நன்மையே வெல்லும்!

14 Oct

உலகை நாசம் செய்துவந்த மகிஷன் என்ற அசுரனை அழிக்க துர்கா தேவி 9 நாட்கள் போராடினாள்; இறுதியில் விஜயதசமி நன்னாளில் மகிஷனை சம்ஹரித்தாள் துர்க்கை. அப்போது தேவியின் படைக்கலங்களை பூஜித்து ஆயுத பூஜை கொண்டாடினர் தேவர்கள் என்கிறது தேவி பாகவதம்.

தனது  பிரிய மனைவி சீதையைக் கடத்திச் சென்ற இலங்கை வேந்தன் ராவணனை போரில் அயோத்தி ராமன் வென்ற நாளும் விஜயதசமியே என்று ராமாயணம் கூறுகிறது. 

12 ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து பஞ்ச பாண்டவர்கள் தங்கள் நாடு திரும்பிய நாள் விஜயதசமி. முன்னதாக, வன்னிமரத்தில் மறைத்து வைத்திருந்த தனது ஆயுதங்களை புரட்டாசி நவமி நாளில் மீட்டு வந்தான் அர்ஜூனன். கௌரவ சகோதரர்களால் வஞ்சிக்கப்பட்ட பாண்டவர்கள் தங்கள் ஆற்றலை மீண்டும் பெற்ற நாள் இது என்கிறது மகாபாரதம்.

நமது நாட்டின் தொன்மையான இலக்கியங்கள் யாவும், விஜயதசமியையும் அதற்கு முந்தைய ஆயுத பூஜையையும் நவராத்திரியையும் போற்றிச் சிறப்பிக்கின்றன.
இந்த உலகம் சீர்மையுடன் இயக்க வேண்டுமானால், மானுட குலத்துக்கு ஓர் ஒழுங்கும் கட்டுப்பாடும் தேவையாகிறது. வலியவன் எளியவனை நசுக்கினால் உலக வாழ்வின் சீர்மை கெடுகிறது. எனவேதான், வலிமை அல்ல – நல்லவை மட்டுமே உலகில் நிலைபெறும் என்று நமது இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் பல வகைகளில் வலியுறுத்துகின்றன.  

நமது ஆன்மிக, பக்தி நம்பிக்கைகள் அந்த அடிப்படையில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மகிஷ வதமும், ராவண வதமும், கௌரவ வதமும் காட்டுபவை, தீமை அழிந்து நன்மை நிலைபெறும் என்பதையே.
தர்மத்தின் பாதையில் நடைபயில்வதே நன்மை. அதுவே இந்த உலகை அச்சமின்றி வாழவைக்கும். 

துர்க்கையும், ஸ்ரீராமனும், பஞ்ச பாண்டவர்களும் பெற்ற வெற்றிகள் தர்மம் நிலைநாட்டப்பட்டதன் அடையாளங்கள்.  எனவேதான், நல்லவற்றை நிலைநாட்டிய வெற்றியாளர்களை கடவுளாகப் பூஜிக்கிறோம். 

விஜயதசமி நாளில் தமிழக ஆலயங்களில் அம்புசேர்வை விழா எடுத்து மகிழ்கிறோம். வட மாநிலங்களில் இதனை  ‘ராம்லீலா’வாகக் கொண்டாடுகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் துர்க்கா பூஜை பிரமாண்டமான திருவிழாவாக நடைபெறுகிறது.

புரட்டாசி மகாளய அமாவாசை முடிந்து, வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, நவமி திதி வரை 9 நாட்கள் மகிஷனை அழிக்க துர்க்கை போரிட்டாள். அந்த நாட்களை நாம் நவராத்திரி பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இந்த நாட்களில் விரதமிருந்து,  கொலு அமைத்து, தினசரி நைவேத்தியம் செய்து, தேவியரைப் பூஜிக்கிறோம். 

இச்சா சக்தியான துர்க்கையை முதல் மூன்று நாட்களிலும், ஞான சக்தியான லட்சுமியை அடுத்த மூன்று நாட்களிலும், கிரியா சக்தியான சரஸ்வதியை கடைசி மூன்று நாட்களிலும் வழிபடுவது தொன்றுதொட்ட வழக்கம். மகா நவமி திதியில் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடி, கலைமகளின் அருளை வேண்டுகிறோம். 

அதேநாளில் ஆயுத பூஜையையும் சேர்த்து கொண்டாடுகிறோம். நமது வாழ்க்கைக்கு உதவும் விவசாயக் ருவிகள், ஆயுதங்கள், தொழிலகக் கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள், கல்வியின் சின்னமான புத்தகங்கள், கலைகளின் வடிவமான இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றை இறைவடிவமாக வணங்குவது நமது மரபு.

விஜயதசமி நாளில் துவங்கும் எந்தச் செயலும் சிறப்பாகவும் நன்மையாகவும்  அமையும் என்பது நமது நம்பிக்கை. ஆகவே, நமது குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பதைத் துவங்கும் வித்யாரம்பத்தை இந்நாளில் துவங்குகிறோம்.

ஆல் போலத் தழைத்து, அருகு போல வேரோடி, வாழையடி வாழையாகத் தொடரும் நமது பாரம்பரியம். உலகிலேயே மிகப் பழமையான நமது தேசம் இன்றும் உயிர்ப்புடன் வாழ்வது ’தர்மமே வெல்லும்’ என்ற ஆதார ஸ்ருதியால்தான். 

தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் நன்மை வெல்ல வேண்டும். அதற்கு, நன்மையை நாடுவோர் வல்லமை பெற வேண்டும். அதற்கான ஆதாரத்தையும் உத்வேகத்தையும் அளிப்பவை நவராத்திரி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழாக்கள். இந்த நாளில் நம்மை வாழ வைக்கும் கலைகளையும் கருவிகளையும் பூஜிப்போம். 

பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்,
கமலத் திதழ்களிற் களித்திடும் கமலையும்,
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ!

-என்ற மகாகவி பாரதியின் “வந்தேமாதரம்’ பாடல் வரிகளை நினைவில் இருத்தி, சக்தியை வழிபடுவோம்!

தினமணி தொழில்மலர் (தருமபுரி) 14.10.2021

Leave a comment