இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை

19 Apr

டாக்டர் விஜய் பட்கர்

டாக்டர் விஜய் பட்கர்

கணினி இல்லாத உலகை இனிமேல் கற்பனை செய்ய இயலாது. அதன் அடுத்தகட்ட வளர்ச்சிதான் மீத்திறன் கணினி எனப்படும் சூப்பர் கம்ப்யூட்டர்கள் (Super Computers). அதிவேக கணக்கீடுகள், செயற்கை அறிவாண்மை, விரைவுத்தேடல் ஆகியவற்றை குணங்களாகக் கொண்ட சூப்பர் கம்யூட்டர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. விவசாயிகளுக்கான வானிலை அறிவிப்பு முதல் ராணுவப் பயன்பாடு வரை இதன் எல்லைகள் விரிந்துள்ளன.

உலக அளவில் சூப்பர் கம்ப்யூட்டர் 1962-இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்தியாவில் மிகத் தாமதமாகவே அறிமுகமானது. எனினும், இதைப் பயன்படுத்த அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தது. 1980-களில் இந்தியாவுக்கென தனித்த சூப்பர் கம்ப்யூட்டர்களின் தேவை உணரப்பட்டது.

1985-இல் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனிடம், இதற்கு உதவுமாறு வேண்டினார். ஆனால், இந்தியா இத்துறையில் வளர்வதை அமெரிக்கா விரும்பவில்லை. தவிர, சூப்பர் கம்ப்யூட்டர்கள் ராணுவ சேவையில் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், இந்தத் தொழில்நுட்பத்தை வழங்க மறுத்த அமெரிக்கா, நிறைவேற்ற இயலாத பல நிபந்தனைகளை விதித்தது.

அதையடுத்து, நமக்கென சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்க வேண்டும் என்ற தன்மான உணர்வு இந்திய அரசிடம் ஏற்பட்டது. அந்தப் பணி, மிகப் பொருத்தமான விஞ்ஞானியிடம் பிரதமரால் ஒப்படைக்கப்பட்டது. அவர்தான்,  ‘இந்திய சூப்பர் கம்ப்யூட்டர்களின் தந்தை’ என்று வர்ணிக்கப்படும் டாக்டர் விஜய் பட்கர்.

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தில் ஒருவராக, மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டம், முராம்பா கிராமத்தில் 1946, அக். 11-இல் பிறந்தார் விஜய் பாண்டுரங் பட்கர். பெற்றோர் இருவரும் கல்வியில் சிறந்தவர்களாக இருந்தும், மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று கிராம சுயராஜ்ஜியத்துக்காகப் பணிபுரிய வேண்டி முராம்பா கிராமத்துக்கு வந்தவர்கள்.

அங்கு ஆரம்பக் கல்வி முடித்த பட்கர், நாகபுரியிலுள்ள விஸ்வேஸ்வரையா தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. படித்தார் (1965). பிறகு, பரோடாவிலுள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் எம்.இ. படித்தார் (1968). அடுத்து, தில்லியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வியகத்தில் (ஐஐடி) பிஎச்.டி. பட்டமும் படித்து முடித்தார் (1972).

அப்போதுதான் (1971) விஞ்ஞானி எம்.ஜி.கே.மேனனின் தலைமையில் மின்னணுவியல் ஆணையம் துவங்கியிருந்தது. அதில் பட்கர் விஞ்ஞானியாகச் சேர்ந்தார். கணினியின் முக்கிய உறுப்பான ‘மைக்ரோ ப்ராசஸர்’ தொடர்பான ஆராய்ச்சிகளில் விஜய் பட்கர் ஈடுபட்டார்.

1980-களில் திருவனந்தபுரத்தில் செயல்பட்ட கெல்ட்ரான் நிறுவனம் தேசிய அளவில் மின்னணுவியல் புரட்சியை உருவாக்கியது. அங்கும் பட்கர் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் தான் பிரதமர் ராஜீவ் காந்தியால், சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிக்கும் பணி பட்கரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்காக, அரசின் நிதியுதவியுடன், மத்திய உயர்கணினி மேம்பாட்டு மையம் (Centre for Development of Advanced Computing- C-DAC) பட்கரை இயக்குநராகக் கொண்டு, 1988-இல் புணேவை தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது.

பட்கர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவின் கடும் உழைப்பால், ‘பரம் 8000’  என்ற  சூப்பர் கம்ப்யூட்டர் 1991-இல் உருவாக்கப்பட்டது.

பரம் யுவா2

பரம் யுவா2

அதைத் தொடர்ந்து, சூப்பர் கம்ப்யூட்டர்களின் திறன் மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சிகள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக, பரம் 8600, பரம் 9900/எஸ்எஸ், 1998-இல் பரம் 10000, 2003-இல் பரம் பத்மா, 2008-இல் பரம் யுவா, 2013-இல் பரம் யுவா2 ஆகிய அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டன.

2013, பிப். 8-இல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பரம் யுவா2 சூப்பர் கம்ப்யூட்டர், சி-டாக் மையத்தால் ரூ. 16 கோடி செலவில் மூன்றே மாதங்களில் உருவாக்கப்பட்டது. இதன் வேகம் 524 டெரா பிளாப்; இதன் தரவு தேக்கும் திறன் 200 டெரா பைட் ஆகும்.

இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களால் இந்தியாவின் கணினித் துறையில் பெருத்த மாறுதல்கள் நிகழ்ந்தன. தவிர, பல்வேறு உயர் ஆராய்ச்சித் துறைகளின் மேம்பாட்டுக்கும் இவை பேருதவி புரிந்து வருகின்றன.

வானியல், வானூர்திப் பொறியியல், வானிலை கணிப்பு, உயிர்த் தகவலியல், பேரிடர் மேலாண்மை, மருந்தியல், பாதுகாப்பு, அறிவியல் தகவல் பகுப்பாய்வு உள்ளிட்ட துறைகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

ஐஐடி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் ‘தேசிய அறிவு வலைப்பின்னல்’ மூலம் இந்த சூப்பர் கம்ப்யூட்டர்களால் இணைக்கப்பட்டுள்ளன. இவை கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

1985-இல் இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தைத் தர மறுத்த அமெரிக்கா அதன்மூலமாக இந்தியர்களின் திறமைக்கு சவாலை ஏற்படுத்தியது. இன்று உலக நாடுகள் பலவற்றில் 51 ‘பரம்’ சூப்பர் கம்ப்யூட்டர்கள் இயங்குகின்றன. இதை ஒரு சிறந்த அறிவு வர்த்தகமாகவே விஜய் பட்கர் வளர்த்துள்ளார்.

புதிய நிறுவனங்கள் உதயம்:

விஜய் பட்கர் கணினி விஞ்ஞானி மட்டுமல்ல. அவர் உயர் நிறுவனங்களை உருவாக்கி வளர்ப்பதில் தேர்ந்த நிறுவனர். தேசிய பரம் மீத்திறன் கணினி வசதி மையம் (National Param Supercomputing Facility- NPSF – 1999), சூப்பர் கம்ப்யூட்டர்களின் தொகுப்பான கருடா கிரிட், தேசிய அறிவு வலைப்பின்னல் (National Knowledge Network- 2009), வீடுகளுக்கு கல்வி (Education To Home- ETH- 1998), சர்வதேச தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (International Institute of Information Technology- I2IT- 1998), சர்வதேச பலமைய பல்கலைக்கழகம் (Multiversity- 2000) ஆகியவற்றை விஜய் பட்கர் நிறுவியுள்ளார். இவை அனைத்தும் புணேவை மையமாகக் கொண்டு இயங்குகின்றன.

திருவனந்தபுரத்தில் மின்னணுவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் (Electronic Research and development Centre- ER&DC- 2001), இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் (IITM-K- 2000) ஆகியவையும் பட்கரால் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகளின் தலைவர், இயக்குநர், ஆலோசகர் போன்ற பொறுப்புகளில் அவர் தொடர்ந்து வழிகாட்டி வருகிறார்.

12 நூல்களை எழுதியுள்ள விஜய் பட்கர், 6,000 விஞ்ஞானிகள் அங்கம் வகிக்கும் “விஞ்ஞான பாரதி’ அமைப்பின் தேசியத் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பு மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுவதுடன், ஆராய்ச்சியாளர்களிடம் சுதேசி மனப்பான்மையை வளர்ப்பதை குறிக்கோளாகக் கொண்டு இயங்கி வருகிறது.

தேசிய ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் விருது (1984-85), 1992-ஆம் ஆண்டின் மின்னணுவியல் மனிதர், மகாராஷ்டிர பூஷன் (1999-2000), பத்மஸ்ரீ (2000), பீட்டர்ஸ்பர்க் விருது (2004), ராமானுஜர் அறக்கட்டளை விருது (2007), துறவி ஞானேஸ்வர் உலக அமைதி விருது (2010), ஜிண்டால் விருது (2012), பத்மபூஷண் (2015) உள்ளிட்ட பல கெüரவங்களை விஞ்ஞானி விஜய் பட்கர் பெற்றுள்ளார்.

ஒரு நொடிக்குள் பத்தாயிரம் கோடியே கோடி கணக்கீடுகளைச் செய்யக் கூடிய அதிமீத்திறன் கணினி (Exascale Computing) தொடர்பான ஆராய்ச்சிகளில் பட்கர் தற்போது ஈடுபட்டுள்ளார். தவிர, பல உயர் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமைப்பீடத்தை அவர் அலங்கரித்து வருகிறார். இந்திய அரசின் அறிவியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (சிஎஸ்ஐஆர்) நிர்வாகக்குழு உறுப்பினராகவும் பட்கர் உள்ளார்.

மனித மூளை அளவற்ற சக்தி மிகுந்தது. அதை முறைப்படிப் பயன்படுத்தினால் ஆக்கப்பூர்வமான சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கான மிகச் சரியான உதாரணம் விஜய் பட்கர்.

“படித்த இளைஞர்கள் பசித்தவன் போலவும் பித்துப் பிடித்தவன் போலவும் அலைய வேண்டும்; அவர்கள் நாட்டுக்கும் உலகுக்கும் உதவும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். 2047-இல் இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின்போது உலகின் முதன்மை நாடாக நாம் இருப்போம்” என்கிறார் விஜய் பட்கர்.

 

-தினமணி இளைஞர்மணி (19.04.20.16)

.

 

 

Leave a comment