பல தலைமுறை விஞ்ஞானிகளை உருவாக்கியவர்

19 Jul

கே.ஆர்.ராமநாதன்

கே.ஆர்.ராமநாதன்

இந்திய விஞ்ஞானிகள் சிலரது பெயரைக் கூறுமாறு சொன்னால் உடனே நமக்கு நினைவுக்கு வருபவை சர் சி.வி.ராமன், ஜெகதீச சந்திர போஸ், விக்ரம் சாராபாய், ஹோமி பாபா போன்ற சிலரது பெயர்கள் தான். அத்தகைய மூத்த தலைமுறையினருடனும் பணிபுரிந்து, அடுத்து பல தலைமுறை விஞ்ஞானிகளையும் வளர்த்தெடுத்த விஞ்ஞானியான கே.ஆர்.ராமநாதனை அறிவியல் மாணவர்களே தெரிந்திருப்பதில்லை. அவரது வாழ்வே ஒரு விஞ்ஞான வேள்வியாகும்.

இன்றைய கேரளத்தின் பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தியில், சமஸ்கிருத அறிஞர் ராமகிருஷ்ணா- சுப்பலட்சுமி தம்பதியரின் புதல்வராக, 1893, பிப். 28-இல் பிறந்தார் ராமநாதன். கல்பாத்தி ராமகிருஷ்ணா ராமநாதன் என்ற பெயரே கே.ஆர்.ராமநாதன் ஆனது.

13 வயதில் தாயை இழந்த ராமநாதன், தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். மிக விரைவிலேயே, 4 சகோதரிகள், பார்வையற்ற பாட்டி ஆகியோரைக் காப்பாற்றும் குடும்பப் பொறுப்பு அவருக்கு வந்தது. ஆயினும், படிப்பில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். கல்பாத்தி கிராமப்பகுதியில் அவரது பள்ளிக்கல்வி கழிந்தது. பாலக்காடு விக்டோரியா அரசு கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்ற (1914) அவர், சென்னை மாநிலக் கல்லூரியில்  இயற்பியலில் எம்.ஏ. பட்டம் (1917) பெற்றார்.

பட்ட நேர்முகத் தேர்வில் அவரது அறிவாற்றலைக் கண்ட பேராசிரியர் ஸ்டீவன்சன், அவரை திருவனந்தபுரத்தில் உள்ள மஹாராஜா அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரியப் பரிந்துரைத்தார். அதை ஏற்று, அங்கு பணியில் சேர்ந்த ராமநாதன், அங்கிருந்த சிறு வானிலை ஆய்வகத்தில் ஆய்வுகளில் ஈடுபட்டார். அதைக் கண்ட அரசு, அவரை திருவனந்தபுரம் வானாய்வகத்தின் கௌரவ இயக்குநராக நியமித்தது.

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான சந்திரசேகர் வெங்கட்ராமனுடன் (பின்னாளில் சர் சி.வி.ராமன்) ராமநாதன் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்ட அவர், 1921-இல் ராமன் அழைப்பை ஏற்று அவர் ஆய்வு செய்துகொண்டிருந்த கொல்கத்தாவுக்குச் சென்று, உடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஒளிச்சிதறல், திரவங்களில் எக்ஸ் கதிர்களின் விலகல் ஆகியவை குறித்த ஆய்வுகளில் ராமனுக்கு அவர் துணைபுரிந்தார். அந்த ஓராண்டில் அவர் எழுதிய 10 ஆய்வறிக்கைகளைப் பரிசீலித்த சென்னை பல்கலைக்கழகம், முதல்முறையாக டி.எஸ்சி. பட்டத்தை அவருக்கு வழங்கியது (1922).

இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தான் நோபல் பரிசு பெறக் காரணமான ஒளிச்சிதறல் கோட்பாடுகளை பின்னாளில் ராமன் உருவாக்கினார். அந்த ஆய்வுகளில் உடனிருந்த மற்றொரு விஞ்ஞானி, கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன். (ராமன் விளைவு எனப்படும் இந்த ஒளிச்சிதறல் கண்டுபிடிப்பு நிகழ்ந்த நாள் (1928, பிப். 28), ராமநாதனின் பிறந்த நாள் என்பது அரிய ஒப்புமையாகும். இந்நாள் தான் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது).

