அனைவருக்கும் சலுகை மழை!

5 Feb

-எம்.ஆர்.சிவராமன், ஐ.ஏ.எஸ்.

தற்போதைய மத்திய அரசின் இறுதி ஆண்டில், முதன்றையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் வாய்ப்புக் கிடைத்த நிதியமைச்சர் பியூஷ் கோயல், அதை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு, தனது தனித்தன்மையை நிறுவி இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சமர்ப்பிக்கப்படும் இடைக்கால பட்ஜெட்டை முழுமையான பட்ஜெட் என்று சொல்லத்தக்க விதமாகத் தயாரித்திருக்கிறார் கோயல். தேர்லுக்குப் பிறகு அமையும் புதிய அரசே இத்தகைய பெரும் செலவினங்கள், கணிசமான வரிச்சலுகைகளை அறிவிப்பது வழக்கம். அதனை மாற்றிக் காட்டி இருக்கிறார் நிதியமைச்சர்.

அவர் தனது வாய்ப்பை தக்கவிதத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்க மக்களை இலக்காகக் கொண்டே செயல்படுகின்றன. நிதியமைச்சர் கோயலும் அதையே செய்திருக்கிறார்.

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையிலும் விவசாயிகளின் வாழ்க்கையை உயர்த்துவதாக முழக்கங்கள் மட்டுமே எழுப்பப்படுகின்றன. அவர்களது பிரச்னையின் ஆழத்தைக் கண்டறிவதில் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அதன் பலன் அவர்களை பொருளாதாரரீதியாகச் சென்றடைவதில்லை. இதனை நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக, எதிர்க்கட்சியினர் வாயடைத்துப்போகும் விதமாக, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 உதவித்தொகையை அவர்களது வங்கிக் கணக்கிற்கே செல்லும் வண்ணம் அளிப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், ஊரகப் பகுதிகளில் தேவைப்படுவது கடன்கள் மீதான வட்டிவிகிதக் குறைப்பே. கடன் சுமையால் தள்ளாடும் சிறு விவசாயிகளுக்கு இந்த ரூ. 6,000 உதவித்தொகை ஓரளவு நிம்மதி அளிக்கக் கூடும். ஆனால், விவசாயிகளின் சொத்தான நிலப்பரப்பு பாகப்பிரிவினை போன்ற காரணங்களால் துண்டாடப்படுவதால், அவர்களுக்கு விவசாய நிலத்தை சிக்கனமாகப் பயன்படுத்த முடிவதில்லை. குறைந்துவரும் விவசாயிகளின் நிலப்பரப்பு குறித்து நிதியமைச்சர் கவலைப்பட்டிருக்க வேண்டும். 2 ஹெக்டேருக்கும் கீழ் பரப்பளவு கொண்ட நிலங்களை விவசாய நிலமாகப் பதிவு செய்வதை தடை செய்ய அரசு சட்டம் இயற்ற வேண்டிய தருணம் இது.

அரசு அளிக்கும் வருடாந்திர உதவித்தொகையை, விவசாயிகளுக்கு அரசு நாளொன்றுக்கு ரூ. 17 பிச்சை போடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்திருக்கின்றன. இது அபத்தமானது. உண்மையில் இது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவசமல்ல. அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்க, அவர்களை சோம்பேறிகளாக்க வழங்கப்படுவதல்ல இந்த உதவித்தொகை; சிறு விவசாயிகள் சாகுபடியால் ஈட்டும் வருவாய்க்குத் துணையாக அரசு வழங்கும் உதவி மட்டுமே.

அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான பிஎம்எஸ்ஒய்எம் திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 3,000 ஓய்வூதியமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கது; இது இந்தக் காலகட்டத்துக்கான தேவையும்கூட. ஆயினும், அமைப்புசாராத் தொழிலாளர்களை அடையாளம் காண்பதில், அரசின் நலத்திட்டங்கள் அவர்களை முறையாகச் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அவற்றைக் களையத் தேவையான சட்டங்களை அரசு இயற்ற வேண்டியிருக்கும். எனினும் அரசின் கவர்ச்சிகரமான இந்த அறிவிப்பு ஆளும் கட்சிக்கு தேர்தலில் சாதகமாக இருக்கும்.

