கவிதைக்கு தலைப்பெதற்கு?

22 Mar

கவிதைக்கு தலைப்பெதற்கு?

கவிதையே வார்த்தையாக இருக்கும்போது

தனி வார்த்தைத் தலைப்பெதற்கு?

எழுத்துகளை வார்த்தையாக்கி

வார்த்தைகளைப் பத்தியாக்கி

பத்திகளைப் பக்கங்களாக்கி

பக்கங்களை நூல்களாக்கும்

வித்தகக் கவிஞருக்கு

பெயரும் எதற்கு?

.

அவர் எழுதுவதெல்லாம் கவிதைகள்.

அவர் தும்மினாலும் கூட.

அவர் எழுதாமல் உள்ளத்தில்

ஒளித்து வைத்திருப்பவையும் கவிதைதான்.

எழுதியனவைப் போலவே எழுதாதவையும்

புரியப் போவதில்லை என்பதனால் அல்ல;

புரியும் வார்த்தைகள் கவிதை அல்ல

என உணர்ந்த முக்கால ஞானி

அல்லவா அவர்?

.

என்ன எழுதினாலும்,

எப்போது எழுதினாலும்

எங்கே எழுதினாலும்

எதனை எழுதினாலும்

கவிதையாக அவரருகே வந்து

காத்து நிற்கும் வார்த்தைகள்.

எழுதாதபோது?

வேதனையில் விம்மித் துடிக்கும்

வார்த்தைகளின் மௌனம்

செவிடர்களுக்குக் கேட்பதில்லை.   

Leave a comment