உருகச் செய்யும் கதைகள்

22 Nov

சிறுகதை எழுதுவது ஒரு தனிக்கலை. வடிவத்திலும் கருத்திலும் தொய்வின்றி எழுத வேண்டிய  புனைகதையின் முடிவே, அது சிறுகதையா அல்லவா என்பதைத் தீர்மானிக்கிறது.  ‘அரண்மனை வனம்’ தொகுப்பில் உள்ள 23 சிறுகதைகளும் இந்த இலக்கணத்தை சிறப்பாகப் பூர்த்தி செய்கின்றன.

ஒரு நல்ல சிறுகதை, படிப்பவரின் மனதில் புகுந்து அவரது இதயத்தை உலுக்கலாம், அல்லது இதமாக வருடலாம்; சில நேரங்களில் நம்மை மீறி கண்களில் கண்ணீர்த் திவலைகளைத் திரளச் செய்யலாம். இந்த சிறுகதைத் தொகுதியிலுள்ள அனைத்துக் கதைகளுமே ஒவ்வொரு கோணத்தில் நமது மனதில் ஆழப் பதிகின்றன. அதிலும் இத்தொகுப்பின் கடைசிக் கதையான  ‘மின்னி’ வாழ்வின் அநர்த்தத்தை மின்னல் போலத் துலங்கச் செய்து மனதைப் பிசைகிறது.

ராமாயணக் காப்பிய மாந்தரான லட்சுமணனின் மனைவி ஊர்மிளையின் பார்வையில் விரியும் பெண்ணியச் சிந்தனையின் விளக்கமே ‘அரண்மனை வனம்’ சிறுகதை. அக்கதையின் தலைப்பே இந்நூலுக்கும் முத்திரையாக அமைந்திருக்கிறது.

’27ஆம் தலைமுறை’ சிறுகதையில் அமுதீசர் திருக்கோயில் அர்ச்சகர் சங்கரன், அவரது மனைவி கற்பகம் ஆகியோரின் பார்வையில் வாழ்வின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. கதையின் முடிவு அனந்தம்.

‘ஸ்வேதா யுகேஜி}2பி’, சிறிய சிறுகதைதான். ஆனால் வெட்கத்துடன் சிரிக்கும் சிறுகுழந்தை ஸ்வேதாவை மனக்கண்ணில் தரிசிக்கும்போது நமது முகத்தில் தானாக முறுவல் முகிழ்க்கிறது. அதேபோலத் தான், “சாலையில் ஒரு சம்பவம்’ சிறுகதையின் நாயகியான, கட்டைவிரல் உயர்த்தி மானுடநேயத்தைக் காட்டும் சிறுமியும்.

‘நினைவுகள் அழிவதில்லை’ நாயகி வைஜெயந்தி போல பலருக்குள்ளும் வெண்சிறகு பறந்துகொண்டு தானிருக்கிறது.  ‘காட்டுவெளியினிலே’ காவல் காக்கும் பிச்சியின் தாய்மை உணர்வும் மனதை வருடுகிறது.

பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய  நூலாசிரியர் இந்திரநீலன் சுரேஷ் மிகத் தாமதமாக தமிழ் எழுத்துத் துறைக்குள் நுழைந்திருக்கிறார். ஆனால் அவரது சிறுகதைகள் எதுவும் புதிய எழுத்தாளர் எழுதியவையாகத் தோன்றவில்லை. அற்புதமான இந்த சிறுகதைத் தொகுப்புக்கு,  ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அணிந்துரையும், எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்  முன்னுரையும் எழுதி இருப்பது சிறப்பு.

***

அரண்மனை வனம் (சிறுகதைத் தொகுப்பு)
இந்திரநீலன் சுரேஷ்

148 பக்கங்கள், விலை: ரூ. 200-
கலைமகள் பப்ளிகேஷன்ஸ், 
34/2, வீரபத்திரன் தெரு, 
மயிலாப்பூர், 
சென்னை - 600 004.
போன்: 044- 2498 1699.
 

Leave a comment