வெளியுறவுக் கொள்கையின் அடித்தளம்

5 Aug

-வேணு ராஜாமணி

கடந்த 75 ஆண்டுகளில் உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவு, கொண்டாடி மகிழ்வதற்கான மாபெரும் வெற்றிக்கதையாகும். இதுவரையில் நாட்டை ஆண்ட அனைத்துத் தலைவர்களும் அரசுகளும் வெளியுறவுத் துறையில் இந்தியா சாதனை நிகழ்த்தக் காரணமாக இருந்திருக்கிறார்கள்.  

வேறு எந்த நாட்டிலும் காணப்படாத எண்ணற்ற வேற்றுமைகள், பெருமளவிலான முரண்பாடுகளைத் தாண்டி இந்தியா அற்புதமான வளர்ச்சி அடைந்திருக்கிறது; மக்களாட்சி முறையும் மெருகேறி இருக்கிறது. இதனை வியப்புடன் காணும் உலகம் நம்மைப் பாராட்டுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையிலும், பல்வேறு உலகளாவிய அமைப்புகளிலும் இந்தியா பிரதானப் பங்கு வகிக்கிறது. பொருளாதார வளம் நிறைந்த நாடுகள் இணைந்த ஜி20 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இந்த அமைப்பின் மாநாடு இந்தியாவில் அடுத்த ஆண்டு நடத்தப்பட இருக்கிறது.

உலகம் தற்போது சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டுள்ளது. ஐரோப்பாவில் மீண்டும் போர்மேகம் சூழ்கிறது. அதன் தாக்கத்தை உலக நாடுகள் உணரத் துவங்கிவிட்டன. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் உலகில் வெளியுறவு தொடர்பான காரணிகள் முதன்மை வகிக்கின்றன. குறிப்பாக, உலகப் பொருளாதார மாற்றங்கள், உணவுப் பொருள் தட்டுப்பாடு, கச்சா எண்ணெய் விலையேற்றம், பருவநிலை மாற்றங்கள், தொற்றுநோய்ப் பரவல்,  நிலையற்ற அரசியல் சூழல் போன்ற உலகளாவிய காரணிகள் நமது வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்றன.

வரும் ஆண்டுகளில் மிகப் பெரிய கொந்தளிப்பான காலகட்டத்தை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும். அதனைச் சந்திக்க நாம் தயாராக வேண்டும்.  இதுவரை நாம் அடைந்துள்ள சிறப்பான முன்னேற்றங்களால் மனநிறைவு கொண்டு, வாளாயிருந்துவிடக் கூடாது.

தேசப்பிரிவினைக்கும் கொடூரமான மதக்கலவரங்களுக்கும் மத்தியில்தான் இந்தியா உதயமானது. அப்போது நாட்டு மக்களில் பெரும்பாலோர் கல்வியறிவு அற்றவர்களாகவும் வறுமை மிகுந்தவர்களாகவும் இருந்தனர். ஆரம்ப நாட்களில் நமது ஜனநாயகம் தவழும் நிலையில் தத்தளித்தது; நமது தொழில்துறையும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அக்காலத்தில் உணவுப் பொருள் இறக்குமதியை நாம் சார்ந்திருந்தோம். இவையல்லாது பாகிஸ்தானுடனான மோதல் பெரும் நாசத்தை விளைவித்து வருகிறது.

தேசப் பிரிவினையைத் தொடர்ந்து லட்சக் கணக்கான அகதிகள் இந்தியாவுக்கு வந்தனர். அரசு, ராணுவம், எல்லைகள் ஆகியவற்றை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்துகொண்ட நிலையில், சுதந்திரம் அடைந்த சில வாரங்களிலேயே காஷ்மீருக்காக இரு நாடுகளும் மோதிக் கொண்டன. அந்த மோதலின் பாதிப்புகள் இன்றும் தொடர்கின்றன.

இவையல்லாமல், நாட்டை விட்டு வெளியேறிய ஆங்கிலேயர் ஏற்படுத்திய சிக்கல் முதன்மையானது. தனது ஆளுகையில் இருந்த நாட்டை இந்தியா- பாகிஸ்தான் என்று பிரித்ததுடன், 565 சமஸ்தானங்களுக்கும் விடுதலை அளித்த பிரிட்டிஷ் அரசு, அந்த சமஸ்தானங்கள் தாங்கள் விரும்பும் நாட்டுடன் இணையவோ, தனிநாடாக இயங்கவோ  செய்யலாம் என்று அறிவித்தது. அதனை இந்தியா வெற்றிகரமாகச் சமாளித்து ஒரே நாடாக இணைந்தது.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் வெளியுறவுத் துறைக்கும் பொறுப்பு வகித்தார். அவரது உலகளாவிய கண்ணோட்டமே அக்காலத்திய அசாரணமான குழப்பங்களிலிருந்தும், இடையூறுகளிலிருந்தும் நாட்டைக் காத்தது எனில் மிகையில்லை. தன்னைச் சூழ்ந்த தடைகளை மீறி,  நாட்டின் சுதந்திரம், சர்வ தேசியம், உலக அமைதி, சர்ச்சைகளுக்கு நிதானமான தீர்வு ஆகியவற்றை இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையாக்கினார் நேரு.

