அருளாளர்களின் ஒத்த சிந்தனை

1 Aug

அருட்பிரகாச வள்ளலாரும் அய்யா வைகுண்டரும் சமகாலத்தில் தமிழகத்தின் இருவேறு பகுதிகளில் வாழ்ந்த அருளாளர்கள். அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் அவர்களின் படைப்புகளில் காணப்படும் சமூக சிந்தனையையும் ஒப்பிடும் சிறப்பான நூல் இது.

தனியார் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் நூலாசிரியர் க.வாணிஜோதி, ஆய்வு நெறியாளர் முனைவர் வ.ஹரிஹரனின் வழிகாட்டுதலில் தான் அளித்த  முனைவர் பட்ட ஆய்வேட்டையே அருமையான நூலாகத் தொகுத்திருக்கிறார். ஆய்வுப்பொருளை குறிப்பிட்ட எல்லைக்குள் வகுத்துக் கொண்டிருப்பது அவரது ஆய்வை துலக்கமாக்குகிறது.

கடலூர் அருகிலுள்ள வடலூரில் வாழ்ந்த அருட்பிரகாச வள்ளலார் (1823- 1874), சமரச சுத்த சன்மார்க்கம் என்ற புதுநெறி கண்டவர். இவரது பாடல்கள் திருவருட்பா என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல, கன்னியாகுமரி அருகிலுள்ள சாமித்தோப்பில் வாழ்ந்த அய்யா வைகுண்டர் (1816- 1851), அய்யாவழி  என்ற புதிய வழிபாட்டு முறையை உருவாக்கியவர். இவரது பாடல்கள் அகிலத்திரட்டு என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

வடதமிழகத்தில் வள்ளலாரும் தென்தமிழகத்தில் வைகுண்டரும் ஒரே காலகட்டத்தில் செயல்பட்ட சமூக சீர்திருத்தவாதிகள்; தங்கள் காலத்தில் நிலவிய அரசுகளின் அராஜகப்போக்கு, கண்மூடித்தனமான மூடநம்பிக்கை, ஜாதி, மதப் பிரிவினைகளுக்கு எதிராக ஆன்மிக அடிப்படையில் மக்களைத் திரட்டி, உருவ வழிபாட்டுக்கு மாற்றாக ஜோதி வழிபாட்டை நிறுவியவர்கள். இருவருமே புலால் தவிர்த்தல்,  சைவ உணவை வலியுறுத்தல், வழிபாட்டுத்தலத்தில் காணிக்கை தவிர்த்தல், பக்தியில் ஆடம்பரத்தை ஒதுக்குதல், ஆண்}பெண் சமத்துவம், பசிக்கொடுமை போக்குதல் ஆகியவற்றில் ஒத்த சிந்தனையுடன் செயல்பட்டிருப்பதை இருவரது வாழ்க்கை நிகழ்வுகளும் காட்டுகின்றன.

வடலூரில் வள்ளலார் அமைத்த வழிபாட்டுத்தலம் ஞானசபை என்று அழைக்கப்படுகிறது. சாமித்தோப்பில் உள்ள வழிபாட்டுத்தலம் பதி என்று அழைக்கப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் உருவ வழிபாடு கிடையாது. நிலைக்கண்ணாடியும் ஜோதியும் இந்த இடங்களில் அவர்கள் காலத்திலேயே நிறுவப்பட்டன. மாநிலத்தின் இருவேறு திசைகளில் இருந்த பெரியோர் இருவரும் ஒரே திசையில் எவ்வாறு சிந்தித்திருக்கின்றனர் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.

வள்ளலார் வெள்ளுடை வேந்தர்; வைகுண்டரோ காவியுடை வேந்தர். ஏழை மக்களை பசிக்கொடுமையிலிருந்து காக்க வடலூரில் வள்ளலார் அமைத்தது சத்திய தருமச்சாலை; அதே நோக்கத்தில் சாமித்தோப்பில் வைகுண்டர் அமைத்தது தரும மடம். இருவருமே கருணையிலா ஆட்சி கடிது ஒழிய தத்தமது வழியில் பாடுபட்டவர்கள். இருவருமே அக்காலத்தில் ஆட்சியாளர் உதவியுடன் பெரும் வேகத்துடன் படையெடுத்த கிறிஸ்தவ மதமாற்றத்தை தங்கள் சீர்திருத்த அலையால் தடுத்து நிறுத்தியவர்கள்.

மஞ்சள்-வெண்மைக் கொடியை வள்ளலாரும், காவிக்கொடியை வைகுண்டரும் ஏற்றினர். இருவருமே வழிபாட்டில் போலித்தனமும் ஆடம்பரமும் உயிர்ப்பலியும் கூடாது என்று வழிப்படுத்திவர்கள். இருவருமே திருமணத்துக்குப் பிறகு துறவறம் ஏற்றவர்கள்; தாய்த்தமிழ் மொழியில் வழிபாட்டுக்கான பாடல்களை இயற்றியவர்கள். பூச நட்சத்திரத்தில் தான் இருவருமே சித்தி அடைந்தனர். (வள்ளலார்- தைப்பூசம்; வைகுண்டர்- வைகாசி பூசம்).

இவ்வாறாக, சமய உணர்வு கடந்த இருவேறு ஆன்மிகத் தலைவர்களை ஒப்பிட்டு, அவர்களது படைப்புகளின் வழிநின்று, அக்கால சமூகநிலைகளில் இருவரும் நிகழ்த்திய மாற்றங்களை இந்நூலில் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பொருத்தமான மேற்கோள்கள், பிழையற்ற எளிய தமிழ்நடை, தெளிவான அச்சாக்கம் என இந்நூல் பாராட்டத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. ஒரு முனைவர் பட்ட ஆய்வேடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாக இந்நூலைக் கூறலாம்.

***

வள்ளலார் – வைகுண்டர் படைப்புகளில் சமூகநிலை
முனைவர் க.வாணிஜோதி
184 பக்கங்கள், விலை: ரூ. 180-
வெளியீடு:  சங்கர் பதிப்பகம்,
15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு,
ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம்,
சென்னை- 600049
தொலைபேசி எண்: 044- 2650 2086, 94441 91256.

Leave a comment