பசுவதைக்கு எதிரான வரலாறு

11 Apr


இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம்  போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே இந்நூல்.

ஆங்கிலேயர்களால் இந்தியா ஆளப்பட்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் நிகழ்ந்த பசுக்கொலைகளையும், அதன் பின்னணியையும், லண்டனிலுள்ள இந்தியா ஆஃபீஸ் நூலக ஆவணக் காப்பகத்தில் கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே ஆய்வு செய்து நூலாகப் படைத்திருக்கிறார் காந்திய அறிஞரும் சரித்திர நூலாசிரியருமான தரம்பால். அவருடன் சென்னையைச் சார்ந்த ஆய்வாளர் டி.எம்.முகுந்தனும் தரவுகளைத் தொகுத்திருக்கிறார்.

08.12.1893-இல் வைஸ்ராய் லேண்ட்ஸ்டவுனுக்கு விக்டோரியா மகாராணி எழுதிய கடிதத்தில்    “பசுக்கொலைக்கு எதிரான ஹிந்துக்களின் போராட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று சொல்லப்பட்டாலும், உண்மையில் அது நமக்கு எதிரானது.  முகமதியர்களை விட நாம் தான் மிக அதிக அளவில் பசுக்களைக் கொல்கிறோம்” என்று குறிப்பிட்டிருப்பதை முக்கியமான ஆதாரமாக்கி இருக்கும் தரம்பாலின் ஆய்வுத்திறன், பிரச்னையின் ஆணிவேரைக் காட்டுகிறது.

1880 – 1894  காலகட்டத்தில் மேற்கு எல்லைப்புற மாகாணம், பஞ்சாப், மத்திய இந்தியா, ஐக்கிய மாகாணம், பிகார் ஆகிய பகுதிகளில் இயங்கிய கோரக்ஷணி சபைகள் மக்களிடையே செலுத்திய செல்வாக்கு, பசுக்கொலைக்குக் காரணமான ஆங்கிலேயரின் உணவுப்பழக்கம், சமூக நல்லிணக்கத்துக்காக இஸ்லாமியர்களும் பசுக்கொலையை எதிர்த்தது, பசுவதை காரணமாக நிகழ்ந்த ஹிந்து – முஸ்லிம் கலவரங்கள், பசுப் பாதுகாப்பு போராட்டம் தேசிய இயக்கமாக  மாறுவது என பல்வேறு காட்சிகளை இந்நூல் முன்வைக்கிறது. 

***

பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்
-தரம்பால், டி.எம்.முகுந்தன்
தமிழில்: பி.ஆர்.மகாதேவன்
120 பக்கங்கள்; விலை: ரூ. 150-
கிழக்கு பதிப்பகம், சென்னை,
தொலைபேசி எண்: 044-42009603
.

தினமணி (10.04.2023)

>

Leave a comment