அதற்கான உள்ளார்ந்த உந்துசக்தியை பாரதத்தின் நீண்ட வரலாற்றிலிருந்து அவர் பெற்றார். உலகின் பிற சமூகங்கள், சமயங்கள், கலாச்சாரங்களுடன் வெளிப்படையாக இயல்பான பரிமாற்றங்களை நிகழ்த்திய, மகான் புத்தரும் பேரரசர் அசோகரும் மகாத்மா காந்தியும் போதித்த அஹிம்ஸையை ஆதாரமாகக் கொண்ட நாடு இந்தியா.

மேலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அங்கமாகவும் இருந்தவர் நேரு. எனவே காலனி ஆதிக்கத்துக்கு எதிரான செயல்பாடு, மனித உரிமைகளுக்கான குரல், நிறவெறிக்கும் இனவெறிக்கும் எதிரான நிலைப்பாடு, வளரும் நாடுகளுடன் இணக்கமான ஒற்றுமை ஆகியவற்றை நமது வெளியுறவுக் கொள்கையில் புகுத்தினார் அவர்.

ஐ.நா.சபையிலும் உலக அமைப்புகளிலும் இந்தியா தீவிரமாகச் செயல்பட முடியும் என நேரு நம்பினார். அதனால்தான்  உலக வங்கி, சர்வதேச நிதியம் ஆகியவற்றில் இந்தியா நிறுவன உறுப்பினரானது. அதுமட்டுமல்ல, மூன்றாம் உலக நாடுகளின் தலைவராகவும் மிளிர்ந்தது.

1947லும் 1949லும் தில்லியில் ஆப்ரோ-ஆசிய மாநாடுகளை இரு முறை இந்தியா நடத்தியது. 1955இல் இந்தோனேசியாவுடன் இணைந்து பாண்டுங் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியது. இறுதியாக, 1961இல் பெல்கிரேடில் அணிசேரா நாடுகளின் இயக்கம் மலர்ந்தது.

தற்போதைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும் அணிசேராக் கொள்கையும் வேறானவை என்பது அனைவரும் அறிந்ததே.  தற்போதைய இந்தியா வியூக தந்திரம் மிகுந்த தன்னாட்சியும், ஒரே சமயத்தில் பலதரப்பினருடன் இணைந்து பணியாற்றும் தன்மையும் கொண்டு இலங்குகிறது. இந்தப் பாணி வேறாக இருக்கலாம். ஆனால் நேருவால் வடிவமைக்கப்பட்ட வியூகம் மிகுந்த சுயநிர்ணயத் தன்மையில் தான் தற்போதைய வெளியுறவுக் கொள்கையும் வேர் கொண்டிருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உலகம் மேற்கு, கிழக்கு என இருகூறுகளாகப் பிரிந்தது; பனிப்போர்க் காலமும் அப்போது துவங்கியது. அச்சமயத்தில் தென்கிழக்காசிய நாடுகளும் பாகிஸ்தானும் சோவியத் யூனியனுக்கு எதிரான அமெரிக்க அணியில் இணைந்திருந்தன. 1947லும், 1965லும் பாகிஸ்தானுடன் இரு போர்களை இந்தியா வலுக்கட்டாயமாகச் சந்தித்தாலும், அவற்றில் வென்றது. 1962இல் சீனாவுடனும் போரைச் சந்தித்து அதில் இந்தியா தோல்வியுற்றது. அத்தருணங்களில் இந்தியாவின் அணிசேராக் கொள்கையை அமெரிக்கா வன்மையாகக் கண்டித்து வந்தது. ஆயினும் எந்த நிர்பந்தத்துக்கும் இரையாகாமல், தன்னிச்சையான வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்து வந்தது.

வல்லரசு நாடுகளிடையிலான பனிப்போரில் பங்கேற்பதில்லை என்று இந்தியப் பிரதமர் நேரு தொடர்ந்து கூறி வந்தார். அக்காலத்தில் பொருளாதார, ராணுவ பலமே நாடுகளின் செல்வாக்கை வெளிப்படுத்தி வந்தது. ஆனால், இந்தியா தனது குறைந்த ராணுவ, பொருளாதார வலிமையைக் கொண்டே செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டதற்கு, நேருவின் தலைமையே காரணம்.

இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்தது, அமெரிக்காவுடனோ, சோவியத் யூனியனுடனோ நெருங்கிய நட்புறவு கொள்வதைத் தடுக்கவில்லை. இந்தியாவின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இவ்விரு நாடுகளும் அவ்வப்போது தகுந்த உதவிகளைச் செய்துள்ளன. பிரிட்டன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிட்டிஷ் காமன்வெல்த்தில்  சேரவும் இந்தியா தயங்கவில்லை. பிரிட்டனுடனும், முன்னாள் காலனி நாடுகளுடனும் நட்புறவு கொண்டிருப்பது நமது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் என அப்போது இந்தியா முடிவெடுத்தது.  