1922-இல் ரங்கூன் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக அவர் இணைந்தார். எனினும், ராமனின் ஆராய்ச்சிகளிலும் உதவி புரிந்து வந்தார். இந்திய வானிலைத் துறை, அவரை முதுநிலை விஞ்ஞானியாக 1925-இல் நியமித்தது. அன்றுமுதல், அங்கிருந்து 1948 வரை அங்கு பலவிதமான வானிலை ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்கு பணி ஓய்வு பெற்றபோது, அதன் தலைமை இயக்குநராக உயர்ந்திருந்தார்.

அப்போது, மற்றொரு மூத்த விஞ்ஞானியான விக்ரம் சாராபாயின் அழைப்பை ஏற்று, 1947-இல் அகமதாபாதில் துவங்கியிருந்த இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் (PRL) முதல் இயக்குநராகவும் வளிமண்டல இயற்பியல் பேராசிரியராகவும் பொறுப்பேற்றார். 1966 வரை அங்கு அந்தப் பொறுப்பை மிகவும் திறம்பட நிறைவேற்றியதுடன்,  பி.ஆர்.எல்.லை மிகச் சிறந்த ஆய்வகமாக உருவாக்கினார். அங்கிருந்து ஓய்வு பெற்ற பிறகும், இறக்கும் வரை அதன் மதிப்புறு பேராசிரியராகத் தொடர்ந்தார்.

ராமநாதன் பலதுறை மேதை. எனினும், அவரது வானிலையியல் கண்டுபிடிப்புகளே அவருக்கு மிகுந்த புகழைத் தந்தன. சூரியனும் வளிமண்டலக் கதிர்வீச்சும், இரவு வானில் நிறப்பிரிகை, வானிலை சார்ந்த ஒளி-ஒலியியல், புவிகாந்தவியல், நிலநடுக்கவியல், இந்திய பருவநிலைகள், இந்திய கடலில் தோன்றும் சூறாவளி, புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், வெப்ப நீரோட்டங்கள் தொடர்பான அவரது ஆய்வு முடிவுகள் இத்துறையில் முதன்மையானவையாகத் திகழ்கின்றன. புவியின் வளிமண்டலத்தை செங்குத்தான வெப்ப மண்டலங்களாக வகுத்து அவர் அளித்த விளக்கம் (Zonal Vertical Thermal Structure of the Earth’s Atmosphere) இன்றும் அடிப்படை ஆதாரமாக உள்ளது.

வெப்ப மண்டல நாடுகளின் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அவற்றின் தொடர்விளைவுகளை முழுமையாக ஆராய்ச்சி செய்து ராதாகிருஷ்ணன் பல முக்கிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் (NGRI) நிறுவப்பட அவரது ஆர்வமே காரணம். மத்திய புவி இயற்பியல் வாரியம், இந்திய புவி இயற்பியல் சங்கம் ஆகியவற்றின் தலைவராக பல ஆண்டுகள் அவர் பணியாற்றினார்; கொடைக்கானலில் உள்ள வானாய்வகத்திலும் சிலகாலம் பணிபுரிந்தார். அவரது ஊக்குவிப்பால்தான் காவலூரிலும் ரங்கப்பூரிலும் வானாய்வகங்கள் நிறுவப்பட்டன.

வளிமண்டலத்தில் உள்ள ஓஸோன் படலம் குறித்து ஆய்வு செய்த முதல் இந்திய விஞ்ஞானி ராமநாதன் தான். அதுதொடர்பாக தொடர்ச்சியாக 50 ஆண்டுகள் ஆய்வு செய்தவரும் அவரே. வானிலை மாற்றங்கள், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றுக்கும் ஓஸோனுக்கும் உள்ள தொடர்பை உறுதியான புள்ளிவிவரங்களால் நிறுவினார். தவிர, அயன மண்டல ஆய்விலும் அவர் ஈடுபட்டார்.

