மனித உரிமையும் இறையாண்மையும் நாணயத்தின் இரு பக்கங்கள்!

19 Nov

2018இல் நிகழ்ந்த பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் கௌதம் நவ்லேகாவின் சிறைவாசத்தை வீட்டுக்காவலாக மாற்றி உச்ச நீதிமன்றம் அண்மையில் (நவ. 10) உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் கைதான பலரும் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு விசாரணை  நடைபெற்றுவந்தாலும்,  குற்றம்  சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு தங்கள் குறைகளைக் களைய வாய்ப்பு இருப்பது இந்திய நீதித்துறையின்  சாதகமான அம்சமாகும். தற்போது கௌதம் நவ்லேகாவுக்கு சற்றே ஆசுவாசமான உத்தரவை உச்ச நீதிமன்றம் அளித்துள்ள போதிலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை நீதிமன்றம் கவனத்தில் கொண்டிருக்கிறது.  

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், ஹரியாணாவைச் சார்ந்த மனித உரிமைப் போராளியான கௌதம் நவ்லேகா பிரதானமானவர். நவ்லேகா குழுவினர் மீதான குற்றச்சாட்டு தேசப்பாதுகாப்பு தொடர்பானது. இக்குழுவினர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ்  (யுஏபிஏ) விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தை அறிய நாம் சரித்திரத்தை திரும்பிப் பார்க்க வேண்டும்.

மகாராஷ்டிர மாநிலம், புணே அருகிலுள்ள சிறு நகரம் கோரேகான். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை சிறிது சிறிதாகக் கைப்பற்றி வந்தபோது, மராட்டிய பேஷ்வா அரசு அவர்களுக்கு எதிராக யுத்தம் நடத்திவந்தது. 1818 ஜனவரி முதல் தேதி, புணே நோக்கிச் சென்ற கிழக்கிந்திய கம்பெனியின் சிறிய படைக்கும் பேஷ்வாவின் பெரும் படைக்கும் இடையில் நடைபெற்ற போரில் மராட்டியப் படை தோல்வியுற்றது. அந்த வெற்றியின் அடையாளமாக கோரேகானில் கிழக்கிந்திய கம்பெனி வெற்றித்தூணை நிறுவியது. அதில், கிழக்கிந்திய கம்பெனி படையில் பலியான 49 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்டப்பட்ட வகுப்பினரான மஹர் ஜாதியைச் சார்ந்த 22 வீரர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன.

சுதந்திரம் பெற்ற பிறகு தாழ்த்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டபோது அந்த வெற்றித்தூண் பிரபலமானது. ஊரின் பெயரும் ‘பீமா கோரேகான்’ என்று மாறியது. சமூகரீதியாக தங்களை அடிமைப்படுத்தி ஆண்ட மராட்டிய  உயர்ஜாதியினருக்கு எதிராக தலித் மக்கள் போராடி வென்றதன் அடையாளமாக அந்தத் தூண் மாற்றப்பட்டது. அங்கு ஆண்டுதோறும் வெற்றிவிழா நடப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால், கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றி என்பது, இந்தியர்களுக்கு எதிரான ஆங்கிலேயரின் வெற்றி என்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி- மராட்டிய பேஷ்வாக்களிடையிலான போர் என்பது அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான கலகமாகும். அதில் ஆங்கிலேயப் படையில் பணிபுரிந்த தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த வீரர்கள் போராடி உயிர் நீத்தது தனிப்பட்ட தொழில் தொடர்பானது. அதேபோல, ஆங்கிலயப் படையினரின் வெற்றிக்கு அவர்களது நவீன ஆயுதங்களும் பீரங்கிகளும் முக்கியமான காரணம். இதனை மறந்துவிட்டு,  மராத்தாக்களை வென்ற மஹர் ஜாதியினரின் வெற்றியாக இதனை சிலர் முன்னிறுத்துவதால், மகாராஷ்டிர மாநிலத்தில் பதற்றம் ஏற்படுகிறது. இதனால் அவ்வப்போது சமூகத்தில் ஜாதிரீதியிலான மோதல் போக்குகள் தலைதூக்குகின்றன.

2017 டிசம்பர் 31இல் பீமா கோரேகானில் நடைபெற்ற எல்கார் பரிஷத் மாநாட்டை அடுத்து, மறுநாள் அங்கு நடந்த கோராகான் வெற்றியின் 200வது ஆண்டு விழாவில் வன்முறை வெடித்தது. பலரது உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. ஒருவர் பலியானார். இந்தக் கலவர வழக்கை விசாரித்த மகாராஷ்டிர காவல் துறை, இந்த வன்முறையில் நக்சல் அமைப்புகளின் தொடர்பைக் கண்டறிந்தது.  

