நஞ்சான மனங்கள்; நமக்கு உண்டா மீட்சி…

17 Jun

india-water-scarcity

அண்மையில் இரு வேறு இடங்களில் நான் கண்ட காட்சிகள் மனதை வேதனைப்படுத்தின. இரண்டுமே தண்ணீர் சம்பந்தப்பட்டவை; கழிவறையாகிவிட்ட நமது மனம் சம்பந்தப்பட்டவை.

ஒரு நிகழ்வு, பெரும் நிறுவனம் ஒன்றின் கழிவறையிலிருந்து வெளியேறிய ஊழியர் அங்கிருந்த தண்ணீர்க் குழாயை மூடாமலே சென்றார். அதிலிருந்து தண்ணீர் பெருமளவில் வீணாகிக் கொண்டிருந்தது. உடனே அதை அடைத்துவிட்டு, சம்பந்தப்பட்டவரிடம் அதுகுறித்து கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தூக்கிவாரிப் போட்டது.

அந்த நிறுவனத்தின் உரிமையாளர், ஊழியர்களை சரிவரக் கவனிப்பதில்லையாம். எனவே, தான் பணியாற்றும் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுத்துவதற்காக, “தெரிந்தே இவ்வாறு செய்தேன்” என்று அலட்சியமாகப் பதில் கூறினார் அவர்.

அந்த கழிவறைக் குழாயில் எப்படியும் நிமிடத்துக்கு குறைந்தபட்சம் 50 லிட்டர் தண்ணீர் வீணாகி இருக்கும். யாரும் இதைக் கவனிக்காவிட்டால்,  ஒரு மணி நேரத்தில் 3,000 லிட்டர் தண்ணீர் கழிவறைத் தொட்டியிலோ, சாக்கடையிலோதான் அடைக்கலமாகும். இதனால் யாருக்கு என்ன லாபம்?

இன்னொரு நிகழ்வு, புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் கழிவறையில் கண்டது. அங்கும் மாணவர் ஒருவர் இதே வேலையைச் செய்தார். ‘தன்னிடம் பல லட்சம் கறந்த கல்வி நிறுவனத்திற்குச் செலவு வைக்க வேண்டாமா?’ என்று கேட்டார் அந்த அதிபுத்திசாலி மாணவர்.

தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது விசுவாசம் இல்லாத தொழிலாளியும், தன்னைக் கொள்ளையடித்த கல்வி நிறுவனம் மீதான கோபத்திலுள்ள மாணவரும் செய்த ஒரே செயல், தங்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் விளைவிப்பதாக எண்ணிக்கொண்டு தண்ணீர்க் குழாயைத் திறந்துவிட்டதுதான். இதனால் தொட்டியில் தண்ணீர் தீர்ந்தால், அவதிப்படுபவர்களும் அவர்கள்தான்.

அரசு மீதான ஆத்திரத்தில் பொதுச்சொத்துகளை நாசப்படுத்தும் கலாசாரத்துக்கும், இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இவ்வாறு தண்ணீரை வீணாக்குபவர்களால் ஒரு லிட்டர் தண்ணீரையேனும் உற்பத்தி செய்ய முடியுமா?

தண்ணீர் மிகவும் அத்தியாவசியப் பொருள். முற்காலங்களில் குளங்கள், ஏரிகள் அமைப்பதையே மன்னர்கள் முக்கிய கடமையாகக் கொண்டிருந்தார்கள். ஆலயங்கள் அமைப்பதற்கு நிகராக குளங்கள் வெட்டுவதிலும் மன்னர்கள் கவனம் செலுத்தினார்கள்.

இன்று நாம் பயன்படுத்தும் பல குளங்களுக்கு ஆயிரம் ஆண்டுக்கால வரலாறு உண்டு. அதே தண்ணீரைத் தான் நாம் அலட்சியமாக வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இருபது ரூபாய் கொடுத்து வாங்கவும் நாம் தயார். அண்மையில் சென்னையில் ‘கேன்’ குடிநீர் நிறுவனங்களின் வேலைநிறுத்தத்தின் போது பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் குடிநீருக்கு மக்கள் ஆலாய்ப் பறந்ததையும் கண்டோம்.