பி.ஆர்.எல்.லில் அவர் பணியாற்றியபோதுதான், தும்பாவில் ராக்கெட் ஏவுதளமும், திருவனந்தபுரத்தில் விண்வெளி ஆய்வு மையமும் அமைக்கப்பட்டன. இப்பணிகளில் விக்ரம் சாராபாயுடன் அவர் துணைநின்றார். தும்பாவில் வானிலை ஆய்வுப் பணிகளையும் அவர் தொடர்ந்தார்.

வானிலை துறையிலிருந்து ஓய்வு பெற்றபோதும், அதன் வளர்ச்சியில் தொடர்ந்த கவனம் செலுத்தி வந்தார் ராமநாதன். அவரது முயற்சியால், நாடு முழுவதும் டாப்ஸன் ஓஸோன் ஸ்பெக்ட்ரோபோட்டோ மீட்டர் கருவிகள் பல மையங்களில் நிறுவப்பட்டு, அவற்றின் மூலமாக ஓஸோன் அள்வு மதிப்பிடப்படுகிறது. கதிர்வீச்சு அளவிடும் நிலையங்களும் அவரது முயற்சியால் நாடு முழுவதும் நிறுவப்பட்டன.

புவி இயற்பியலின் பல துறைகளான வானிலையியல், நீரியல், புவிகாந்தவியல், கடலியல், அயன மண்டல இயற்பியல் துறைகளிலும் தீவிர கவனம் செலுத்திய ராமநாதன், இத்துறைகளில் இளம் விஞ்ஞானிகள் பலரை உருவாக்கினார்.

இந்திய வானிலையியல் துறையை மறுசீரமைக்க உருவாக்கப்பட்ட பகவந்தம் குழுவின் உறுப்பினராக இருந்தபோது, பல பரிந்துரைகளை அவர் அளித்தார். அதன்படி, வெப்ப மண்டல வானிலையியலுக்கான இந்திய கல்வி மையம் (IITM), இந்திய விண்வெளி இயற்பியல் மற்றும் புவி காந்தவியல் கல்வி மையம் (IIAII) ஆகியவை உருவாக்கப்பட்டன.

ராமநாதனின் அறிவியல் சேவை, தேச எல்லை கடந்து மதிக்கப்படுகிறது. அவர் சர்வதேச வானிலையியல் அமைப்பின் கௌரவ ஆய்வாளராக 1960-இல் நியமிக்கப்பட்டார். இந்திய தேசிய அறிவியல் அகாதெமி அவருக்கு ஆரியபட்டா விருதை 1977-இல் வழங்கியது. இந்திய அரசின் பத்ம பூஷண் (1965), பத்ம விபூஷண் (1976) விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்திய அறிவியல் அகாதெமியின் மதிப்புக்குரிய ராமன் இருக்கை பேராசிரியராக 1980-இல் ராமநாதன் அமர்த்தப்பட்டார்.

அவர் பணியில் இருந்தபோதும், ஓய்வு பெற்ற பிறகும், அகமதாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் விஞ்ஞானிகள், பிரமுகர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் குழுமி இருப்பார்கள். கனிவான தனது தலைமைப் பண்பால் பல தலைமுறை விஞ்ஞானிகளை ராமநாதன் ஆரவாரமின்றி உருவாக்கினார்.

இந்திய அறிவியல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களான ஹோமி ஜஹாங்கீர் பாபாவும் (1966), விக்ரம் சாராபாயும் (1971) அகால மரணம் அடைந்தபோது, நிலைகுலையாமல் இந்திய விஞ்ஞானிகளை வழிநடத்தியவர் கே.ஆர்.ராமநாதன். அந்தவகையில், இந்திய அறிவியல் உலகின் நிலைத்த சக்தியாக அவர் விளங்கினார்.

1984, டிச. 31-இல் அவர் மறைந்தார். ஆயினும், அவரது அடியொற்றி இளம் விஞ்ஞானிகள் குழு, அவர் அமைத்த பாதையில் தொடர் ஆய்வுகளில் ஈடுபடுகிறது.

 

-தினமணி இளைஞர்மணி (19.07.2016)

.

 

Leave a comment