மறக்க முடியா மக்கள் தலைவர்!

27 Jul

-ஹாரி ஷெரிடன்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்  மறைந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்டன. இன்றும் நாம் அவரைக் கொண்டாடுகிறோம்; அவரது பொன்மொழிகளைநாம் நினைவுகூர்கிறோம். இதுவரையிலான குடியரசுத் தலைவர்களில் மிகவும் நேசிக்கப்பட்டவரான டாக்டர் அப்துல் கலாம், இந்திய ஏவுகணைத் திட்டங்களின் கதாநாயகரும்கூட.

அவர் பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் அசாதாரணமான புகழ்வட்டம் அவரைச் சூழ்ந்திருந்தது. பலதரப்பட்ட பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மத்தியில் அவர் மிகவும் எளிமையைக் கடைபிடித்தார். அவரது பெருந்தன்மை, வெளிப்படையான குணம், மிகுந்த நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை விளக்கவே முடியாது. அவர், மனிதநேயம், அறிவாற்றல், நன்னடத்தை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரிப்பவராக மிளிர்ந்தார்.

தோட்டக்காரர்கள், உதவியாளர்கள், காவல் துறையினர், மெய்க்காவலர்கள், லிஃப்ட் இயக்குவோர், குழாய் செப்பனிடுவோர், சமையல்காரர்கள் உள்ளிட்ட ராஷ்ட்ரபதி பவனில் உள்ள அனைத்துப் பணியாளர்களும், தங்கள் நலம் மீது மிகுந்த அக்கறை கொண்ட, நட்புணர்வு மிகுந்த குடியரசுத் தலைவராக அவர் திகழ்ந்ததை நன்றியுடன் கூறுகின்றனர். அவரது காலத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை அகத்திலும் புறத்திலும் புதிய மாற்றம் கண்டது.

அவர்கள் பலரும் பெரும்பான்மையாகச் சொல்வது, தங்கள் ஒவ்வொருவருடைய பெயரையும் டாக்டர் கலாம் நினைவில் வைத்திருந்ததைத் தான். அவர் ஒவ்வொரு பணியாளரையும் பெயரைச் சொல்லி அழைப்பார். அப்போது அவர்கள் முகம் ஒளிவீசுவதை நான் நேரில் கண்டிருக்கிறேன். இது ஒன்றும் நம்ப இயலாத மிகைப்படுத்தல் அல்ல. ராஷ்ட்ரபதி பவனில் பணியாற்றிய எங்களைப் பொருத்த வரை, துணிச்சல், பதவிக்குப்  பொருத்தமான தன்மை, நிமிர்ந்த தோற்றம், நட்புணர்வு, நேர்மை ஆகிய பண்புகளின் ஒட்டுமொத்த உருவமாகவே அவர் விளங்கினார்.  

நள்ளிரவு உறங்கச் செல்லும் வரை, நீண்ட நேரம் அவர் பணியாற்றுவார். அதிகாலையில் தேநீர் அருந்தும்போதே செய்தித்தாள்களைப் படித்துவிடுவார். காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு இடைவேளைகளின்போதும்கூட அலுவலகக் கோப்புகளைப் பார்வையிடுவார்; நிகழ்ச்சிகளில் சொற்பொழிவாற்றுவதற்கான உரைகளையும் அப்போது அவர் தயாரிப்பார். நாள் முழுவதும் மக்களைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை. பணியாளர்கள் அறிக்கைகளைப் படிப்பதையும், கடிதங்கள், மின்னஞ்சல்களைத் தெரியப்படுத்துவதையும் எந்த நேரத்திலும் அவர் அனுமதிப்பார். அரசின் எந்த முடிவும் தேங்கிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததே அதற்குக் காரணம்.

அவரைப் பற்றி மக்களிடையே நிலவும் பொதுத்தோற்றத்துக்கும் அவரது தனிப்பட்ட தோற்றத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதும் உண்மை. ஆனால் அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே அவரது வெளிப்படுத்தப்படாத உணர்ச்சிகள் தெரியும்.

