பள்ளி மாணவர்களை விஞ்ஞானியாக்கும் இஸ்ரோவின் ‘யுவிகா’ திட்டம்

23 Mar

‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆண்டுதோறும் 9ஆம் வகுப்புப் படிக்கும் 150 மாணவர்களைத் தேர்வு செய்து ‘இளம் விஞ்ஞானி கார்யக்கிரமம்’ (யுவிகா) என்ற பெயரில் சிறப்புப் பயிற்சி அளிக்கிறது.

அதிகமான மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (STEM) ஆகியவற்றில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி, நாட்டிலுள்ள பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் அறிவியல் ஆர்வமுள்ள எந்த மாணவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 10 முதல் ஏப்ரல் 20 வரை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விருப்பமும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் இஸ்ரோவின் இணையதளத்தில் (https://www.isro.gov.in) விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அறிவியல் சங்கத்தில் உறுப்பினர், தேசிய மாணவர் படை உறுப்பினர், பள்ளி மற்றும் மாவட்ட அளவில் அறிவியல் போட்டிகள், கண்காட்சிகளில் பரிசு பெற்றது, மத்திய, மாநில அரசுகளின் அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்பு ஆகிய தகுதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ‘யுவிகா 2022’ என்ற உறைவிடப் பயற்சி வகுப்பு, ஏப். 16 முதல் மே 28 வரை நடத்தப்பட உள்ளது. இந்த வகுப்புகளில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பயற்சி அளிக்க உள்ளனர். இதில் கலந்துகொள்ளும் மாணவர்களின் போக்குவரத்து, உறைவிடச் செலவுகளை இஸ்ரோவே ஏற்கிறது.

விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்- திருவனந்தபுரம், யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையம்- பெங்களூரு, விண்வெளிப் பயன்பாட்டு மையம்- அகமதாபாத், தேசிய தொலையுணர்வு மையம்- ஹைதராபாத், வடகிழக்கு விண்வெளிப் பயன்பாட்டு மையம் – ஷில்லாங் ஆகிய இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு, இஸ்ரோவின் இணையதளத்தைக் காணலாம்.

தினமணி – இளைஞர்மணி (22.03.2023)

Leave a comment