சொல்வது தெளிந்து சொல்

25 Nov

விநாயக தாமோதர சாவர்க்கர்

மகாராஷ்டிரத்தைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர் குறித்து அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். நாட்டை வழிநடத்த வேண்டிய பொறுப்புள்ள ஒரு தலைவரின் கருத்தாக அவரது பேச்சு அமையவில்லை.

நாடு முழுவதும் பாதயாத்திரையாக இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, கடந்த நவ. 11இல் மகாராஷ்டிர மாநிலம், வாசிம் மாவட்டத்தில் பேசுகையில், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்த சாவர்க்கரை காங்கிரஸ் கட்சி முன்னோடியாகக் கொள்ளாது என்று கூறியிருக்கிரார். அதன்மூலமாக, தனது வரலாற்றுப் புரிதலின்மையை வெளிப்படுத்தி இருப்பதுடன், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிர விகாஸ் அகாதி கூட்டணிக்கும் தரும சங்கடத்தை உருவாக்கி இருக்கிறார்.

மகாராஷ்டிரத்தைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர் (1883}1966), இந்திய வரலாற்றில் மறக்க இயலாத புரட்சியாளர். இளம் வயதிலேயே மகாராஷ்டிரத்தில் ‘அபிநவ பாரத சங்கம்’ என்ற புரட்சி அமைப்பை நிறுவியவர். மேற்படிப்புக்காக லண்டன் சென்ற இடத்தில் ‘இந்திய சுதந்திர சங்கம்’அமைத்தவர். அதில் உறுப்பினராக இருந்தவர்தான் தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர்.

மராத்தியக் கவிஞர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் எனப் பன்முகங்களை உடையவர் சாவர்க்கர். இவர் எழுதிய ‘எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போராட்டம்’என்ற நூல் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டது. ஆங்கிலேயரின் சொந்த மண்ணிலேயே பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடியவர் சாவர்க்கர்.

லண்டனில் ஆங்கிலேய அதிகாரி கர்சான் வில்லி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டபோது கப்பலிலிருந்து தப்பி பிரான்ஸின் மார்செய்ல்ஸ் துறைமுகத்தில் கரையேறுகையில் மீண்டும் ஆங்கிலேய வீரர்களிடம் சாவர்க்கர் பிடிபட்டார். இதனால் பிரிட்டனுக்கும் பிரான்ஸýக்கும் இடையே எல்லை தாண்டிய விவகாரம் தொடர்பாக பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது, அக்காலத்தில் சர்வதேசச் செய்தி.

நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரே காரணத்தால் அவரது சொத்துகள் ஆங்கிலேய அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. ராஜத்துரோக வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை (50 ஆண்டுகள்) பெற்று அந்தமானுக்கு நாடுகடத்தப்பட்ட அவர், அங்கு செல்லுலர் சிறையில் சொல்லொனாக் கொடுமைகளுக்கு ஆளானார்.

தமிழக விடுதலை வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை கோவை சிறையில் கல்லுடைத்ததும் செக்கிழுத்ததும் நமக்குத் தெரியும். அவற்றுக்கு நிகரான கொடிய துன்பங்களை அந்தமான் சிறைவாழ்வில் (1911} 1924) அனுபவித்தவர் சாவர்க்கர். சிறைவாசத்தால் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் அவரது விடுதலைக்காக அனுதாபிகள் பலர் முயன்றபோது, அவர்களது வலியுறுத்தலின் பேரில் சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு விடுதலை கோரி கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் நிபந்தனைகளுடன் அவர் விடுதலை செய்யப்பட்டார். இது வரலாற்று உண்மை.

ஆனால், அவர் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை; அரசிடம் மன்னிப்பும் கேட்கவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு இருந்தது. தாழ்த்தப்பட்ட மக்களும் சரிசமமாக வழிபட உரிமையளிக்கும் ‘பதித பாவன மந்திர்’என்ற சமத்துவக் கோயிலை ரத்தினகிரியில் 1931இல் அமைத்தார். பின்னாளில் ஹிந்து மகா சபை என்ற கட்சியை நிறுவினார். அதுவே இன்றைய பாஜகவின் சித்தாந்த முன்னோடி.

துரதிர்ஷ்டவசமாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புபடுத்தப்பட்டு கைதான சாவர்க்கர் பின்னாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ‘ஹிந்துத்துவ அரசியல்’ என்ற கோட்பாட்டை இந்திய அரசியல்வானில் விதைத்தவர் என்பதாலும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதாலும் சாவர்க்கரை சிலர் விமர்சிக்கின்றனர். யாரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால், சாவர்க்கர் போன்ற தியாகியரை விமர்சிக்கும் முன் அவரது வரலாற்றை அறிவது அவசியம்.

சாவர்க்கரின் ஹிந்துத்துவ அரசியல் கருத்துகளும் காங்கிரஸ் எதிர்ப்பும் ராகுல் காந்திக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அவரது நூற்றாண்டின்போது ராகுலின் பாட்டி இந்திரா காந்தியாலேயே புகழாரம் சூட்டப்பட்டவர் சாவர்க்கர் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் தீவிரவாதப் போக்கு கொண்டிருந்த லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பால், அரவிந்தர், சாவர்க்கர், வ.உ.சி., மகாகவி பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்றோரை ஆங்கிலேய அரசு கடுமையாக நடத்தியதை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது. அவர்களைப் போல மிதவாதப் போக்குடைய தலைவர்கள் ஆங்கிலேய அரசின் கடுமையை அனுபவிக்கவில்லை. அதேசமயம், சுதந்திரப் போரில் இவ்விரு தரப்பினரின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

சுதந்திரப் போராட்ட வரலாறே தெரியாதவர்கள், மகாத்மா காந்தி முதல் சாவர்க்கர் வரை யாரையும் அவதூறாகப் பேசுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும் அக்கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமுமான ராகுல் காந்தியும் சேர்ந்திருப்பதை நம்ப முடியவில்லை. அவர் தனது பேச்சை நியாயப்படுத்துவது அதைவிடப் பேரவலம். இது நாட்டிற்கு நல்லதல்ல.

  • தினமணி (25.11.2022)

.

Leave a comment