அரசுமுறைப் பயணமாக தமிழ்நாடு செல்லும் போது, நேரம் இருக்குமானால் ராமேஸ்வரத்துக்கு குறுகிய கால விஜயம் இடம்பெற்றுவிடும். அங்கு தனது சகோதரர் மற்றும் குடும்பத்தாருடன் அளவளாவுவார். மேலும், தனது சகோதரர் மூலமாக பெருமளவு நிதியை தேவையானோருக்கு வழங்கி, அவர்களது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தார் டாக்டர் கலாம்.  அதன்மூலமாக, அவர்களது வாழ்க்கையை உயர்த்துவதை தனது பிரதானக் கடமையாகக் கொண்டிருந்தார் அவர்.  

கலாம் தனது சகோதரர் கூறும் நெடுங்கதைகளை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பார். அண்டைவீட்டுக்காரர்கள், நல்ல வேலையிலிருக்கும் பட்டதாரி இளைஞர்கள், சமூகத்தில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், நமது வாழ்வுக்கு முன்னும் பின்னுமான நிலைமைகள், ராமேஸ்வரத்தில் வாழ்வோர்,  அங்கிருந்து வெளியேறியோரின் சமுதாய வளர்ச்சி நிலைகள், கோயில்கள், புனிதப் பயணிகளின் அனுபவங்கள், சமய ஒற்றுமை என அந்த நெடுங்கதைகள் நீளும்.

ஒருமுறை ராமேஸ்வரம் சென்று திரும்புகையில்,  ‘எனது அண்ணன் கூறும் கதைகளை விரும்புகிறீர்களா?’ என்று கேட்டார். அவர் கேள்வியை முடிப்பதற்கு முன்னதாகவே  ‘உங்களைவிட நன்றாக கதை சொல்கிறார் சார்’ என்று நான் சொன்னேன். அதைக் கேட்டவுடன் உரக்கச் சிரித்தார்.  ‘காலம் விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. எனவே மூத்தவர்கள் தங்கள் கருத்துகளைக் கூற அனுமதிப்பதன் மூலமாக, அவர்களது உணர்வுகளை நம்மால் பகிர்ந்துகொள்ள முடியும்.  நான் சொல்வது சரிதானே?’ என்றார் அவர்.  ‘நாம் அவர்களது கருத்துகளைப் பொறுமையுடன் கேட்பதுதான் மனிதநேயத்தை வெளிப்படுத்துவதாகும்”’ என்று நான் ஒப்புக்கொண்டேன். அவரது சிந்தனையில் பொதிந்திருந்த இந்த மனிதநேயமே, ராக்கெட் தயாரிப்பில் பயன்படும் எடை குறைந்த, வலிமையான உலோகக் கலவையைக் கொண்டு ஊனமுற்றோருக்கு உதவும் லேசான செயற்கைக்கால்களைத் தயாரிக்க, அவரை உந்தித் தள்ளியிருக்கிறது.

டாக்டர் கலாம் அவர்கள் எப்போதும் நல்லதையே சிந்தித்தார்; எப்போதும் நம்பிக்கையுடன் செயல்பட்டார். அவர் யதார்த்தவாதி. வெறுப்புணர்வையோ, தவறான முன்முடிவுகளையோ, மாயைகளைத் தொடர்வதையோ நம்புபவர் அல்ல. தைவானைச் சார்ந்த ஹிஸுவான் சுவாங் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இந்திய} பாகிஸ்தான் உறவு குறித்து கலாம் அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது, அவரது நம்பிக்கை வெளிப்பட்டது.  ‘ஐரோப்பிய ஒன்றியம் போல வருங்காலத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயல்படக் கூடும்’ என்றார் அவர்.  

