20 Oct

-பி.எஸ்.எம்.ராவ்

எந்த ஒரு நாட்டிலும் முதியவர்களின் எண்ணிக்கை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடைய காரணியாக உள்ளது. அவர்களது கடைசிக்கால வாழ்க்கை நலமாக இருப்பதை உறுதிப்படுத்தும்  ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலவாழ்வுத் திட்டங்களே நாட்டின் உயர்வை வெளிப்படுத்தும்.

இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை  அதிவேகமாகப்  பெருகி வருகிறது.  1961இல் 2.47 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை 2011இல் 10.4 கோடியாகவும், 2021இல் (முன்கூட்டிய கணிப்பு) 13.8 கோடியாகவும் அதிகரித்தது. 2031இல் இது 19.4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி விகிதம் 5.6 % (1961), 8.6 % (2011), 10.1  % (2021), 13.1 % (2031)  ஆகும். இதே வளர்ச்சி வேகத்துடன் முதியோருக்கான அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

அண்மைக்காலமாக தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டமே இதற்கு சரியான உதாரணமாகும். இதற்கும் நடைமுறையில் இருந்த ஓய்வூதியத் திட்டத்தை விட புதிய திட்டம் பயன் குறைந்ததாகவே உள்ளது. குறிப்பாக, ஏற்கெனவே பழைய இபிஎஃப் (தொழிலாளர் வைப்பு நிதி) மூலமாக செயல்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியம் பெற்றுவந்த தொழிலாளர்கள் பலருக்கும், தற்போது அது நியாயமற்ற காரணங்களால் மறுக்கப்படுகிறது. 2014 செப். 1க்குப் பிறகு தேர்வு செய்யப்பட்ட தொழிலாளர்களின் நிலை பற்றிப் பேசவே முடியாது.

1996இல் மிகுந்த ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர்கள் அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதைத் தடுத்துவிட்டது. இவ்விஷயத்தில் அரசின் கண்ணோட்டத்தில் உள்ள சில அம்சங்கள் சட்டரீதியாக சரியாக இருக்கலாம்; ஆனால் நியாயமானதாகத் தெரியவில்லை.

நாடு சுதந்திரம் பெற்றபோது, தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டிய தேவையும், அதை அரசு வெளிப்படுத்த வேண்டிய கடமையும் வந்து சேர்ந்தன. அதையடுத்து, தொழிற்சாலைகளிலும் பொதுத்துறையிலும் பணியாற்றும் தொழிலாளர்களின் ஓய்வுக்காலத்திற்குப் பிறகு ஓய்வூதியம் வழங்கும் வகையில், குடியரசுத் தலைவரால் அவசரச் சட்டம் 1951இல் பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தொழிலாளர் வைப்பு நல நிதி (இபிஎஃப்) உருவாக்கப்பட்டு, அதன்மூலமாக ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிறகு 1952இல் மத்திய அரசால் இது முழுமையான சட்டமாக்கப்பட்டது.

1995இல் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் இதில் புதிதாகச் சேர்க்கப்பட்டது. அதன்படி, ஓய்வூதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது அச்சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ஓய்வூதியத்தின் உச்ச வரம்பு ரூ. 5,000 ஆக இருந்தது. 2001இல் இந்த உச்ச வரம்பு ரூ. 6,500 ஆகவும், செப்டம்பர் 2014இல் ரூ. 15,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இத்தொகை, தொழிலாளரின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வைப்பு நிதி (பி.எஃப்.) மற்றும் ஓய்வூதிய மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது.

