சர்ச்சைக்கு மேல் சர்ச்சையில் ராகுல் காந்தி!     

4 Apr

சாதனையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களையும் சாதகமாக மாற்றிவிடுவார்கள். சாதாரணமானவர்களோ சாதகமான நிகழ்வுகளைக்கூட சிக்கலாக்கிக் கொள்வார்கள் என்ற கருத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. 

                2019 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரில் பிரசாரப் பேச்சின் இடையே நகைச்சுவையாக  “எல்லாத் திருடர்களும் தங்கள் பெயருக்குப் பின்னே மோடியை எவ்வாறு பொதுவான பெயராக வைத்திருக்கிறார்கள்?” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டது, குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கிற்குக் காரணமானது. இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 499, 500 -இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது.

                நீதிமன்றத்திலேனும் தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்திருக்கலாம். அதற்கான வாய்ப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், மோடி என்ற மிகவும் பிற்பட்ட சமுதாயத்தை அவதூறு செய்ததாக வழக்கு திசை மாறியதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவரது வழக்குரைஞர்களும், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்களும் எச்சரித்தபோதும், வழக்கின் தீவிரத்தை அவர் உணரவில்லை.

                அதன் விளைவு கடந்த மார்ச் 23ஆம் தேதி தெரியவந்தது.சூரத் நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா, இந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என்று அறிவித்தார். அதற்காக இரண்டாண்டு சிறைத் தண்டனையும் ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்தார். எனினும், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும், அதுவரை தண்டனையை நிறுத்திவைத்து பிணை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

                தேசிய அளவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கின் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி எதிர்கொண்ட  முறை சற்றும் அறிவுப்பூர்மாக இல்லை என்பதைச் சொல்லியாக வேண்டும். ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதித் துறையையே குற்றம் சாட்டி, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் அறியாமையை நிரூபித்தனர். அண்மையில் லண்டனில் பேசிய ராகுல் காந்தி   “அனைத்து அரசு நிறுவவனங்களையும் பாஜக கைப்பற்றிவிட்டது” என்று கூறியதையே அச்சுப் பிசகாமல் கூறி தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் விசுவாசம் காட்டினர்.

                1951-ஆம் வருடத்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(3) பிரிவின் படி , இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதியின் பதவி தானாகவே தகுதி இழப்புக்கு ஆளாகிறது. அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்த ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவைச் செயலர் உத்பல் குமார் சிங் மறுநாளே அறிவித்தார்.

                இதுவும் அரசியல் சட்டப்படியான நடவடிக்கை என்பது காங்கிரஸ் தலைவர்களுக்கும் அதன் மூத்த வழக்குரைஞர்களுக்கும் நன்கு தெரியும். ஆயினும் இதனை மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் செயலாகவே காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

                மக்கள் பிரதிநிதிகளை தகுதியிழப்புச் செய்யும் இந்த அரசியல் சட்டப் பிரிவுக்கு எதிராக மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்த அரசியல் சட்டத் திருத்த மசோதாவை கிழித்தெறிந்தவரே ராகுல் காந்தி தான் என்பதை அக்கட்சியினர் வசதியாக மறந்துவிட்டனர்.

                என்றபோதும், ராகுல் காந்தி மீதான நீதிமன்றத் தீர்ப்பும், அவரது பதவிப் பறிப்பும் தேசிய அளவில் விவாதப் பொருளாகி இருக்கின்றன என்ற உண்மையை மறுக்க முடியாது. போதாக்குறைக்கு, எம்.பி. என்ற முறையில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட அரசு இல்லத்தை தற்போது பதவியை இழந்துவிட்டதால்  ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று மக்களவைச் செயலகம் கடந்த மார்ச் 27-இல் உத்தரவிட்டிருக்கிறது. இது மத்திய அரசின் பழிவாங்கும் போக்காகவே கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இத்துணை வேகம் காட்டியிருக்க வேண்டியதில்லை.

                இந்த நேரத்தில் ராகுல் காந்தி கடந்த மார்ச் 26-இல் செய்தியாளர் சந்திப்பில் கூறிய கருத்து மீண்டும் சிக்கலை உருவாக்கி இருக்கிறது. தன் மீதான மத்திய அரசின் தாக்குதல்களைப் பட்டியலிட்ட அவர்,   “மன்னிப்புக் கேட்க நான் சாவர்க்கர் அல்ல; நான் காந்தி” என்று கூறியது, அவர் இன்னமும் பக்குவப்படவில்லை என்பதையே காட்டி இருக்கிறது.

