நவீன வியாசருக்கு நன்றி!

20 Jul

தமிழின் தற்கால எழுத்தாளர்களில் முதலிடம் வகிப்பவர் திரு. ஜெயமோகன். சிறுகதை, புதினம், வாழ்க்கை வரலாறு, சிறுவர் இலக்கியம், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், திரைக்கதை வசனம் எனப் பல துறைகளிலும் எழுதிக் குவித்திருப்பவர். இவர் இதுவரை எழுதியுள்ள 100-க்கு மேற்பட்ட நூல்களைப் படிக்கவே நமக்கு நேரம் போதாது. அன்னை கலைவாணியின் அருள் முழுவதும் பெற்ற பெருந்தகை.

2010 முதலாகவே இவரது இணையதளத்தின் தினசரி வாசகன் நான். இவரது படைப்பாற்றலில் வியந்தது போலவே, இவரது அரசியல் பார்வையின் போதாமையை எண்ணி வருந்தவும் செய்திருக்கிறேன்.  இவரது அரசியல் நிலைப்பாடுகள் வலிந்து திணிக்கும் தற்காப்புக் கொள்கையில் எனக்கு கிஞ்சித்தும் உடன்பாடில்லை. இரு தருணங்களில் அதுபற்றி ஜெ.மோ.விடமே நான் விவாதித்தும் இருக்கிறேன். ஆயினும் இவரது தளத்தின் தொடர் வாசகன் நான். ஜெ.மோ.உடன் நேரடித் தொடர்பும் உண்டு. எனது நெருங்கிய நண்பர்கள் பலர் இவரது நெருங்கிய வட்டத்தில் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் சிலர் இருக்கிறார்கள். ஆயினும் அந்த நெருங்கிய நண்பர் குழாமில் நான் சேரவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. எனது பாதை தனிப்பாதை. அதேசமயம், ஜெயமோகன் என்னும் எழுத்துலக மன்னரின் இலக்கிய ராஜபாட்டையில், ஓரமாக நின்று பூத் தூவும் எளிய மனிதன் நான்.

கடந்த 2014 ஜனவரி 1-ஆம் தேதி, ஒரு மாபெரும் இலக்கிய சாதனையை அவர் சத்தமின்றித் துவக்கினார். பாரத மண்ணின் பெருமைக்குரிய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை நவீனத் தமிழ் வடிவில் புதிய கருத்துச் செறிவுடன், ‘வெண்முரசு’ என்ற புதினங்களின் தொடராக ஜெயமோகன் எழுதத் தொடங்கினார்.

இதுபற்றி அப்போதே, எனது இந்தத் தளத்தில் நான் பதிவு செய்திருக்கிறேன்.

காண்க: ஜெயமோகனின் வெண்முரசு

தனது ஜெயமோகன்.இன் என்ற இணையதளத்தில் தினந்தோறும் ஒரு அத்தியாயம் வீதம் பத்தாண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒரு புதினமாக  இதை எழுதப்போவதாக ஜெ.மோ. முன்னறிவிப்பு செய்திருந்தார்.

காண்க: வியாசனின் பாதங்களில்…

தற்போது, குறித்த காலத்துக்கு முன்னதாகவே இந்த வெண்முரசு புதின நிரையை, 26 புதினங்களுடன் 2020 ஜூன் 16-ல் நிறைவு செய்திருக்கிறார்.

காண்க: வெண்முரசு நிறைவு

இந்த ஆறரை ஆண்டுகளில் சில நாட்கள் தவிர, ஜெ.மோ. தளத்தில் வெண்முரசு அத்தியாயங்கள் வெளியாகி வந்தன. பெரும்பாலும் அந்த அதியாயங்களை அன்றன்று இரவே சுடச்சுட படித்து முடித்து விடுவது என்  வழக்கம். சில தவிர்க்க முடியாத நாட்களில் தவற விட்டவற்றையும் சேர்த்துப் படித்துவிடுவேன். அவ்வப்போது அவை தொகுக்கப்பட்டு நூல்களாகவும் முன்வெளியீட்டுத் திட்டத்தில் வெளியாகின. என்னிடம் இந்த புதின வரிசையில் 8 நூல்கள் உள்ளன.