பெரும்பாலான நேரங்களில் நாம் மனிதர்களை தவறாக மதிப்பிட்டு விடுகிறோம். அது சரியல்ல என்பதை கலாம் அவர்கள் சிறு சிறு நிகழ்வுகளில் நமக்கு கற்பித்து விடுகிறார். தான் சந்திக்கும்  அனைவரிடமும் உரையாடுவதை அவர் பழக்கமாகக் கொண்டிருந்தார். ஓட்டுநர்கள், பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், உதவியாளர்கள் என தனது அலுவலக ஊழியர்கள் அனைவரிடமும் அவர் இயல்பாகப் பேசுவார்.  சில சமயங்களில் அவர் அவ்வாறு உரையாடும்போது, எதிர்த்தரப்பில் முழுமையான ஆர்வத்துடன் பதில்கள் வருவதில்லை என்பதைக் கண்டேன். அவர்கள் அச்சத்தாலோ,  பணிவாலோ அவருடன் பேசுவதைத் தவிர்ப்பதாக நான் நினைத்தேன். அதனை அவரிடமே கூறவும் செய்தேன்.

டாக்டர் கலாம் போன்ற உயர்ந்த மனிதர் தங்களிடம் பேசுகையில் அவர்கள் அதை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த வேண்டாமா? அவர்களிடம் இருந்த இந்தத் தவறான குணம் எனக்குப் புரியவே இல்லை. எனவே அடிக்கடி அவர்களிடம் நலம் விசாரிக்க வேண்டாமே என்றும் வேண்டுகோள் விடுத்தேன். உடனே   ‘நான் என்ன பயமுறுத்தும் தோற்றத்துடனா இருக்கிறேன்?’ என்று சிரித்தபடியே கேட்ட கலாம்,  ‘சிலருக்கு எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைந்து விடுவதில்லை’ என்றார். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. ஒவ்வொருவருக்கும் மோசமான நாட்கள் உண்டு. காலப்போக்கில், ராஷ்ட்ரபதி பவன் ஊழியர்கள் பலர், கலாம் அவர்களுடன் உரையாடவும், தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும் தாமாக முன்வருவதைக் கண்டேன்.  

கலாம் போல, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மீது தனிப்பட்ட ஆர்வம் காட்டிய வேறொரு குடியரசுத் தலைவரை  ராஷ்ட்ரபதி பவன் அதுவரை கண்டதில்லை.  ‘அழகிய பொருட்களை அதிகமான மக்கள் நேசிப்பதானால், இந்த உலகம்தான் அதற்கு மிகப் பொருத்தமான இடம்’ என்று புருவங்களை உயர்த்தியபடி டாக்டர் கலாம் அடிக்கடி கூறுவதுண்டு.  ‘எனவேதான் என்னால் இயன்றவரை இந்த அழகிய தோட்டம் குறித்து மக்களுக்கு விளக்கவும், எனது கவிதைகள் வாயிலாகக் கூறவும் முயல்கிறேன்’ என்றார் அவர்.

கலாம் அவர்களின் கவிதைகள் தனித்துவமானவை. வாழ்க்கையின் நேர்மறையான அம்சங்களை எளிமையான சொற்களில் கவிதையாகத் தீட்டிக் காட்டுவார். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த பெரும் சக்தி குறித்த பதிவு அவரது கவிதைகளில் பெரும்பாலும் இடம்பெறும். அது அளவற்ற அருளாளன் மீதான அவரது நன்றியுணர்வை வெளிப்படுத்தும்.

‘கலாம் அவர்களின் கவிதை வரிகளை இதயத்திலிருந்து கேட்டால்,  ஒவ்வொரு கவிதையும் உலகிற்கு வலுவான சேதி ஒன்றைச் சொல்வது புரியும். மாபெரும் செயல்பாடுகளை அவர் முன்னிறுத்துகிறார். அதில் அவர் சற்றும் விட்டுக் கொடுப்பதில்லை’ என்று கூறுவார்,  தைவானைச் சார்ந்த சமயத் தலைவரும் கலாம் அவர்களின் நண்பருமான கவிஞர் யூ ஹ்ஸி.

