ஆன்மிகத் தேன்

21 Sep

மறைந்த பத்திரிகையாளர் கௌதம நீலாம்பரன் ‘ஞானபூமி’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், எளிய நடையும் செறிவான கருத்துகளும் கொண்டதாக உள்ளது.  

நரகாசுர சதுர்த்தியா, நரக சதுர்த்தியா? ஐயப்பன் வரலாறு,  சிவ வழிபாடு,  உதங்க மகரிஷிக்கு மானுட சமத்துவத்தைக் காட்ட கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல் (ஸ்ரீகிருஷ்ண தரிசனம்) உள்ளிட்ட கட்டுரைகளில் ஆசிரியரின் கனிந்த ஆன்மிக அறிவு வெளிப்படுகிறது. 

வசவண்ணர், நாராயண குரு, இளையான்குடி மாறனார், இயற்பகையார், மெய்ப்பொருள் நாயனார், குருஞான சம்பந்தர், அப்பய்ய தீட்சிதர், நீலகண்ட தீட்சிதர் உள்ளிட்ட அருளாளர்களின் வரலாறுகள், பக்தி உணர்வைப் பரப்புகின்றன. திருவல்லிக்கேணி, மாடம்பாக்கம், சங்கரன்கோவில், வடபழனி, எறும்பூர் போன்ற பல திருத்தலங்களைப் பற்றிய அரிய தகவல்களும் இந்நூலில் உள்ளன.

நூலின் பிற்பகுதியில் ‘ஞானத்தேனீ’ என்ற தலைப்பில் கேள்வி- பதில் பகுதி சிறப்பாக அமைந்துள்ளது. கடவுள் இருக்கிறாரா, அவருக்கு உருவம் உண்டா, இத்தனை கடவுள்கள் ஏன், கடவுளுக்கும் உறக்கம் வருமா, சன்னிதி- சந்நிதி இரண்டில் எது சரியானது, சம்ஸ்கிருதம் ஆரிய மொழியா, பிள்ளையார் வழிபாடு புதிதாகத் தோன்றியதா எனப் பல கேள்விகளை தாமே எழுப்பி, அதற்கு நூலாசிரியர் அளித்துள்ள விளக்கங்கள், ஆன்மிக ஐயங்களை அகற்றுகின்றன.

புராணக் கதைகளில் பொதிந்துள்ள தத்துவக் கருத்துகளை அறியாமல் குருட்டுத்தனமான சடங்குகளில் மக்கள் தள்ளாடுவதையும் பல கட்டுரைகளில் விமர்சிக்கிறார். இவரது ஆன்மிக விளக்கம் பகுத்தறிவுக்கு ஏற்றதாக அமைந்திருப்பது சிறப்பு.

***

ஞான விசாரணை  (ஆன்மிகக் கட்டுரைகள்)

கௌதம நீலாம்பரன்

364 பக்கங்கள், விலை: ரூ. 350, 

வெளியீடு:
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
32/ பி, கிருஷ்ணா தெரு (பாண்டி பஜார்),
தியாகராய நகர், சென்னை- 600 017.
போன்: 044- 2433 1510.

Leave a comment