இமைக்கணம்: ஜெயமோகன் நிகழ்த்தும் அற்புதம்!

7 Apr

1. //முன்பு ஒருகாலத்தில் சிறுகுட்டையில் வாழ்ந்த ரஜதன் என்னும் மீன் மேலிருந்து குனிந்து தன்னை நோக்கிய முனிவரிடம் துயருடன் சொன்னது “நான் கலங்கிய நீரின் அலைகளால் சூழப்பட்டிருக்கிறேன். அதையே அருந்துகிறேன். அதையே நோக்குகிறேன். அதனால் மறைக்கப்பட்ட உலகையே காணும்படி அமைந்துள்ளது என் வாழ்க்கை.”

முனிவர் அதனிடம் சொன்னார் “இனியவனே, உன் நீரை கலக்கிக் கொண்டிருப்பது நீயேதான்.” ரஜதன் திடுக்கிட்டு “நான் ஒரு கணமும் செதிலும் வாலும் ஓய முடியாது. நீரில் மூழ்கி இறப்பேன்” என்றது. முனிவர் “அவ்வண்ணமென்றால் நீ இந்தக் கலங்கலையே அடைந்தாகவேண்டும்” என்று திரும்பிச் சென்றார்.//

2. //அலைஓயாத பெருங்கடல்மேல் வாழ்பவன் நான் என்று ஒரு மாலுமி சொன்னான். கரையிலமர்ந்திருந்த இல்லறத்தான் புன்னகைத்து அலை ஓயாத புவிமேல் நானும் வாழ்கிறேன் என்று சொன்னான்.
.
பெருங்கடல் தாண்டி வந்தமர்ந்த பறவையிடம் கடலோரம் அலையெண்ணி அமர்ந்திருந்த இல்லக்கோழி கேட்டது, எந்த அலையிலிருந்து நீ பறக்கத் தொடங்கினாய் என்று. தொடங்கிய அலையிலேயே எப்போதும் பறந்துகொண்டிருக்கிறேன் என்று அது மறுமொழி சொன்னது.//

3. //அறியப்படாமையும் அறியவொண்ணாமையும் அறிவுகடந்தமையும் அறிவே. அறிவிலமர்ந்தவர் அறிவென அதையே கொள்வர். அறிபொருள் அறிவோன் அறிவு எனும் மும்மையழிந்த நிலையில் அது நிலைகொள்கிறது.

சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.

நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப்படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன.

அவ்விசை உணரப்படுகையில் மானுடருக்குரியவையாகின்றது. காமம் சினம் விழைவு என சொல்கொள்கின்றன. அனைத்தையும் மறைக்கும் திரையாகின்றன. அனைத்தும் தானாகித் தோன்றுவதனூடாக பிறிதெதையும் காட்டாதவையாகின்றன.
.
ஐம்புலன்களையும் ஆளும் காமமும், சினமும், விழைவும் கால்களும் விழிகளும் அற்றவை. ஆணவமே அவற்றின் ஊர்தி. ஆணவத்தை வென்றவன் அம்மூன்றையும் ஆள்கிறான். காற்றிலா கருவறையில் நிலைகொள்ளும் சுடர் என அகம் கொண்டிருப்பான். அவன் காண்பவை துலங்கும்.//

-எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தினந்தோறும் இணையத்தில் எழுதிவரும் வெண்முரசு தொடரில், பதினேழாவது நூலில், 13-வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட வரிகள். படைப்பூக்கத்தின் உச்சியில் ஜெயமோகன் இருப்பதைக் காட்டுகின்றன.

காண்க: https://www.jeyamohan.in/107881#.Wsh4wefYXIU

2014, பிப்ரவரி 19-இல் ஜெயமோகன் தனது இணையதளத்தில் மகாபாரத மீளுருவாக்கப் பணியை ‘வெண்முரசு’ என்ற பெயரில் துவக்கினார். கடந்த நான்காண்டுகளில் சில நாட்கள் தவிர்த்து, வெண்முரசு தொடர் தொடர்ந்து வெளியாகி இருக்கிறது. உண்மையிலேயே இது மிகவும் கடிமனான உழைப்பும், அதீத பலதுறை ஞானமும் கலந்த பணி. தமிழுக்கு ஜெ.மோ அளித்துள்ள அற்புதமான ரத்தினமாக ‘வெண்முரசு’ விளங்குகிறது.