யூ ஹ்ஸியின் சிந்தனையிலும், கலாமின் வழிகாட்டலிலும் உருவான சமய ஒருமைப்பாட்டுக்கான அறிவார்ந்த குடிமக்களின் சங்கமான  ‘ஃபியூரெக்’ அமைப்பு அதன் நோக்கங்களை நிறைவுசெய்யும் வகையில் இயங்குகிறது. தமிழின் ஆகச் சிறந்த இலக்கியமான திருக்குறளை, கலாமின் பரிந்துரையை ஏற்று யூ ஹ்ஸி சீன மொழியில் மொழிபெயர்த்தார்.  

ராஷ்ட்ரபதி பவனில் டாக்டர் கலாம் உருவாக்கிய புதுமைகளுள் முதன்மையானது மழலையர் காட்சிக்கூடம். 20003இல் அது அமைக்கப்பட்டது. பெயருக்கேற்ற வகையில் அது, நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகளால் உருவாக்கப்பட்ட வண்ண ஓவியங்கள், பின்னலாடைகள், உருவப்படங்கள், கவிதைகளால் நிறைந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பிப் பார்வையிடுவதாக இக்காட்சிக்கூடம் அமைந்திருக்கிறது. பிற கோள்களில் நமது எடை என்னவாக இருக்கும் என்று கணக்கிடக்கூடிய பகுதி ஒன்று இங்கு உள்ளது. இந்த இடத்தில் பெரியவர்களும்கூட குழந்தைகளைப் போல தமது எடைகளை ஒப்பிட்டுச் சிரித்துக் கொள்வர்.

ஒருமுறை டாக்டர் கலாமுடன் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, அவரது மெய்க்காவல் அதிகாரிகளுடன் ஒரு சிறுமி வாதாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். கலாமை சந்திக்க அவள் துடிப்பதையும் காவலர்கள் அதற்கு அனுமதி தராததால் அவளது முகம் வாடியிருப்பதையும் புரிந்துகொண்டேன். உடனே கலாமிடம் அனுமதி பெற்று அந்தச் சிறுமியை வரவழைத்தேன். அவள் வந்தவுடன் கலாம் அவர்களிடம் பணிந்து ஆசி பெற விரும்புவதாகத் தெரிவித்தாள்.  

அங்கு இருந்த பலருக்கு அது வியப்பாக இருந்தது. கலாமை சந்திக்கும் பலரும் அவரிடம் கையொப்பம் பெறவும்,  அவருடன்  சுயபடம் எடுக்கவும் துடிப்பார்கள். அவர்கள் அந்தச் சிறு குழந்தை கலாம் அவர்களிடம் ஆசி பெற்றது போன்ற நிகழ்வை அதுவரை கண்டிருக்கவில்லை. இதுகுறித்து கலாமே வேடிக்கையாக,  ‘பிறரை ஆசீர்வதிக்கும் அளவுக்கு பெரிய மனிதராக நான் ஆசீர்வதிக்கப்படுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை’ என்று கூறினார்.

இந்த நாடு அளவற்ற திறன்களைக் கொண்டது என்று நமக்கு நன்னம்பிக்கை ஊட்டிய தனித்துவமான குடியரசுத் தலைவர் அவர். அருங்கனவுகளை விதைத்து நம் அனைவரையும் உற்சாகப்படுத்திய மகத்தான ஆளுமை அவர். கடினமான பிரச்னைகளுக்கு எளிய தீர்வு கண்ட நல்லறிஞர் அவர். அழகிய, உறுதியான செயல்களை சாதித்துக் காட்டிய பெருந்தகை டாக்டர்  அப்துல் கலாம். அவரது நினைவு நம்மை என்றும் வழிநடத்தும்.

குறிப்பு:

இன்று (ஜூலை 27) முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவுநாள்.

கட்டுரையாளர், கலாமின் தனிச்செயலராகப் பணியாற்றியவர்.

தினமணி (27.07.2022)

Leave a comment