தொலைதூரங்களில் வாழும், நாடோடிகளாகத் திரியும், சீரமரபினராக உள்ள பழங்குடியினரைக் கண்டறிய ஓர் ஆய்வுக்குழுவை அமைப்பதாகவும் நிதியமைச்சர் பட்ஜெட் உரையில் தெரிவித்திருகத்கிறார். இன்னும் பிரதான வாழ்க்கை நீரோட்டத்துக்குள் வராத அவர்களைக் கண்டறிய முற்படுவது நல்ல முயற்சி. அதுபோலவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடும் சரியான நேரத்தில், முறையான வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பலருக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகைகள் பல மாதங்கள் தாமதமாக வழங்கப்படுவதாக பெருமளவில் புகார்கள் உள்ளன. அந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்குவதால் மட்டுமே அவர்கள் முழுமையான கல்வியறிவு பெற்றுவிட மாட்டார்கள். அவர்களுக்கு கல்வி அளிக்கத் தேவையான ஆசிரியர்களை நியமிப்பது, அந்த ஆசிரியர்களின் குழந்தைகளுக்கும் உதவித்தொகை அளிப்பது, அந்தக் குழந்தைகளை அதே பள்ளியில் கல்வி பயிலச் செய்வது ஆகிய நடவடிக்கைகளும் முக்கியமானவை.

பட்ஜெட் அறிவிப்பில் நிதியமைச்சர் முத்ரா திட்டம் குறித்து பெருமிதமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதுவரை ரூ. 7.3 லட்சம் கோடி கடனுதவி முத்ரா திட்டம் வாயிலாக சிறு, குறு தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் கடனுதவியால் தொழில் துறையில் உருவான வேலைவாய்ப்புகள் எத்தனை, ஈட்டப்பட்ட வருமானம் எவ்வளவு என்பது போன்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. 2018 நிதியாண்டில் மட்டுமே ரூ. 2.46 லட்சம் கோடி கடனுதவி முத்ரா திட்டம் வாயிலாக அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் விளைவுகள் குறித்தும் தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், முத்ரா கடனுதவித் திட்டம் வாராக்கடன்களுக்கு எளிய இலக்காக வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2018 நிதியாண்டில் மட்டும் முத்ரா திட்டத்தால் வங்கிகளின் வாராக்கடன் ரூ. 18,000 கோடியாக அதிகரித்துள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

சென்ற பட்ஜெட் அறிவிப்புகளில் நடைமுறைப்படுத்தப்பட்டவை குறித்த செயல் அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருப்பது நல்லது. ஆயினும் கடந்த பல ஆண்டுகளின் பட்ஜெட் அறிவிப்புகள் பலவும் முழுமையாக நிறைவேறாமலோ, நிலுவையிலோ உள்ளன. முந்தைய அனைத்து பட்ஜெட் அறிவிப்புகள் குறித்த செயல் அறிக்கையே முழுமையானதாக இருக்கும். ஆண்டுதோறும் திட்டங்களில் ஏற்படும் முன்னேற்றங்களைக் கணக்கிடாமல் சென்ற ஓராண்டுக்கான செயல் அறிக்கையை மட்டும் அளிப்பது அறிவுப்பூர்வமானதல்ல.

ரயில்வே துறையில் முதலீட்டுக்கும் லாபத்துக்குமான வேறுபாட்டு விகிதம், எதிர்பார்க்கப்பட்ட 95 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. வருவாய் உயராமல் லாபகரமான ரயில்வே இயக்கம் சாத்தியமில்லை. ஆனால், ரயில் பயணக் கட்டணத்தை உயர்த்த எந்த அரசும் விரும்புவதில்லை. இந்த பட்ஜெட்டும் ரயில்வே கட்டணங்களை உயர்த்துவதைத் தவிர்த்து, கவர்ச்சிகரமான பட்ஜெட்டாகி இருக்கிறது.

நாட்டின் நிதிப் பற்றாக்குறை கவலை அளிப்பதாக உள்ளது. சென்ற ஆண்டு பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவீதமாக எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், 0.1 சதவீதம் அதிகமாக, 3.4 சதவீதம் நிதிப் பற்றாக்குறை எட்டப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டிலும் இது 3.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த ஒரு நிதியமைச்சரும் மாநில அளவிலான நிதிப் பற்றாக்குறைகளை கவனத்தில் கொள்வதில்லை. அனைத்து மாநிலங்களிலும் நிலவும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டால் மத்திய, மாநில அரசுகளின் ஒட்டுமொத்த நிதிப் பற்றாக்குறை 6.5 சதவீதமாக அதிகரிக்கும். இதனை பட்ஜெட் தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.