இவை நூலாக வெளியாகி பெருத்த வரவேற்பை இளைய தலைமுறையிடம் பெற்று வருகின்றன. ஆனால், தமிழ் இலக்கிய உலகில் பிரதான இடத்தில் இருப்போர் யாரும் வெண்முரசு குறித்து அறிந்திருக்கின்றனரா என்பது சந்தேகம் தான்.

இதுதொடர்பாக சில செய்திகள் தவிர, பெரும்பாலான பத்திரிகைகளில் செய்தியோ, மதிப்பிடுகளோ இதுவரை வரவில்லை என்பது, நமது மந்தத் தன்மையின் வெளிப்பாடே. சொல்லப்போனால், பல்கலைக்கழக அளவில் ஆராய்ச்சி செய்வதற்குரிய தகுதி கொண்ட மாபெரும் புதினவெளியை – மகாபாரத புத்துருவாக்கத்தை ஜெ.மோ. அளித்து வருகிறார். நமது கல்வியாளர்கள் இனியேனும், ‘வெண்முரசு’ பக்கம் பார்வையைத் திருப்பட்டும்!

வெண்முரசு புதின வரிசையில் என்னை மிகவும் கவர்ந்ததாக இதுவரை ‘நீலம்’ இருந்தது. இப்போது அந்த இடத்தை ‘இமைக்கணம்’ பிடித்துக்கொண்டு விட்டது. கண் இமைக்கும் நேரத்தில் வாழ்க்கை திசை மாறுவதை மிகவும் அழகாக படம் பிடிக்கிறார் ஜெ.மோ. அவரது கற்பனை ஆற்றலும், துள்ளுதமிழ் நடையும், தத்துவ விசாரணையும், பாரதக் கதை மீதான அனுபவச் செறிவும் பின்னி, மின்னி ஒவ்வொரு வரியிலும் விளையாடுகின்றன. இயல்பில் இது ஓர் அசுர (தேவ?) சாதனை.

நைமிசாரண்ய வனம் என்ற கருதுகோளுடன், மகாபாரத நாயகர்களை மறுபரிசீலனைக்கு உள்ளாக்கும் நூதன வடிவில், கண்ணிமை மூடித் திறப்பதற்குள் ஒரு ஜென்மம் வாழ்ந்த நிறைவை யமன் வாயிலாக உணர்த்தும் திறனும், அதற்கு கிருஷ்ணரின் பயன்பாடும் வியக்க வைக்கின்றன. அவருடன் சிறிதேனும் தொடர்பு உள்ளவன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்ளும் தருணம் இது.

இமைக்கணம்- அற்புதமான படைப்பு; வெண்முரசு வரிசையில் தனித்து நிற்கும் புதினமாக மிளிரப் போகும் இலக்கியம். கண்ணிமைக்கும் நேரமே நமது வாழ்க்கை. அதற்குள் இந்த அரிய படைப்பை படிப்பதும், ரசிப்பதும், அனுபவித்து மகிழ்வதும் அவசியம். .

3 Responses to “இமைக்கணம்: ஜெயமோகன் நிகழ்த்தும் அற்புதம்!”

  1. t.duraivel (@tdvel) April 17, 2018 at 3:29 PM #

    மிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். வெண்முரசு தொடரில் தத்துவ உச்சமாக இப்பகுதி இருப்பதை அழகாக கூறியிருக்கிறீர்கள். இமைக்கணம் என்ற இப்பகுதியை அவர் எழுதப் பயன்படுத்தும் உத்தி மிகவும் நுண்மையானது. வாசகனின் மிகக் கூரிய கவனத்தைக் கோருவது. அத்தகைய வாசிப்பை நீங்கள் இதற்கு கொடுத்திருக்கிறீர்கள். மேலும் இப்படி அதனை விரித்து எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    தண்டபாணி துரைவேல்.

    Like

Trackbacks/Pingbacks

  1. இமைக்கணம்: ஜெயமோகன் நிகழ்த்தும் அற்புதம்! – TamilBlogs - April 7, 2018

    […] 5 mins ago பொது Leave a comment 1 […]

    Like

  2. நவீன வியாசருக்கு நன்றி! | வ.மு.முரளி - July 20, 2020

    […] காண்க: இமைக்கணம் நிகழ்த்தும் அற்புதம் […]

    Like

Leave a comment