லட்சிய வீரனின் பிரார்த்தனை

26 Jan

ஸ்வதர்மம் காக்கும் விரதம்

எம்மை வழிநடத்துகிறது.

எமது உள்ளத்தில்

ஏற்றப்பட்ட லட்சியதீபம்

எம்மை ஒளிமயமாக்குகிறது.

உலகம் மதிக்கும் தூய ஒழுக்கம்

எம்முள் உறைந்திருக்கிறது.

எமது பேரன்பின் வடிவமான

அன்னையே, எம்மை ஈன்றவளே,

உமக்கு பலகோடி வந்தனம்!

.

கடக்க இயலாப் பாதையையும்

நொறுக்க இயலாப் பாறையையும்

தளைக்க முயலும் உறவையும்

தடுக்க முனையும் உணர்வையும்

மறுக்க இயலா விருப்பையும்

எளிதில் வெல்லும் திண்மை

எமது நாட்டன்பால் விளைகிறது.

எமது வேருக்கு நீராய்

உறுதுணையான புண்ணியையே,

உமக்கு பலகோடி வந்தனம்!

 

வெல்ல இயலா ஆற்றலை

இறையருள் எமக்கு நல்குகிறது.

எமது ஒற்றுமையின் வலிமை

தேசத்தைப் பிணைக்கிறது.

உமது பிள்ளையென்ற எண்ணமே

பணிவையும் பண்பையும் கூட்டுகிறது.

விதைக்குள் உறங்கும் விருட்சம் போல

உலகை வெல்லும் ஆத்ம சக்தியை

எமக்கு நல்கும் மங்கலையே,

உமக்கு பலகோடி வந்தனம்!

 

நாடல்லாது எதுவும் எமதில்லை

எனும் சிந்தை உன் ஆதுரத்தால் விளைந்தது.

மானுடப் பிறவி நின்னருளால் மதிப்புற்றது.

கொடிய சோதனைகள் நின் சேவகன் எம்மை

மேலும் வைரமாக்குகிறது.

சங்கமாக எம்முடன் உலவுகிறது

உமக்கென ஏற்ற சங்கல்பம்!

என்னவளே, எமைக் காப்பவளே,

உலகின் தலைமகள் பாரதியே,

உமக்கு பலகோடி வந்தனம்!

 

எமக்குள் இயக்கமாய் நிறைந்தவளே,

எமக்கென்று இயக்கமாய் அமைந்தவளே,

எம் வாழ்வை இயக்கமாய் ஏற்றவளே,

உன்பொருட்டு இவ்வுடல் வீழட்டும் என்ற

எம் பிரார்த்தனை பலிக்கட்டும்!

நின் கருணைமலர்த் தாளில்

எமது வாழ்வு படையலாகட்டும்!

உன்பொருட்டு எம் வாழ்வும் சிறக்கட்டும்!

நூறு கோடி முகங்கள் கொண்ட அன்னையே

உமக்கு சகஸ்ர கோடி வந்தனம்!

 

 

-விஜயபாரதம் தீபாவளி மலர் 2020

One Response to “லட்சிய வீரனின் பிரார்த்தனை”

  1. அருமை

    Like

Leave a comment