உயர் நோக்கம் கொண்ட ஆய்வு நூல்

14 Mar

பூலோக வைகுந்தம் என்று புகழப்படும் வைணவர்களின் தலைமைக் கோயிலான திருவரங்கம் கோயில் நமது நாட்டின் பன்னெடுங்கால சரித்திரத்தின் சாட்சியாக விளங்குகிறது. இக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றான மகேந்திரன் திருச்சுற்றில் அமைந்துள்ள ஸ்ரீ பீபி நாச்சியார் சந்நிதி, அற்புதமான தெய்வீக அன்பின் அடையாளமாகக் காட்சி அளிக்கிறது. தில்லி சுல்தானின் மகளான ஸுரதாணி என்ற இஸ்லாமியச் சிறுமி, அழகிய மணவாளனின் உற்சவ விக்கிரகமான செல்வப்பிள்ளை மீது கொண்ட மையலால் வைணவ சம்பிரதாயத்தினரின் பேரன்புக்கு எவ்வாறு பாத்திரமானாள் என்பதற்கான சான்று இந்தச் சந்நிதி.

இதுகுறித்து இஸ்லாமிய எழுத்தாளரும் சரித்திர ஆய்வாளருமான செ.திவான் மேற்கொண்ட தீவிரமான ஆராய்ச்சியின் வெளிப்பாடே இந்த அரிய நூல். இந்நூலில் சுட்டிக்காட்டப்படும் பலநூறு மேற்கோள் குறிப்புகள், தேர்ந்த வல்லுநர்களின் கருத்துகள். அவற்றைத் தேடிக் கண்டறிந்து தொகுத்திருக்கும் திவானின் ஆய்வுப் புலமையும், கடும் உழைப்பும் நூல் முழுவதும் வெளிப்படுகின்றன.

வேற்று மதத்தைச்சார்ந்தவர் என்றபோதும், பிற சமயத்தினரையும் அரவணைக்கும் வைணவத்தின் சிறப்பை நூலாசிரியர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். அதன் வரலாற்றுக் காரணங்கள் என்னவாக இருந்தாலும், ஸுரதாணியின் கதையில் பல மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருந்தாலும், இந்து- முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டிட இந்த வரலாறு பயன்படும் என்ற அவரது கருத்து அனைவருக்கும் உடன்பாடானதே. ‘அவரவர் மார்க்கம் அவரவருக்கு’ என்று தானே இஸ்லாமும், ‘வசுதைவ குடும்பகம்’ என்று தானே இந்து சமயமும் கூறுகின்றன.

அழகர்கோவில், திருமலை ஆகிய கோயில்களிலுள்ள துலுக்க நாச்சியார் தொடர்பான விவரங்களும், அவற்றின் பின்னணியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. தனது ஆய்வுக்கு உறுதுணையாக ராமானுஜர், நம்மாழ்வார், ஆண்டாள் ஆகியோர் பற்றியும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர். நாச்சியார் என்ற பெயரில் அருள்பாலிக்கும் தாயார் சந்நிதிகள் உள்ள வைணவக் கோயில்களின் பட்டியலையும் தனியே கொடுத்திருக்கிறார்.

உயர்ந்த நோக்கத்துடன் கூடிய இந்த ஆய்வு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ள அடிக்குறிப்புகள் தேடல் கொண்ட வாசகர்களுக்கு மிகவும் பயன்படும். அதேசமயம், ஒவ்வொரு பத்திக்கும் ஒரு துணைத் தலைப்பு கொடுத்திருப்பது தொடர் வாசிப்புக்கு இடையூறாக இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். தவிர தட்டச்சுப் பிழைகள் அதிக அளவில் இருப்பதும் நெருடலாக இருக்கிறது. அடுத்த பதிப்பில் இந்தக் குறைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

***

துலுக்க நாச்சியார்
-செ.திவான்

218 பக்கங்கள்; விலை: ரூ. 200-

வெளியீடு:
ரெகான்- ரய்யா பதிப்பகம்,
106 எஃப், 4 ஏ, திருவனந்தபுரம் சாலை,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி -627 002
கைப்பேசி: 90803 30200

.

-தினமணி (13.03.2023).

Leave a comment