யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

18 Feb

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

தமிழகத்தில் நாளை (பிப். 19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இது.

இதில் தேர்வாகும் வார்டு உறுப்பினர்கள் (பிப். 22- இல் முடிவுகள் தெரியும்). தங்கள் உள்ளாட்சி அமைப்பின் தலைவராக, தங்களுக்குள் மறைமுகத் தேர்தல் வாயிலாக (மார்ச் 4- இல்) ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

மாநிலம் முழுவதும், 31ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. 2.79 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற இருக்கிறார்கள்.

மாநில மக்கள் தொகையில் (7.22 கோடி) 2021 நிலவரப்படி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 6.3 கோடி. இதில் நகர்ப்புறத்தில் உள்ள வாக்காளர்களின் பங்கு சுமார் 45 சதவிகிதம். மீதமுள்ள 55 சதவிகித மக்கள் கிராமப் புறங்களில் வாழ்கிறார்கள்.

நமது குடியாட்சி அமைப்பு மிகவும் நுணுக்கமாக – மூன்று படிநிலைகளில் வடிவமைக்கப்பட்டது. நாட்டை ஆள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலத்தை ஆள சட்டமன்ற உறுப்பினர்கள் என அரசியல் சாசனக் கடமையை நிறைவேற்ற இரு வகையான மக்கள் பிரதிநிதிகளை நாம் பொதுத் தேர்தல்களில் தேர்வு செய்கிறோம். இவற்றை இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது.

அதேசமயம், உள்ளாட்சித் தேர்தல் என்பது, நாட்டின் மிகவும் அடிப்படையான கீழ்நிலையில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை அடையாளம் காண்பது. நமது நாட்டில் பழங்காலம் முதலே நடைமுறையில் இருந்துவந்த பஞ்சாயத்து நிர்வாகமே சட்ட அங்கீகாரத்துடன் கிராமப்புற / நகர்ப்புற உள்ளாட்சிகளாக அமைந்துள்ளன. இவற்றை மாநில தேர்தல் ஆணையங்கள் நடத்துகின்றன.

இந்தத் தேர்தலில் தேர்வாகும் பிரதிநிதிகள் அடித்தட்டு அளவிலான (GrossRoot Representatives) மக்கள் பிரதிநிதிகள். மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும், தங்கள் பகுதிகளை மேம்படுத்துவதும் இவர்களது கடமை.

தமிழகத்தில் சில மாவட்டங்கள் தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சிகளில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தற்போது நடைபெறுவது மாநிலத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்.

கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடமில்லை. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு இடமுண்டு. கட்சி சார்பற்றோரும் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தேர்வாகலாம்.

இந்தத் தேர்தலில் யாரைத் தேர்வு செய்வது?

நமது பகுதியை நன்கு கவனித்துக் கொள்ளக் கூடிய…

ஊழல் புரியாத, நேர்மையான…

அரசியல்ரீதியாக ஒருசார்பின்றிச் செயல்படக் கூடிய..

அதிகாரிகளுடன் துணிவுடன் பேசக் கூடிய…

பொதுநல நோக்கம் கொண்ட…

எவரையும் வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யலாம்.

எந்தக் கட்சியில் போட்டியிட்டு வென்றாலும், வார்டு உறுப்பினர் ஆனவுடன் அவர் அனைத்து மக்களின் பிரதிதிநிதி ஆகி விடுகிறார். இந்தச் சிந்தனை இருப்பவரையே நமது பிரதிநிதியாகத் தேர்வு செய்ய வேண்டும்.

வார்டு உறுப்பினர் பதவி என்பது ஒரு கௌரவப் பதவி. ஊதியத்துக்கான ஊழியமல்ல. அதை உணர்ந்து மக்கள் சேவைக்காக களம் காண்பவரை அடையாளம் கண்டு வாக்களிப்பது நமது கடமை.

யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

அதேசமயம், இந்த வார்டு உறுப்பினர்கள், நமது வரிப்பணத்தில் தான் நமக்கான திட்டங்களையும் வழக்கமான செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம். எனவே, இந்தத் தேர்தலில் வெல்ல பணம் கொடுக்கும் எந்த ஒரு வேட்பாளரும், பிற்பாடு அதனை வட்டியுடன் திரும்பப் பெறவே முயற்சிப்பார். எனவே, வாக்காளர்களின் வாக்குகளுக்கு விலை பேசுபவர் உள்ளாட்சி அமைப்பை சீர்குலைப்பவர் ஆகிறார். அவருக்கு கண்டிப்பாக வாக்களிக்கக் கூடாது.

ரூ. 500 முதல் ரூ. 5,000 வரையிலான பணம், வெள்ளிக்கொலுசு, குங்குமச்சிமிழ், ஐந்தாயிரம் ரூபாய் தருவதாக டோக்கனுடன் வாக்குறுதி, அண்டா- குண்டா- ஹாட்பாக்ஸ் போன்ற பாத்திரங்கள், 200 ரூபாய் கூடப் பெறாத சூரத் சேலைகள் போன்றவற்றை வாக்காளர்களுக்கு வழங்கும் எவருக்கும் வாக்களிக்காதீர்கள்.

ஜாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களைப் பிரித்து அரசியல் லாவணி பாடும் எவரையும் ஆதரிக்காதீர்கள். அதேபோல, ஆளும்கட்சி என்பதாலோ, ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிக செல்வாக்கு இருப்பதாலோ, அதிகார மமதையுடன் மிரட்டுவோரை எக்காலத்திலும் ஆதரிக்காதீர்கள்.

இந்தத் தேர்தல், நீங்கள் வசிக்கும் பகுதி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போகும் தேர்தல். எனவே, உங்கள் வாக்குகளை விலைபேசும் வேட்பாளர்களுக்கு கண்டிப்பாக வாக்களிக்காதீர்கள்.

நீங்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பயணிக்கத் தேவையான கட்டுச்சோறு தான் இந்தத் தேர்தல். இதில் பெருச்சாளிகளை நீங்களே பிடித்து மடியில் கட்டிக் கொள்ளாதீர்கள்.

கட்டுச்சோறா, பெருச்சாளியா? முடிவு உங்கள் கையில்.

-முகநூல் பதிவு (18.02.2022)

Leave a comment