                இதே ராகுல் காந்தி,  “காவல்காரர்கள் (சௌகிதார்) எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள்” என்று சொன்னதற்காகவும்,  ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான வழக்கு ஒன்றிலும் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அது ஒருபுறமிருக்க, விடுதலைப் போராட்ட வீரர் சாவர்க்கரை இந்தச் சர்ச்சையில் இழுத்திருப்பது, வேலியில் போன ஓணானை மடியில் கட்டிக்கொண்ட கதையாகி இருக்கிறது.

                மராட்டியத்தைச் சார்ந்த விடுதலைப் போராட்ட வீரர் விநாயக தாமோதர சாவர்க்கர், ஆங்கிலேய அரசுக்கு எதிரான ஆயுதப் புரட்சிக்குத் திட்டமிட்டு ஆங்கிலேய அதிகாரிகள் சிலர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர். அதனால்,  ராஜத்துரோக வழக்கில் இரட்டை ஆயுள் தீவாந்திர சிறைத் தண்டனை பெற்று அந்தமான் தீவிலுள்ள கலாபாணி சிறையில் அடைக்கப்பட்டவர். அங்கு அவருக்கு நிகழ்ந்த சித்ரவதைகள் மிகக் கொடுமையானவை.

                சாவர்க்கர் தண்டனைக் குறைப்பு வேண்டி பிரிட்டீஷ் அரசுக்கு  எழுதிய கடிதங்கள் இப்போது அவரை விமர்சிப்பவர்களால் மன்னிப்புக் கடிதங்களாக இகழப்படுகின்றன. சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தத்தை பாரதிய ஜனதா கட்சி கடைபிடிப்பதாலேயே, பாஜகவை எதிர்ப்பவர்களால் அவர் தூற்றப்படுகிறார்.

                ஆனால், சாவர்க்கர் மறைவின் போது, அவரை நாட்டின் தவப்புதல்வர் என்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பாராட்டி இருக்கிறார். அதனை அவரது பேரனான ராகுல் காந்தி அறிந்திருக்க வேண்டும். ஒரு விடுதலைப் போராட்ட வீரரை அவமதிப்பதன் மூலமாக காங்கிரஸ் கட்சி பெறப் போவது எதுவுமில்லை என்ற உண்மையைக் கூற அவருக்கு நல்ல நண்பர்கள் இல்லாது போய்விட்டனர்.

                இந்தத் தேவையற்ற கருத்தால், மகாராஷ்டிர மாநிலத்தில் தனது கூட்டாளிகளாக உள்ள சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு), தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு தரும சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறார் ராகுல் காந்தி.  இந்த வாய்ப்பை சற்றும் நழுவவிடாத பாஜக – சிவசேனை (ஷிண்டே பிரிவு) சாவர்க்கர் கௌரவ யாத்திரையை மாநிலம் முழுவதும் நடத்தத் தொடங்கிவிட்டது.  

தவிர, ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடுக்கப்போவதாக சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் அறிவித்திருக்கிறார். இந்நிலையில் சாவர்க்கரை விமர்சித்து தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்த அனைத்து ட்வீட்களையும் ராகுல் காந்தி அண்மையில் நீக்கி இருக்கிறார். இது அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

                மத்தியில் அசுர பலத்துடன் ஆளும் பாஜகவுக்கு எதிரான தேசியக் கட்சியாக இன்றும் நிலைகொண்டிருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே. பிற எதிர்க்கட்சிகளால் சில மாநிலங்களில் மட்டுமே செயல்பட முடியும். இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை அணிதிரட்ட வேண்டிய தகுதியும் கடப்பாடும் உள்ள காங்கிரஸ் கட்சி தனது பொறுப்பை அறிந்திருப்பதாகத் தெரியவில்லை. ராகுல் காந்தியின் இப்போதைய தேவை, நல்ல வழக்குரைஞர்கள் அல்ல, நல்ல அரசியல் ஆலோசகர்கள் தான்.

  • தினமணி (03.04.2023)

.

Leave a comment