உண்மையிலேயே இது ஓர் அசுர சாதனை. இந்த 6 ஆண்டுகள், 7 மாதங்களில் சுமார் 25,000 பக்கங்களுக்கு மேற்பட்ட மாபெரும் இலக்கியத்தைப் படைத்திருக்கிறார் ஜெ.மோ. அதுவும் வழக்கத்துக்கு மாறான புதிய தமிழ் நடையில். சில இடங்களில் தத்துவ விசாரணை, சில இடங்களில் அழகியல் ரசனை, சில இடங்களில் வரலாறு, சில இடங்களில் வர்ணனை, சில இடங்களில் தர்க்கம், சில இடங்களில் கவித்துவத்தின் சிகரத்துக்கே சென்று விடுவார். இது ஜெ.மோ. எழுதியதல்ல, எழுதவைக்கப்பட்டது என்றே நான் நம்புகிறேன். இறையாற்றல் இல்லாமல் இந்தச் சாதனையை நிகழ்த்துதல் அரிது.

இந்தப் புதின வரிசையில் வரும் கதைகள் மகாபாரதத்தின் தொடர்ச்சியானவை. ஆயினும் ஒவ்வொரு புதினமும் தனிப் புதினமாகவே மிளிர்கிறது. அதைவிட, சில அத்தியாயங்களே தனிச் சிறுகதைகள் என்று சொல்லத்தக்க வகையில் மிளிர்கின்றன.

இந்த மாபெரும் இலக்கியத்தைப் படைத்த இதே காலத்தில்தான் பல திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனமும் ஜெ.மோ. எழுதி இருக்கிறார்; பல இலக்கிய விமர்சனங்களையும் அரசியல் விமர்சனங்களையும் முன்வைத்தார்; வேறு பல நூல்களையும், இதே காலத்தில் இவர் எழுதி இருக்கிறார். அவற்றின் எழுத்து நடை வெண்முரசு நடையை சற்றும் பிறழச் செய்யவில்லை. உண்மையிலேயே இது ஒரு தவம்.

ஜெ.மோ.வின் வெண்முரசு 26 நூல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சில நூல்கள் இரு பாகங்கள் கொண்டவை. இவற்றில் சில இன்னமும் அச்சு வடிவம் பெறவில்லை. இநத்ப் புதினங்களின் தலைப்புகளே, எழுத்தாளரின் தகவாண்மையை வெளிப்படுத்துகின்றன:

1. முதற்கனல்

2. மழைப்பாடல்

3. வண்னக்கடல்

4. நீலம்

5. பிரயாகை

6. வெண்முகில்நகரம்

7. இந்திரநீலம்

8. காண்டீபம்

9. வெய்யோன்

10. பன்னிரு படைக்களம்

11. சொல்வளர்காடு

12. கிராதம்

13. மாமலர்

14. நீர்க்கோலம்

15. எழுதழல்

16. குருதிச்சாரல்

17. இமைக்கணம்

18. செந்நா வேங்கை

19. திசைதேர் வெள்ளம்

20. கார்கடல்

21. இருட்கனி

22. தீயின் எடை

23. நீர்ச்சுடர்

24. களிற்றியானை நிரை

25. கல்பொருசிறுநுரை

26. முதலாவிண்

இவற்றில் கவித்துவத்தின் உச்சம் என்று நீலத்தையும், தர்க்கத்தின் உச்சமென்று இமைக்கணத்தையும் சொல்வேன். என்னை மிகவும் கவ்ர்ந்தது இமைக்கணமே. கண்மூடித் திறப்பதற்குள் ஒரு வாழ்வு நடந்து முடிந்துவிடுகிறது. இழந்த நாளைத் திரும்பப் பெற விழையா மனிதர் உலகில் இல்லை. இமைக்கணமேனும் திரும்ப வராது. அவ்வாறு வந்தால் எவ்வாறு இருக்கும்? இந்தப் புதினத்தைப் படித்தால் தெரியும்.

காண்க: இமைக்கணம் நிகழ்த்தும் அற்புதம்

இந்த நூலின் ஒரு குறை, போர்க்களம் நடுவே பரந்தாமன் பார்த்தனுக்கு சொன்ன பகவத்கீதை தனி நூலாகப் படைக்கப்படாததுதான். இது எழுத்தாளரின் தனியுரிமை என்று சொல்லலாம். என்னால் ஏற்க முடியவில்லை.

போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை
    புகன்றதெவருடைய வாய்? – பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
    தேவி மலர்த்திரு வாய்.

-என்ற மகாகவி பாரதியின் வைர வரிகளை மனதில் இருத்தியவன் என்ற அடிப்படையில், இந்தப் புதினத் தொடரின் ஆகப் பெரிய குறை இது எனச் சுட்டுகிறேன்.

கீதையின் உபதேசங்களை தனது புதினத்தொடரில் ஜெ.மோ. ஆங்காங்கே தூவினாலும், அது தனி நூலாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். மகாபாரதத்தை முழுமையாகப் படைத்தவர்கள் யாருமில்லை என்ற கருத்தை தனது வெண்முரசு-26வது புதினத்தில் முன்வைத்த ஜெ.மோ, இந்த இடைவெளியை வரும் காலத்தில் நிச்சயம் உணர்வார். அதனை தனி நூலாகப் படைக்க எண்ணி இருக்கிறாரோ என்னவோ?

எப்படி இருப்பினும் ஒரு மாபெரும் சாதனை தமிழ் எழுத்துலகில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், இஞ்சி தின்ற குரங்குகள் போல தமிழ் எழுத்தாளர் சமூகம் அமைதி காக்கிறது. இதுவே வேறு ஒரு மொழியில் நிகழ்ந்திருந்தால் அந்த எழுத்தாளரை தலையில் தூக்கிவைத்து அந்த மொழியினர் கொண்டாடி இருப்பார்கள். ஜெ.மோ.வின், துரதிர்ஷ்டம் அவர் தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் சாதனை செய்தது. போதாக்குறைக்கு இவரது இலக்கிய, அரசியல் கருதுகளால் புண்படாதவர்கள் குறைவு என்பதால், இவரது இலக்கிய சாதனை கண்டுகொள்ளாமல், கள்ள மௌனத்துடன் கடந்து செல்லப்படுகிறது. அதனால் ஜெ.மோ.வுக்கு என்றும் நட்டமில்லை.

மகாகவி பாரதியையே வாழும் காலத்தில் துரத்திய ஈனப்பிறவிகளின் நிலம் தமிழகம். இங்கு வக்கனைப் பேச்சுகளும் வாய்ஜாலங்களும் அரியணை ஏறியதால், தாய்த் தமிழ்மொழி தடுமாறுகிறது. ஆனால், காலம் இப்படியே நீடிக்காது. ஜெயமோகன் அவர்களின் இந்த மகத்தான சாதனை அதற்குரிய மரியாதையை நிச்சயம் பெறும். அறிவுத்திறனும் நல்கிய உழைப்பும் என்றும் காலத்தால் மதிப்பிடப்படும்.

இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் எந்த உயரிய விருதும் ஜெ.மோ.வுக்குக் கிடைக்கவில்லை. அதுபற்றி அவருக்கும் வருத்தமில்லை. ஆனால், தகுதியான உழைப்புக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படாவிட்டால், விருதை வழங்கும் அமைப்புகளுக்கு மதிப்பிலாது போய்விடும். இனியேனும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் சிந்திக்க வேண்டும்.

இந்த வெண்முரசு புதினங்களின் நிறைவு, எனைப் போன்ற ஜெ.மோ. ரசிகர்களுக்கு ஒருவகையில் பெரும் இழப்பு. இனி வரும் நாட்களில் வெண்முரசைப் படிக்க இயலாது என்பது, இணையதளத்தைத் திறக்கும்போதுதான் புரிபடுகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப ஜெ.மோ. வேறு வடிவில் எழுவார். அதற்கு இறையருள் துணை நிற்கட்டும்.

தென்னிலம் மீண்ட சீர்ஷன் என்ற மாந்தரை உருவகமாக நிறுத்தி, கண்ணன் பிள்ளைத்தமிழுடன் தனது புதினத் தொடரை நிறைவு செய்திருக்கிறார் தென்குமரிவாழ் எழுத்தாளரான ஜெயமோகன். ‘யுக யுகந்தோறும் நான் பிறப்பேன்’ என்ற குரல், வெண்முரசின் இழையாக ஒலிக்கிறது.

நவீன வியாசருக்கு நன்றி!

 

Leave a comment