கவனம் ஈர்க்கும் பேரவைத் தேர்தல் முடிவுகள்

9 Mar

கடந்த வாரம் வெளியான மூன்று மாநில தேர்தல் முடிவுகள்  தமிழகத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு இங்கு பெரும் கவனத்தை ஈர்த்திருந்ததால், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

     நாட்டின் ஏழ்மையான வடகிழக்கு சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஏழு மாநிலங்களும் புவியியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிஸோரம், சிக்கிம், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய இந்த 7 மாநிலங்களுடன் அஸ்ஸாம் மாநிலத்தையும் சேர்த்து 8 மாநிலங்கள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.

வடகிழக்குப் பிராந்தியத்தில் உள்ள பலதரப்பட்ட பழங்குடியினக் குழுக்களுக்கு இடையிலான மோதலால் அவ்வப்போது பதற்றம் ஏற்படுவது வழக்கம். எனவே பாதுகாப்புப் படையினரின் தொடர் கண்காணிப்பில் இந்த மாநிலங்கள் இருந்து வருகின்றன. சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தப் பகுதிகள் தொடர்ந்து பின்தங்கியே இருந்து வந்துள்ளன. அண்மைக்காலமாகத் தான் பொருளாதார வளர்ச்சியின் தாக்கம் இந்த மாநிலங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, இந்த எட்டு மாநிலங்களின் மொத்த மக்கள்தொகையே 4.6 கோடி தான். இம்மாநிலங்களிலிருந்து தேர்வாகும் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 மட்டுமே. பல்லாண்டுகளாக அரசியல்ரீதியாக இப்பகுதி கண்டுகொள்ளப்படாமல் இருந்ததற்கு இவையும் காரணங்கள். ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் இம்மாநிலங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாக இருந்து வருகிறது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மாநிலங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இதற்காகவே வடகிழக்கு ஜனநாயக கூட்டணி (என்இடிஏ) உருவாக்கப்பட்டது. இதன் அமைப்பாளராக இருப்பவர், அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா. இந்த 8 மாநிலங்களில் மிஸோரம் மாநிலத்தில் மட்டுமே பாஜக கூட்டணி அல்லாத மிஸோ மக்கள் கட்சி ஆள்கிறது. இந்த நிலையில் தான் மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் தேர்தல் முடிந்து முடிவுகள் கடந்த மார்ச் 2-இல் வெளியாகி உள்ளன.

இதில், திரிபுராவில் ஆட்சியை பாஜக தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. நாகாலாந்தில் பாஜக – தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மேகாலயத்தில் கூட்டணி ஆட்சியில் இருந்த பாஜகவும் தேசிய மக்கள் கட்சியும் (என்பிபி) கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட்டன. ஆயினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜகவுடன் தேர்தலுக்கு  முந்தைய கூட்டணியை மீண்டும் உருவாக்கி ஆட்சி அமைக்கிறார் தற்போதைய முதல்வர் கர்னாட் சங்மா. இதன்மூலம் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஏழில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தொடர்கிறது.

மேகாலயத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 இடங்களுக்கு தேர்தல் நடந்ததில், முதல்வரும் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவின் மகனுமான கர்னாட் சங்மாவின் என்பிபி கட்சி 26 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 2018-இல் வென்ற அதே இரு இடங்களில் வென்றுள்ளது. எச்எஸ்பிடிபி எனப்படும் மலைமக்கள் ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது. இக்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கின்றன. கர்னாட் சங்மா மீண்டும் முதல்வர் ஆகிறார்.

நாகாலாந்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 60. இங்கு என்டிபிபி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்திருந்தது. இத்தேர்தலில் என்டிபிபி 25 தொகுதிகளிலும் பாஜக 12 தொகுதிகளிலும் வென்றுள்ளன. தற்போதைய முதல்வர் நெய்பியு ரியோ மீண்டும் கூட்டணி முதல்வராகத் தொடர்கிறார்.

திரிபுராவில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியாக இருந்த பாஜக 32 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பூர்வகுடிகள் முன்னணி (ஐபிஎஃப்டி) ஓரிடத்திலும் வென்றுள்ளன. இதன்மூலம் பாஜக ஆட்சி அங்கு தொடர்கிறது. இம்மாநிலத்தில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அரசியலில் எதிரெதிர்த் துருவங்களாக இருந்த இக்கட்சிகள் இணைந்து போட்டியிட்டதை திரிபுரா மக்கள் ஏற்கவில்லை. இக்கூட்டணியில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் சிபிஎம் 11 தொகுதிகளிலும் மட்டுமே வென்றுள்ளன. இம்மாநிலத்தில் புதிய வரவான திப்ரா மோத்தா கட்சி 13 தொகுதிகளில் வென்று பிரதான எதிர்க்கட்சியாகி இருக்கிறது.

திரிபுரா மன்னர் வம்சத்தைச் சேர்ந்த கிரித் பிரத்யோத் மாணிக்யதேவ் பர்மன் தொடங்கிய திரிபுரா பூர்வகுடிகள் முன்னேற்ற மண்டலக் கூட்டணி என்ற திப்ரா மோத்தா கட்சியால், பாஜக ஆட்சியை இழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையும் மீறி பாஜக வென்றுள்ளது. பாஜக சென்ற தேர்தலை விட 4 தொகுதிகளை மட்டுமே குறைவாகப் பெற்றுள்ளது.

இவ்வாறாக மேற்கண்ட மூன்று வடகிழக்கு மாநிலங்களிலும் அரசியல் நிலவரம் தேர்தலுக்கு முந்தைய நிலையே தொடர்கிறது. அதேசமயம், இம்மாநிலங்களில் முக்கிய இடம் வகித்து வந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிபிஎம் ஆகியவை தங்கள் செல்வாக்கில் சரிவைச் சந்தித்துள்ளன. 

வடகிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய மத்திய அரசு மேம்படுத்தி வருவதும், மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சென்று சேர்ந்திருப்பதும் இந்த பிராந்தியத்தில் பாஜகவின் செல்வாக்கைப் பெருக்கி உள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் இரட்டை என்ஜின் ஆட்சி என்ற பிரதமர் மோடியின் கோஷமும், வளர்ச்சி அரசியல் என்ற பிரசாரமும் மக்களால் ஏற்கப்பட்டிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எனவே தான் கிறிஸ்தவ மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாகாலாந்திலும் கூட பாஜக வென்றிருக்கிறது

சிறிய மாநிலங்கள் தானே என்று கருதாமல், பாஜக இந்தத் தேர்தலில் பலத்த முயற்சிகளைச் செய்தது. அக்கட்சியின் தேர்தல் பணிகளுடன் ஒப்பிடுகையில் பிற கட்சிகள் மிகவும் பின்தங்கி இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

இந்தத் தேர்தல் முடிவுகளை 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான காலிறுதி ஆட்டம் எனலாம். அரையிறுதி ஆட்டமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆறு மாநிலத் தேர்தல்களிலும் இம்முடிவுகள் பிரதிபலிக்குமா என்பதைப் பொருத்து 2024 மக்களவைத் தேர்தல் அமையலாம்; 2019 போல அமையாமலும் போகலாம்!

  • தினமணி (07.03.2023)

.

Leave a comment