கும்பல் வெறியாட்டம்

27 Jul

கடந்த ஜூன் 17 அன்று, கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தனியார் பள்ளிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறை வடிவெடுத்ததும், அதில் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டிருப்பதும் கடுமையாகக் கண்டிக்கத் தக்கவை. மக்களின் கும்பல் வெறியாட்டம் நமது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.

அரசும் காவல் துறையும் தகுந்த நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்திருந்தால் இந்தப் போராட்டம் நிகழாமலே தடுத்திருக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. போராட்டம் முற்றுவதற்கு முன்னமே அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம். பள்ளியில் பெருந்திரள் கூடுவதை காவல் துறை தடுத்திருக்கலாம். எல்லாம் உண்மைதான். அதற்காக, இந்த வன்முறை வெறியாட்டத்தை ஒருபோதும் ஏற்க இயலாது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூன் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவு வரும் வரை யாரும் முன்முடிவுகளுடன் பதற்றத்தை உருவாக்கும் வகையில் வதந்திகளைப் பரப்பக் கூடாது. இங்குதான் காவல் துறையும் உளவுத் துறையும் சூழ்நிலையைக் கணிக்கத் தவறிவிட்டன. சமூக ஊடகங்களின் மூலம் வதந்தியைப் பரப்பி, ஆயிரக் கணக்கானோரைத் திரட்டியவர்களின் நோக்கம் நியாயத்துக்காகப் போராடுவதல்ல, அந்தப் பள்ளியை கடுமையாக சேதப்படுத்துவதுதான் என்பதை, அங்கு பதிவான காட்சிகள் வெளிப்படுத்துகின்றன.

நேரிய தலைமையற்ற போராட்டங்கள் இறுதியில் இவ்வாறு இலக்கை இழந்து வீணாவது புதிதல்ல. இதற்கு தமிழகத்திலேயே பல உதாரணங்கள் உண்டு. 2018இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டம் கலவரமாக மாறியபோது போலீஸôர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதை யாரும் மறக்க முடியாது.

2017இல் சென்னையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2020} 21இல் தில்லி எல்லையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டமும் வன்முறையாக மாறியபோது, போராட்டக்காரர்களின் தார்மிக நியாயங்கள் அடிபட்டுப்போயின. தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சிறுபான்மையினர் 2020இல் நடத்திய போராட்டமும் நாட்டில் பல இடங்களில் கலவர வடிவம் எடுத்தது. இவை அனைத்திலும் புலப்படும் விஷயம், கும்பல் மனநிலை எந்தப் போராட்டத்துக்கும் நல்லதல்ல என்பதே.

தனியாளாக உள்ள ஒருவர் குழுவாகச் சேரும்போது தனக்கு பெரும் வலிமை கிடைத்துவிட்டதாக உணர்கிறார். அது அறவழிப் போராட்டமாக இருக்கும் வரையில் நிச்சயம் வலிமையே. ஆனால், குழுவானது கும்பலாக மாறும்போது, அதை தவறாக வழிநடத்திவிட முடியும் என்பதுதான் கும்பல் மனநிலையின் ஆபத்து. அதுவும் வதந்திகளை காட்டுத்தீப் போல பரப்பும் சமூக ஊடகக் காலத்தில் நாம் வாழ்கிறோம். அவற்றில் வரும் தகவல்கள் உண்மைதானா என்று தெரியாமலே அதை பிறருக்கு அனுப்புவதை ஒரு கடமை போலச் செய்கிறோம். அதன் விளைவுகள் எவ்வளவு மோசமானவை என்பதையே கனியாமூர் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை காட்டியிருக்கிறது.

மக்களாட்சி முறையில் மக்களின் அதிருப்தியை அரசுக்குத் தெரியப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. கோரிக்கை மனு அளித்தல், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், வேலைநிறுத்தம், கடையடைப்பு, தொடர் போராட்டம் போன்றவை அறவழியில் நிகழ்த்தப்படுபவை. இந்தப் போராட்டங்களை ஆயுதமாக்கியே, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தி தலைமையில் போராடி நாம் சுதந்திரம் பெற்றோம். இந்த அறவழிப் போராட்டத்தில் வன்முறை ஓர் அங்கமாக எக்காலத்திலும் இருக்க முடியாது.

இதற்கு மகாத்மா காந்தியின் வாழ்வே மிகச் சிறந்த முன்னுதாரணம். 1920இல் அவர் துவக்கிய ஒத்துழையாமை இயக்கம்தான் ஆங்கிலேயருக்கு எதிராக நாடு முழுவதும் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற முதல் அறவழிப் போராட்டம். அப்போராட்டம் உ.பி.யின் செüரிசெüரா என்ற இடத்தில் வன்முறை வடிவெடுத்து, காவல் நிலையத்தை அப்பகுதி போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அதில் 22 காவலர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, உடனடியாக ஒத்துழையாமை இயக்கம் நிறுத்தப்படுவதாக மகாத்மா காந்தி அறிவித்தார்.

அதனால் நாடு முழுவதும் மகாத்மா காந்திக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், போராட்டம் வன்முறையாக மாறும்போது மக்களுக்கு அறவழியில் நம்பிக்கை இல்லை என்பது உறுதியாவதால் அதனை நிறுத்துவதாக மகாத்மா காந்தி விளக்கம் அளித்தார்.

அறவழிப் போராட்டம் என்பது அரசுடன் மோதும் ஆடு புலி ஆட்டமோ, அரசைப் பணியச் செய்வதற்கான மிரட்டலோ அல்ல. அது அரசுடன் உரையாடுவது என்பதே மகாத்மா காந்தியின் கருத்து. அறவழிப் போராட்டத்தில் முடிவு உடனடியாகக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் போராடுபவரிடம் தார்மிக நியாயம் இருந்தால் மட்டுமே தொடர்ந்து போராடி வெல்ல முடியும் என்பதையே அவரது வரலாறு கூறுகிறது.

கனியாமூரில் நடந்திருப்பது போராட்டமே அல்ல. அங்கு காவல் துறையினரின் கண்ணெதிரில் பகல்கொள்ளை நடந்தேறி இருக்கிறது. வன்முறையாளர்களின் தாக்குதலில் காவலர்கள் பலரும் காயம் அடைந்திருக்கிறார்கள். நிலைமை கைமீறிப் போகவே, கலவரக்காரர்கள் பள்ளியைக் கொள்ளையிட்டதையும், வாகனங்களை எரித்ததையும், பள்ளிச் சொத்துகளை சேதப்படுத்தியதையும் போலீஸார் வேடிக்கை பார்க்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

காவல் துறை மீதான மதிப்பு குறையும் நாட்டில் அமைதி நிலவ முடியாது என்பதற்கு அண்டைநாடான இலங்கையில் நிகழ்ந்துவரும் கலவரங்களே சாட்சி. அதேபோல கும்பல் மனநிலை எக்காலத்திலும் நல்லதல்ல என்பதும் கனியாமூர் வன்முறை சொல்லும் உண்மை.

One Response to “கும்பல் வெறியாட்டம்”

  1. 123456nrs July 27, 2022 at 9:10 PM #

    Vaazhththukal NRS

    Like

Leave a comment