ஆன்ம ஆற்றலை அடையும் வழி!

11 Apr

இன்றைய நவீன அறிவியலின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்தது, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாடு. ஆற்றலின் மதிப்பை அளவிட உதவும் இயற்பியல் கொள்கையான பொது சார்பியல் கோட்பாடு, பொருளின் நிறையையும் ஒளிவேகத்தின் இருமடங்கையும் பெருக்கினால் கிடப்பதே ஆற்றலின் மதிப்பு என்று அளவிடுகிறது. இதை சுருக்கமாக  E = mc2 என்ற சூத்திரமாக எழுதுவது வழக்கம். இது ஒரு வடிவியல் கணிதச் சமன்பாடாகும். அண்டத் தோற்றத்தை விளக்கும் அறிவியல் கொள்கையாக இச்சமன்பாடு அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மிகச் சிறிய துகளாலும்கூட  மிகப் பெரும் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் கண்டறிந்தார்.

பிரபஞ்சத்தின் போக்கை ஆராயும் விஞ்ஞானிகள், இந்தப் பிரபஞ்சத்தில் வாழும் உயிர்களின் அசைவுக்குள்ளும் அதன் ஆற்றல்கள் விளங்குகின்றன என்பதைக் கவனிப்பதில்லை என்கிறார் இந்நூலாசிரியர். இதனை உணராததாலேயே, ஐன்ஸ்டீனின் கோட்பாடு அணுகுண்டு தயாரிப்புக்கு உதவுவதில் முடிந்திருக்கிறது என்கிறார் இவர். ஒளியைக் கருத்தில் கொண்ட ஐன்ஸ்டீன் ஒலியையும் அதன் விளைவுகளையும் கருத்தில் கொண்டிருந்தால், பிரபஞ்ச அடிப்படை வினையாற்றல்களை ஆராய்ந்தது போலவே உயிர், உணர்வுகளையும் ஆராய்ந்து கூறியிருப்பார் என்கிறார் இவர்.

அவ்வாறு விஞ்ஞானிகள் ஆராய மறந்ததையே, மெய்ஞானிகளான சித்தர்கள் தமது உடலையே ஆய்வகமாக்கிக் கண்டறிந்துள்ளனர். அவர்கள் கண்டறிந்த மூவா மருந்துதான் மூச்சுப் பயிற்சி என்னும் சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் யோகக்கலை. இது ஓர் உடலியல் சார்ந்த அறிவியல் என்று கூறும்  முமாசெ, உடலியல், உளவியல், அண்டவியல் கொள்கைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஆராய்ந்து இந்நூலை எழுதி இருக்கிறார். தனது ஆய்வுக்கு உதவியாக விஞ்ஞானிகளின் ஆங்கிலச் சொற்களை எடுத்தாளும் நூலாசிரியர் அவற்றுக்குப் பொருத்தமான தமிழ்க் கலைச்சொற்களையும் உருவாக்கி இருக்கிறார்.

பொதுச் சார்பியல் கொள்கைக்கு இணையான மனிதச் சார்பியல் கொள்கையாக இவர் முன்வைப்பது, மனத்தையும் மூச்சின் இரட்டையையும் பெருக்குவதால் கிடைப்பது ஆன்ம ஆற்றல் என்பதாகும். இதன்விளக்கமாக 49 அத்தியாயங்களில் பல்வேறு தலைப்புகளில் இந்நூலை ஆக்கியிருக்கிறார்.  சித்தர்களின் மெய்ப்பொருள் தேட்டம் குறித்த ஞானமும் ஆர்வமும் உள்ளவர்களால் மட்டுமே இந்நூலைப் படிக்கவோ, புரிந்துகொள்ளவோ முடியும்.

உணவு முறை, சுய ஒழுக்கம், மூச்சுக்கலை ஆகியவற்றால் உடலைக் கட்டுக்குள் வைப்பவரின் மனம் கட்டுப்பாட்டில் இருக்கும். அவற்றின் பெருக்கத்தால் ஆற்றல் கைவசமாகும் என்பதே இந்நூலின்  பிழிந்த கருத்து.

***

சித்தர்களின் மனிதச் சார்பியல் கொள்கை

ஆசிரியர்: குருதேவ் முத்துக்கொத்தள மாரியப்ப செல்வராஜ் (முமாசெ)
 378 பக்கங்கள், விலை: ரூ. 300-

வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர், சென்னை – 600 017. போன்: 98409 32566

Leave a comment