நாட்டில் புழங்கும் கணக்கில் வராத பணமும், சொத்துகளும் தான், கருத்தில் கொள்ளப்படாத பெருமளவிலான இந்த நிதிப் பற்றாக்குறையை சமன்படுத்தி வருகின்றன. சரக்கு} சேவை வரி (ஜிஎஸ்டி) நிதிப் பற்றாக்குறையை சீராக்கும் என்ற மத்திய அரசின் கணிப்பு முழுமையாக செல்லுபடியாகவில்லை. 1998இல் எட்டப்பட்ட பொருளாதார உயர்வு நிலையை அதன்பிறகு எந்த அரசும் எட்ட முடியவில்லை.

நாட்டின் நிதிப் பற்றாக்குறையை மத்திய, மாநில அரசுகள் 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தாத வரை, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அதுவரை வரிவிதிப்பின் முழுமையான பயன்களை அடைய முடியாது.

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அரசு நிதியை உதவித்தொகையாக வழங்கியது போன்ற நடவடிக்கைகள், மாநில நிதிப் பற்றாக்குறையை மேலும் சீரழிவு நோக்கியே கொண்டுசெல்லும்.

இதுவரையிலும் வருமான வரிவிதிப்பில் பெருத்த மாற்றங்களைச் செய்ய எந்த அரசும் முற்படவில்லை. இம்முறை தேர்தல் ஆண்டாக இருப்பதால், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்தி ஜனரஞ்சகமான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டிருக்கிறார். மேலும் பல வருமான வரிச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றால் அரசுக்கு ரூ. 23,000 கோடி நிதியிழப்பு ஏற்படும்.

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவவனங்கள் இறக்குமதித் தீர்வையிலிருந்து விலக்கு கோருகின்றன. அதைக் கருத்தில் கொண்டே, நடுத்தர மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், வருமான வரிவிதிப்பில் இந்த அதிரடி மாற்றத்தை அரசு அறிவித்திருக்க வேண்டும். பெரும்பாலான அரசியல் கட்சிகள் வரிச் சீர்திருத்தத்தில் அக்கறையின்றி சலுகைகளில் கவனம் செலுத்திவரும் நிலையில், நிதியமைச்சர் இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இந்த அதிரடியை அறிவித்திருக்கிறார்.

இதுவரை இல்லாத வழக்கமாக, தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டை அனைத்துத் தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் பட்ஜெட்டாக நிதியமைச்சர் சமர்ப்பித்திருக்கிறார். இதனால் சமுதாயத்தின் பல பிரிவினரும் பலன் பெறுவதால், தேர்தலில் வாக்குகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

இதுவரை கண்டுகொள்ளப்படாத துறைகளுக்கும், சமூகப் பிரிவினருக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, குறிப்பாக ஏழை விவசாயிகளுக்கு உதவித்தொகை அளித்திருப்பது பாராட்டுக்குரியதே. ஆயினும், இதன்மூலம் ஊரகப் பகுதி மக்களுக்குச் செல்லும் அரசு நிதியுதவி, குடிப் பழக்கத்துக்கும், வீணான விரயச் செலவினங்களுக்கும் மடை மாறிவிடக் கூடாது. அரசு நல்ல நோக்கத்துடன் திட்டமிட்டாலும் அதைப் பயன்படுத்தும் மக்களிடமும் மாற்றம் தேவை.

அதேபோல, அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அனைவருக்கும் ஆனதல்ல. புதிய தொழிலாளர்களும், 60 வயதுக்கு மேல் உழைத்துக் கொண்டிருப்போரும் இதனால் பலன் பெற வாய்ப்புகள் குறைவு. இத்திட்டத்தின் பயனாளிகள் அதிக எண்ணிக்கையில் இருக்க மாட்டார்கள்.

இவை அனைத்தையும்விட, இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளை இப்போதே யூகிக்க முடியாது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய அரசுகள் மீது தாக்கம் செலுத்துவதாக, புத்திசாலித்தனமான இந்த பட்ஜெட் காட்சி தருகிறது. இந்த பட்ஜெட்டின் அறிவிப்புகளை நடைமுறைப்படுத்தத் தேவையான நிதி ஆதாரங்களை வரப்போகும் அரசு திரட்டியாக வேண்டும்.

அந்த வகையில் நிதியயமைச்சர் பியூஷ் கோயல் மக்கள் நலத்தில் அக்கறையுள்ள, கவர்ச்சிகரமான, ஓரளவு முழுமையான பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார். அடுத்து அமையும் எந்த அரசானாலும் இந்த அறிவிப்புகளைப் புறந்தள்ள முடியாது. இதுவே இந்த பட்ஜெட்டின் சாதகமான அம்சம்.

குறிப்பு:
கட்டுரையாளர், முன்னாள் நிதித் துறை செயலர்.

 

-தினமணி – 01.02.2019

Leave a comment