ஏன் இந்த அவலம்? இதே தொழிலாளியோ, மாணவரோ தனது வீட்டில் தண்ணீரை இவ்வாறு வீணாக்குவாரா? தனக்கு என்றால் ஒரு நியாயம், பொதுச்சொத்து என்றால் அலட்சிய மனோபாவமா? ஒரு பானை தண்ணீருக்கு 10 மைல் நடந்து செல்லும் ராஜஸ்தான் பெண்களின் கஷ்டம் இவர்களுக்குத் தெரியுமா?

நமது தமிழ்நாட்டிலேயே, காவிரி நீரைத் தேக்கும் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப்பகுதிகளிலேயே இப்போது கடும் வறட்சி வாட்டுகிறது.

தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் அபாய அளவுக்குச் சென்றுவிட்டதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மதுரை, தேனி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், வேலூர் உள்பட பல மாவட்டங்களில் கிடைக்கும் நிலத்தடிநீரில் 30 சதவிகிதம் குடிக்கத் தகுதியற்றது என்று தெரியவந்துள்ளது.

நிலைமை இப்படி இருக்க, கிடைக்கும் தண்ணீரையும் அலட்சியமாக வீணாக்குவது பெரும் குற்றமல்லவா? யாரையோ பழிவாங்க, தண்ணீர்தானா கிடைத்தது?

நீர்நிலைகளெல்லாம் கங்கையின் அம்சம் என்று வணங்கும் நமது பாரம்பரியத்தை மறந்ததன் வினை இது.

கிணற்றுக்குள் கல்லைப் போட்டால் கல்யாணத்தன்று அடைமழை பொழியும் என்ற கற்பனை மிரட்டலில் கூட, நீர்நிலைகளைப் பாதுகாக்கும் உணர்வு அன்று இருந்தது.

நதியை அன்னையாகப் போற்றிய அந்த மரபை மறந்ததால் தான் சாக்கடையையும் சாயக் கழிவையும், தோலாலைக் கழிவையும் நதியில் எந்தக் கூச்சமும் இன்றி சேர்த்துவிட்டு தொழில்துறையிலும் நாகரிகத்திலும் முன்னேற்றம் கண்டிருக்கிறோம்!

நாம் காணும் நதிகளெல்லாம் நஞ்சைச் சுமந்தபடி மரணத்தை நோக்கிப் பயணிக்க நாமே காரணம். ஏனெனில் நமது மனங்களும் நஞ்சாகிவிட்டன. அடுத்த தலைமுறைக்கு இயற்கையின் அரும் கொடையான தண்ணீரை பத்திரமாகத் தந்து செல்ல வேண்டும் என்ற சிந்தனை நம்மிடம் கொஞ்சமும் இல்லை. நதியின் மரணத்துடன் நமது வாழ்வும் அஸ்தமித்துவிடும் என்ற எச்சரிக்கை உணர்வும் நம்மிடம் இல்லை.

கழிவறையில் வீணான தண்ணீர் அளித்த ஞானோதயம் இது. தண்ணீர்த் தொட்டியில் வழிந்த தண்ணீரைக் கண்டு இயற்பியல் கண்டுபிடிப்பை நிகழ்த்தினார் கிரேக்க விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ். நாமோ தண்ணீரில் ‘அரசியல்’ நடத்துகிறோம்; தண்ணீரை வீணாக்கி நம்மை நாமே பழி வாங்கிக் கொள்கிறோம். நமக்கு உண்டா மீட்சி?

தினமணி (17.06.2013)

2 Responses to “நஞ்சான மனங்கள்; நமக்கு உண்டா மீட்சி…”

  1. Alasiam G June 17, 2013 at 12:04 PM #

    தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என்பது முது மொழி!
    உலகின், உயிர்களின் அவைகளின் இயக்கங்களின் ஆதாரமும் நீர்தானே!

    அதை எப்படி யெல்லாம் போற்றிப் பார்க்கவேண்டும் என்பதை அறியாத அந்த ஈரமில்லா நெஞ்சத்தாரின் வரட்டுத் தனத்தைத் தான் என்னென்று சொல்வது!

    உள்ளக் குமுறலின் உணர்வினை உணர்கிறோம்!

    Like

  2. ரகுநாதன் June 18, 2013 at 8:09 AM #

    நல்ல கட்டுரை. தெரு குழாயில் கூட வீணாகும் குடிநீரை யாரும் கண்டு கொள்வதில்லை. மழைக்கான மூலாதாரமான மரங்களை அழிப்பதை நிறுத்தும் வரை குடிநீர் வீணாவது நிற்கப் போவதில்லை.

    Like

Leave a comment