ஜாதிகளிடையிலான மோதலைப் பயன்படுத்தி, தலித் மக்களை நக்சல் ஆதரவாளர்களாக மாற்ற நடந்த திட்டம் கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் இதேபோன்ற கலவரச் சூழல்களை உருவாக்கி, மத்திய அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை நடத்த நக்சல் ஆதரவாளர்கள் திட்டமிட்டதாகவும் மாநிலக் காவல் துறை தெரிவித்தது.

அதுதொடர்பாக தீவிர இடதுசாரி ஆதரவாளர்களும், மனித உரிமைப் போராளிகளுமான ஆனந்த் டெல்டும்ப்டே, கெüதம் நவ்லேகா, வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், ஸ்டேன் சுவாமி, சுதா பரத்வாஜ், ஹனிபாபு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் மீது  பிரதமர் நரேந்திர மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியதாகவும் வழக்கு உள்ளது.

இந்த  வழக்கில் கைதானோருக்கு ஆதரவாக சரத் பவார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்தனர். ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் திடீர்த்தோழரான சிவசேனை கௌதம் நவ்லேகா குழுவினரை ஆதரிக்கவில்லை. ஏனெனில் மகாராஷ்டிரத்தில் மராட்டிய கௌரவத்துக்கு இழுக்கு நேர்வதை அம்மாநிலக் கட்சிகள் விரும்புவதில்லை.  இந்த விவகாரம் அரசியல்மயமானதால் தான், மாநில காவல்துறையின் விசாரணையிலிருந்த இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. 2020 ஜனவரியிலிருந்து இவ்வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.  

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழகத்தைச் சார்ந்த ஸ்டேன் சுவாமி (84) மும்பை  சிறையிலிருந்தபோதே உடல்நிலை பாதிக்கப்பட்டு 2021 ஜூலையில் காலமானார்.  பெண் வழக்குரைஞரான சுதா பரத்வாஜுக்கு (62) காவல் கண்காணிப்புடன் கூடிய பிணை விடுதலையை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் 2021டிசம்பரில் வழங்கியது. கவிஞர் வரவர ராவுக்கு (82) கடந்த பிப்ரவரியில் ஆறுமாத கால இடைக்கால பிணை விடுதலையை மும்பை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதனை நிரந்தர பிணை விடுதலையாக கடந்த ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் மாற்றி அறிவித்தது.  

இந்நிலையில்தான் பீமா கோரேகான் வன்முறை வழக்கில் பிரதானக் குற்றவாளியான கௌதம்  நவ்லேகாவை சிறையிலிருந்து விடுவித்து, காவல் கண்காணிப்புடன் கூடிய வீட்டுக்காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதற்கான செலவை கௌதம் நவ்லேகாவே ஏற்க வேண்டும் என்பதும், வீட்டில் தொலைபேசியைப் பயன்படுத்தக் கூடாது என்பதும் குறிப்பிட வேண்டிய நிபந்தனைகள்.

சமூக வேறுபாடுகளைப் பெரிதுபடுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துவோருக்கு சட்டம் கருணை காட்டாது என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில்,  குற்றம் சாட்டப்பட்டோருக்கு சட்டம் அளிக்கும் வாய்ப்புகளும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் விட,  மனித உரிமைகளும் நாட்டின் இறையாண்மையும் ஒரே நாணயத்தின் இருவேறு பக்கங்கள் என்பது நீதிமன்றத்தால் நிலைநாட்டப்பட்டிருக்கிறது.


ஜெனீவா கூட்டத்தில் இந்தியா விளக்கம்

கௌதம் நவ்லேகா வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்ட  அதே நவ. 10ஆம் தேதி, ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இந்தியாவில் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சிறுபான்மையினரும் நசுக்கப்படுவதாக கிரீஸ், இத்தாலி, வாட்டிகன், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர். அதற்கு இந்தியா சார்பில் பங்கேற்ற அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா விளக்கம் அளித்தார்.

"மனித உரிமைப் போராளிகளின் செயல்பாடுகளை இந்தியா அங்கீகரிக்கிறது. அதேசமயம்,  நாட்டின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இயங்கும் சில இயக்கங்களின்  சட்டவிரோதச் செயல்பாடுகளைத் தடுக்க சட்டப்படி நடவடிக்கைகளை அரசு எடுத்தாக வேண்டியிருக்கிறது” என்று  அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.  

  • தினமணி- 18.11.2022

$$$

Leave a comment