அவள் பராசக்தி!

24 Oct

அன்னையின் அணைப்பில்

முருகன் ஆகிறேன்.

அவள் பார்வதி.

 

என்னை வழிநடத்துகையில்

திருநாவுக்கரசர் ஆகிறேன்.

அவள் திலகவதி.

 

மணமேடையில் துணை நிற்கையில்

கிருஷ்ணன் ஆகிறேன்.

அவள் திரௌபதி.

 

என்னவளின் கமல இதயத்தில்

ராமன் ஆகிறேன்.

அவள் சீதை.

 

என்கரத்தில் மகவாய்த் தவழ்கையில்

பிருகு ஆகிறேன்

அவள் மகாலட்சுமி.

 

கொலுசதிர தளிர்நடை பயில்கையில்

மலையத்துவஜன் ஆகிறேன்.

அவள் மீனாட்சி.

 

கைத்தலம் பற்ற நீர் வார்க்கையில்

பெரியாழ்வார் ஆகிறேன்.

அவள் ஆண்டாள்.

 

உடல் தளர்ந்த ஆகாசராஜனாய்

மடியில் கிடக்கிறேன்.

அவள் பத்மாவதி.

 

என்னுயிராக மலர்கையில்

ஈசனாகிறேன்.

அவள் பராசக்தி!

 

Leave a comment