உதாரணமாக, ஒரு தொழிலாளர் சுமார் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறுவதாக வைத்துக் கொள்வோம். அவர் தனது பணிக்காலத்தில் தேவையான பங்களிப்புத் தொகையை நிறுவன உரிமையாளருடன் ரூ. 5,000 செலுத்த இருந்தால் அவர் ஓய்வூதியமாக ரூ. 2,500 பெறுவார். இதற்கான ஓய்வூதியக் கணக்கீட்டு சூத்திரம்:  ஓய்வூதியம் =  ஓய்வூதியரின் பணி ஆண்டுகள் X ஓய்வூதிய ஊதியம்  / 70 என்பதாகும். இதில் ஓய்வூதிய ஊதியம் என்பது, பங்களிப்பாகச் செலுத்தப்படும் ஊதியம் ஆகும்.  இது உச்சவரம்பான ரூ. 5,000 ஆகவோ, அல்லது அதைவிடக் குறைவாகவோ இருக்கும். 2001இலும் 2014இலும் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய உச்சவரம்புடன் இதை ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

அதாவது ஒரு தொழிலாளி ஓய்வு பெறும்போது ரூ. ஒரு லட்சம் ஊதியம் பெறுபவராக இருந்தாலும் கூட, மேற்படி கணக்கீட்டின் படி அவர் உச்சவரம்புக்கு உள்பட்ட தொகையை மட்டுமே ஓய்வூதியமாகப் பெற முடியும். அதாவது மாதம் ரூ. 1,500 மட்டுமே அதிகபட்சத் தொகையாகப் பெற முடியும். இது ஒரு ஏற்க இயலாத ஓய்வூதிய மதிப்பீடு என்பது சொல்லாமலே விளங்கும்.

கடைசி மாத ஊதியத்துடன் ஒப்பிடுகையில் கிடைக்கக் கூடிய ஓய்வூதியம் மிகவும் சொற்பமாக இருப்பது பொருத்தமற்றதாக இருக்கிறது என்பதை அரசே உணர்ந்தது. அதனால் தான் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் தொழிலாளரின் பங்களிப்பு உச்ச வரம்பை ரூ. 5,000லிருந்து அதிகரித்துக்கொள்ள தொழிலாளருக்கே வாய்ப்பளிக்கும் வகையில் 1996 மார்ச் 16இல் திருத்தம் செய்யப்பட்டது. அதன்மூலமாக கடைசிமாத ஊதியத்துடன் ஓரளவேனும் ஒத்திருக்கும் வகையில் உயர்ந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, அதிகபட்ச ஓய்வூதியம் பெற விரும்பிய தொழிலாளர்கள் பலரும் தங்களது பங்களிப்புத் தொகையை அதிகரித்துக் கொண்டனர். ஆனால், அவர்கள் ஓய்வு பெற்றபோது, அதற்கான பலன்கள் கிடைக்கவில்லை. அவர்கள் அதிகபட்ச ஓய்வூதியப் பங்களிப்பை செலுத்தியிருந்தபோதும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உயர்ந்தபட்ச ஓய்வூதியம் மறுக்கப்பட்டது.

இதன் காரணமாக பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும்  தொழிலாளர்கள் அரசுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை நடத்தினர். இந்த வழக்கில் தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் சாதகமான தீர்ப்புகள் வந்தபோதும், இறுதியில் மத்திய அரசின் மேல்முறையீட்டின் போது தீர்ப்பு சாதகமாக அமையவில்லை.

கேரள உயர் நீதிமன்றம் இபிஃப் நிறுவனம் புதிதாகக் கொண்டு வந்த ஓய்வூதியத் திட்டம் செல்லாது என்று கடந்த 2018ஆம் ஆண்டில் தீர்ப்பளித்திருந்தது. ராஜஸ்தான், தில்லி உயர் நீதிமன்றங்களும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திருந்தன. அந்தத் தீர்ப்புகளை எதிர்த்து மத்திய அரசு மற்றும் இபிஎஃப் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

ஆயினும் அந்தத்  தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு, இபிஎஃப் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பை அமல் செய்தால் இபிஎஃப் அமைப்புக்கு பெரும் நிதிச் சுமை ஏற்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக,  உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 2022 நவ. 4 இல் முக்கியமான தீர்ப்பை அளித்தது. ‘கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. ஊழியர்கள் ஓய்வூதிய (திருத்த) திட்டம் 2014′, சட்டப்படி செல்லும்’ என்று மூன்று நீதிபதிகள் அமர்வு அறிவித்தது.  

