நள்ளிரவின் நளினம்

16 Jul

 

நகரின் ஏகாந்த அழகு
நள்ளிரவில் மட்டுமே புலப்படும்.

புகை கக்கும் வாகனங்கள் இல்லாத,
ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் தென்படாத,
தெருநாய்கள் சுதந்திரமாகக் கிடக்கும் சாலையில்,
மின்னி மின்னி எரியும் தெருவிளக்குகளினூடே,
ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குப்பைகளைத் தாண்டி,
மெல்லிய ஈரம் கலந்த காற்றை சுவாசித்தபடியே
இருபுறமும் பூட்டியுள்ள வீடுகளைக் கடந்து,
தெருவில் எதிர்ப்படும் கூர்க்காவை நலம் விசாரித்து,
கருமை படர்ந்த மரங்களின் அமைதியை ரசித்தபடி,
ஒருநாள் சென்று பாருங்கள்-
நகரின் ஏகாந்த அழகு புலப்படும்.

ஏகாந்தம் என்றால் என்னவென்று அறிய
நள்ளிரவை ரசியுங்கள்!
ஊரே அடங்கி இருக்கும் மௌன ஆழத்தில்
உங்கள் காலடியின் லயத்தை செவிகூருங்கள்.
வாழ்வென்பது தனிப் பயணம் என்பதை
நள்ளிரவு சொல்லிக் கொடுக்கும்.

இருளுக்கு அஞ்சாதீர்கள்-
பகலிலும் அஞ்ச மாட்டீர்கள்!

Leave a comment