உள்ளூர்க் கத்தரிக்காய்

22 Jul

கிராமத்தின் வாரச்சந்தையில்
கூறாகத் தான் விற்க வேண்டும்.
பத்து ரூபாய்க்கு ஒரு கூறென்றால்,
ஐந்து ரூபாய்க்கு பேரம் பேசுவார்கள்.
கத்தரிக்காயின் தலைவிதி அப்படி.
.
நகரின் பிரதான மையச் சந்தையில்
இதே கத்தரிக்காய்
முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது.
வீட்டருகில் விற்கும் தள்ளுவண்டிக்காரரிடம்
நாற்பது ரூபாய்க்கு வாங்க வேண்டும்.
.
இதே கத்தரிக்காயின் விலை
பல்பொருள் அங்காடியில்
கிலோ அறுபது ரூபாய் என்றிருந்தது.
வாங்கிப் பார்த்தேன் – வாடி இருந்தது.
இரண்டு கூறுகள் வரும்.
.
நண்பன் நடத்தும் ஏற்றுமதி நிறுவனத்தில்
பதமாகப் பொட்டலமாக்கப்பட்ட
இதே கத்தரிக்காயின் விலை 3 டாலர்.
அங்காடி விலைபோல மும்மடங்கு.
விவசாயிக்குக் கொடுத்த விலையைக் கேட்டால்
சமைந்து விடுவீர்கள்.
.
காய் அதே காய்தான்.
மாறும் இடம்தான் மதிப்பைக் கூட்டுகிறது.
உள்ளூர்க் கத்தரிக்காய்கள்
உள்ளூரில் விலைபோவதில்லை.
கத்தரிக்காயின் தலைவிதி அப்படி.

 

Leave a comment