இனியவை படைப்போம்!

12 Aug

தேசம் காத்திட வாருங்கள் – நம் 
தெய்வம் காத்திட வாருங்கள்!
தேசம் காத்திட வாருங்கள்- நம் 
தெய்வம் பாரத தேசமிதே!

எல்லையில் எதிரிகள் நடமாட்டம் – உள் 
நாட்டினில் துரோகிகள் கொண்டாட்டம்!
எல்லாம் தெரிந்தும் வீட்டுக்குள்ளே 
முடங்கியிருப்பது ஏனய்யா?

பலமரம் சேர்ந்தால் ஒரு தோப்பு- இப் 
பழமொழி அனைவரும் அறிந்தது தான்
பலவகைக் கட்சி கூறுகளாலே
பட்ட அவலங்கள் போதுமய்யா!

சுதந்திரக் காற்றை சுவாசித்து- நாம் 
சுகமாய் வாழ்ந்திட வீழ்ந்தவரை 
மனதில் இருத்தி பூஜிப்போம்!
மடமை அழித்திட வாருமய்யா!

பலமலர் சேர்ந்தால் ஒருமாலை – அது 
பரமனை வழிபட உதவிடுமே!
பலப்பல சாதி வேற்றுமை சொல்லி 
பைத்தியமானது போதுமய்யா!

வாய்மை, தூய்மை, ஒழுக்கத்தை – தன் 
வாழ்வில் பேணிய காந்தியினை 
மறந்துவிட்ட தலைவர்களாலே 
மானம் கேட்டது போதுமய்யா!

பலதுளி சேர்ந்தால் பெருவெள்ளம் – நாம் 
பலரும் சேர்ந்தது பாரதமே! 
இதுவரை பெற்ற அனுபவம் போதும்
இனியவை படைப்போம் வாருமய்யா!

– விஜயபாரதம் (02.07.1999)
Advertisements

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

8 Aug
ஒரு மூத்த அரசியல் தலைவர் இறக்கும்போது நெக்குருகுவதும், அஞ்சலி செலுத்துவோர் வரிசையில் இடம்பிடிக்க அலைபாய்வதும் இயல்பானதே. அதுவும் அவர் சார்ந்த திமுக பல்லாண்டு காலம் மாநிலத்தை ஆண்ட கட்சி, வருங்காலத்தில் ஆள வாய்ப்புள்ள கட்சி என்னும்போது, அவருடன் தனது பந்தத்தை வெளிப்படுத்த பலரும் துடிப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
.
இன்று உணர்ச்சிகளின் ஊர்வலம் சென்று கொண்டிருக்கும்போது, தெளிவான சிந்தனைக்கோ, அவரே பெயரளவிலேனும் வலியுறுத்திய பகுத்தறிவுக்கோ, அவர் பெரிதும் பிராபல்யப்படுத்திய சுயமரியாதைக்கோ எந்த வேலையும் இல்லை. ஆனால், எனது மானசீக குருநாதர் பாரதி உரைத்த அதே ‘நெஞ்சுக்கு நீதி’யைப் படித்து வளர்ந்த என்னால், பிறருடன் அந்த வரிசையில் நிற்க முடியவில்லை.
அதேசமயம், தமிழ்ச் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியவர் என்ற முறையில், திருவாளர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி அவர்களின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திப்பது ஓர் இந்து என்ற முறையில் எனது கடமை.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

Continue reading

நம்மைச் செதுக்கும் மனிதர்கள்!

30 Jul

வாழ்க்கைக்கு வழிகாட்டும்  கருத்துகளை எளிமையாகவும்,  தெளிவாகவும் கட்டுரையாக்குவதில் வல்லவர் ஐஏஎஸ் அதிகாரியான வெ.இறையன்பு. அவர் மங்கையர் மலர் இதழில் எழுதிய கட்டுரைகள், கோவை விஜயா பதிப்பகத்தால் நேர்த்தியான நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

வாழ்வில்  ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாம்  கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது என்கிறார் இறையன்பு. “ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் என்ற உண்மை நமக்குப் புரியும்” என்கிறார் அவர். தான் சந்தித்த அத்தகைய மனிதர்கள் குறித்த சிறு குறிப்புகளை இலகுவான வாசிப்புக்கு ஏற்ற நடையில், ஆங்கிலத்தில் இனிய மேற்கோள்களுடன் 50 கட்டுரைகளாக அவர் வடித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.

இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும், நம்மை வியக்கச் செய்கிற, விம்மச் செய்கிற, நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிற பலரைச் சந்திக்கிறோம். போகிற போக்கில் தனது மனதை உறுத்திய சில நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாதாரண மனிதர்களிடமும் நாம் அறிய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

“நாமாகப் படித்துக் கற்றவை சொற்பம். கேட்டும், கவனித்தும், கற்றுக்கொண்டவையே அதிகம். மனிதர்களில் சிலர் புத்தகமாக இருக்கிறார்கள். ஒருசிலர் நூலகமாக இருக்கிறார்கள். நம்முடைய  தன்முனைப்பை நடராஜர் முயலகனை அமுக்குவதைப்போல அமுக்கிவைத்தால் சந்திப்புகளின்போது பேரண்ட நடனம் சாத்தியம். காதுகளைத் திறந்துவைப்பதும், இதழ்களை மூடி வைப்பதும் சந்திப்பைச் செம்மையாக்கும்… நம் சந்திப்பில் ஏழைகள், எளிய மனிதர்கள் அதிகம் இருக்கும்போது நம் புரிதல் இன்னும் கூர்மையாகிறது” என்று நூலின் இறுதியில் இறையன்பு குறிப்பிடுகிறார்.

படிக்க விறுவிறுப்பாகவும், படித்து முடித்தவுடன் புதிய தெளிவை அளிப்பதாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. சக மனிதர்களுக்குப் பரிசளிப்பதற்கு ஏற்ற நூல் இது.

 

***

 

சந்தித்ததும் சிந்தித்ததும்

வெ.இறையன்பு

280 பக்கம், விலை: ரூ. 200.

விஜயா பதிப்பகம், 
20, ராஜ வீதி, கோயம்புத்தூர்-641 001.

தொலைபேசி: 0422- 2382614. 

கறை

22 Jul
.

அன்புடன் தொற்றிய நாய் மீது

வள்ளென விழுந்தேன்.

சட்டையில் மட்டுமா கறை?

.
விஜயபாரதம் (13.11.1998)