தவிர, ‘புதிய திட்டத்தில் இணையாமல் கடந்த 2014 செப். 1ஆம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்றவர்கள் இனிமேல் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைய முடியாது. புதிய திட்டத்தில் இணைந்து 2014 செப். 1க்கு முன்   ஓய்வு பெற்றவர்கள் திட்டத்தின் பலன்களைப் பெறலாம். தற்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர 6 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும். ரூ. 15,000 வரம்புக்கு அதிகமாக ஊதியம் பெறும் ஊழியர்கள் கூடுதலாக 1.16 சதவீத பங்களிப்பு தொகை வழங்க வேண்டும் என்ற திருத்தம் செல்லாது’ என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது ஓய்வு பெற்ற, முதிய தொழிலாளர்களின் நிலையை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அரசின் விதிமுறைகளால் அவர்களின் சோதனைகள் நீங்காமல் தொடர்கின்றன. தொழிலாளர்கள் செலுத்திய பங்களிப்புத் தொகை அதிகமாக இருந்தாலும்கூட அவர்கள் உயர்ந்தபட்ச ஓய்வூதியத்திற்கான படிவத்தில் சம்மதம் தெரிவித்து தங்கள் விருப்பத்தை குறித்த காலத்திற்குள் பதிவு செய்திருக்க வேண்டும் என்று இபிஎஃப் நிறுவனம் கூறுகிறது. அதாவது தொழிலாளர்கள் அதிகபட்ச பங்களிப்புத் தொகையை செலுத்தியதற்கான ஆதாரம் இருந்தாலும், அது தொழிலாளரின் விருப்பமாகக் கொள்ளப்படாதாம். அவரது விருப்பமின்றியா அவரது ஊதியத்திலிருந்து அதிகபட்ச பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்யப்பட்டது?

அதுமட்டுமல்ல, புதிய ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கான  தொழிலாளரின் விண்ணப்பங்கள் நியாயமான காரணமின்றி நிராகரிக்கப்படுகின்றன. ‘உங்கள் விருப்பத்தை நீங்கள் முன்னரே தெரிவிக்கவில்லை எனில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்’ என்று சொல்லும் அதிகாரிகள், அதனை நீங்கள் முறைப்படி செய்திருந்தாலும், ‘விண்ணப்பத்திற்கான ஆதாரங்கள் சரியில்லை’ என்பது போன்ற காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கின்றனர்.

சென்ற ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானபோதே, தொழிலாளர்கள் தங்கள் புதிய ஓய்வூதியத் திட்ட விண்ணப்பங்களைத் திருத்தியமைத்து ஒப்படைக்க அந்த வருடக் கடைசி வரை இபிஎஃப் நிறுவனம் கால அவகாசம் அளித்தது. அதன்படி 17.5 லட்சம் விண்ணப்பங்கள் இபிஎஃப் நிறுவனத்திற்கு வந்துள்ளன.

மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து, தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை பெரும் நிதிச் சுமையாக அரசு கருதுவது நன்றாகப் புலப்படுகிறது. 2014 செப்டம்பருக்கு முன் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த உயர்ந்தபட்ச ஓய்வூதியத்  திட்டம் செல்லாது என்று அரசு அறிவித்திருப்பதை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?

தொழிலாளர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசும் இபிஎஃப் நிறுவனமும் முன்வைக்கும் வாதங்கள் எதுவும் உண்மையான புள்ளிவிவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்போது பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதில் எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை.

தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் (இபிஎஃப்ஓ) அண்மைக்கால புள்ளிவிவரங்களின்படி,  2021-2022 நிதியாண்டின் ஒய்வூதிய வைப்புநிதியாக தொழிலாளர்களின் பங்களிப்பு மூலமாகக் கிடைத்திருப்பது ரூ. 57,526.18 கோடி. மொத்த வைப்பு நிதிக்கு வட்டியாகக் கிடைத்தது ரூ. 50,613.95 கோடி. இவையல்லாது, கேட்பாரற்ற  செயல்படாத வைப்புநிதிக் கணக்குகளில் இபிஎஃப் நிறுவனத்திடம் தேங்கிக் கிடக்கும் தொகை ரூ. 30,000 கோடியைத் தாண்டும்.  இபிஎஃப் நிறுவனத்திடம் குவிந்திருக்கும் ஒட்டுமொத்த ஓய்வூதிய வைப்புத் தொகையின் மதிப்பு ரூ. 6,89,210.72 கோடி!

ஆனால், தொழிலாளர்களின் ஓய்வூதியத்திற்காக இபிஎஃப் நிறுவனம் செலவழிப்பது ஒப்பீட்டு நோக்கில் மிகவும் குறைவாகும். 2021-2022 நிதியாண்டில், 72.74 லட்சம் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமாக 12,933.12 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தொழிலாளர் வைப்புநிதியிலிருந்து தொழிலாளர்கள் பணம் பெறும் முறையில் ரூ. 7,989.01 கோடி விடுவிக்கப்படிருக்கிறது. மொத்தத்தில், கடந்த ஆண்டு இபிஎஃப் நிறுவனம் தொழிலாளர்களுக்கு வழங்கியது ரூ. 20,922.14 கோடி தான். இது அந்த ஆண்டின் மொத்த வரவினத்தில் 19.34 %  மட்டுமே!

ஒவ்வோராண்டும் இபிஎஃப் நிறுவனத்தில் ஓய்வூதிய வைப்பு நிதி கூடிக்கொண்டே செல்கிறது. அந்நிறுவனத்திடமோ, அரசிடமோ தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கத் தேவையான பணம் இல்லாமல்  இல்லை. அதைவிட அதிகமான நிதியே வைப்பில் இருக்கிறது. இபிஎஃப் நிறுவனத்தின்  சந்தாதாரர்களாக 7.74 கோடி பேர் நாட்டில் உள்ளனர். வளரும் பொருளாதரச் சூழல் காரணமாக இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்தபடியே இருக்கிறது. தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்வு காரணமாக ஓய்வூதியம் அளிப்பதில் சிக்கல் நேரிட்டாலும்கூட, இபிஎஃப் நிறுவனத்திற்கு உதவ வேண்டிய தலையாய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.

உண்மையில் இங்கு நிதிப் பற்றாக்குறை ஒரு சிக்கல் அல்ல; கொடுப்பதற்கான மனம் தான் இல்லை. ஒவ்வொரு தொழிலாளரும் ஓய்வு பெறும்போது பெறும் ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாகப் பெறுவதே நியாயமான, கண்ணியமான ஓய்வூதியமாக இருக்கும். அதுவே அவர்களது முதுமைக்காலத்தில், ஓய்வுக்காலப் பயன்களை உறுதிப்படுத்துவதாக அமையும். ஒரு நல்லரசு என்பது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய தொழிலாளர்களின் முதுமைக்காலத்தில் அவர்களது சமூகநலப் பாதுகாப்பை உறுதி செய்வதாகவே இருக்கும்.

***

இபிஎஃப்ஓ வருடாந்திர அறிக்கை 2021-22
(மதிப்பு கோடியில்):

வரவினம்:
தொழிலாளர்கள் பங்களிப்புத் தொகை: ரூ. 57,526.18
வைப்புநிதிக்கான வட்டி: ரூ. 50,613.95 கோடி
ஆண்டு இறுதியில் மொத்த வைப்புத் தொகை: ரூ. 6,89,210.72
செலவினம்:
வழங்கப்பட்ட ஓய்வூதியம்: ரூ. 12,933.12
தொழிலாளர்கள் திரும்பப் பெற்றது: ரூ. 7,989.01
மொத்தம் செலவான தொகை:ரூ. 20,922.14

தினமணி (19.10.2023)

.

Leave a comment