இந்தியாவின் ஆரம்பகால வெளியுறவுக் கொள்கை லட்சியவாதத்தையும் நடைமுறை யதார்த்தத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நாட்டின் வேளாண்மை அபிவிருத்தி, தொழில்துறைக் கட்டமைப்பு, உயர்கல்வி மேம்பாடு, அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு வித்து என்பதை யாரும் மறுக்க முடியாது.

இந்தியாவின் அணுசக்தி முகமையும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் நேருவின் முயற்சியால் துவங்கப்பட்டவை. அவற்றின் மூலமாகவே அணு ஆயுத வலிமை வாய்ந்ததாகவும், எதிரிநாடுகளை நடுங்கச் செய்யும் ஏவுகணைத் திறன் கொண்டதாகவும் இந்தியா எழுச்சி பெற்றது.

உலக அரங்கில் இந்தியாவின் நிலையை உறுதிப்படுத்திய முதல் பிரதமர் நேரு போலவே, இதுவரை நாட்டை ஆண்ட அனைத்துப் பிரதமர்களும் நாட்டின் வளர்ச்சியையும் செல்வாக்கையும் வலுப்படுத்தியுள்ளனர்.  நேருவுக்குப் பிறகு பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுடன் இரண்டாவது போரைச் சந்தித்தது. அப்போது சோவியத் யூனியனுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவால்தான், பாகிஸ்தானுடனான தாஸ்கண்ட் ஒப்பந்தம்  சாத்தியமானது.

சாஸ்திரிக்குப் பிறகு பிரதமரான இந்திரா காந்தியின் காலம் இந்திய வெளியுறவுத் துறையின் பொற்காலம். 1971இல் பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதும், வங்கதேச விடுதலைக்கு இந்தியா உதவியதும் வரலாற்றுச் சாதனைகள். அப்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக, நிக்ஸன் தலைமையிலான அமெரிக்க அரசு தனது ஏழாவது கடற்படையை வங்காள விரிகுடாவுக்கு அனுப்பி, போரை நிறுத்துமாறு மிரட்டியது. ஆனால், சோவியத் யூனியனுடன் இந்திரா காந்தி கொண்டிருந்த நட்புறவு, அமெரிக்க மிரட்டலைத் தவிடுபொடியாக்கியது.

தனது தந்தை நேருவால் கடைப்பிடிக்கப்பட்ட சர்வதேச நல்லுறவுக் கொள்கைகளை இந்திரா காந்தி தொடர்ந்தார்.  அணிசேரா நாடுகளின் மாநாடு, காமன்வெல்த்  உச்சி மாநாடு ஆகியவற்றை தில்லியில் நடத்தியதன் மூலமாக, உலகத் தலைவர்களை வசீகரித்தார். தவிர, பொக்ரானில் நடத்தப்பட்ட முதல் அணுவெடிச் சோதனை மூலமாக, இந்தியாவின் ஆயுத வலிமை பறைசாற்றப்பட்டது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நாட்டை நவீனமயமாக்குவதும், தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிப்பதும் வெளியுறவுக் கொள்கையின் இலக்காக மாறின. அதற்காக அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்த அவர் முனைந்தார். பி.வி.நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது, உலகப் பொருளாதாரத்துடன் இயைந்து செல்லும் வகையில், இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

அடல் பிகாரி வாஜ்பாய் காலத்தில் அணு ஆயுதத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மன்மோகன் சிங் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் அதுவரை காணாத வளர்ச்சி விகிதத்தை எட்டியது. இவ்விரு அம்சங்களால்  இந்தியாவை உலக நாடுகள் மிகுந்த மரியாதையுடன் கவனிக்கத் துவங்கின.  

மேற்கண்ட பிரதமர்கள் அனைவரும் அமைத்த வலிமையான அஸ்திவாரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி தனக்கே உரித்தான வெளியுறவுக் கொள்கையை 2014ஆம் ஆண்டிலிருந்து கட்டமைத்து வருகிறார். இவரது வெளியுறவுக் கொள்கை வெளிநாடுகளைத் திறம்படக் கையாள்வதை மையமாகக் கொண்டிருக்கிறது. தனது முதல் பதவியேற்பு விழாவுக்கு அண்டை நாடுகளின் ஆட்சியாளர்களை அழைத்ததிலிருந்தே அவரது வெளியுறவு நாட்டம் வெளிப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பேத்தி திருமணத்தில் பங்கேற்றது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அகமதாபாத்திற்கும் மாமல்லபுரத்திற்கும் வரவழைத்தது, வெளிநாடுகளுக்குச் செல்லும்போது இந்திய வம்சாவளியினருடனும், வெளிநாடு வாழ் இந்தியர்களுடனும் பிரம்மாண்டமான சந்திப்புகளில் பங்கேற்பது, அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப்புடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது என மோடியின் வெளியுறவு நிகழ்வுகள் ஏராளம்.

எனினும், நமது 75 ஆண்டுக் காலத்தில் உலகுடனான நமது உறவை சீர்தூக்கிப் பார்க்கையில், பாகிஸ்தான், சீனா ஆகிய அண்டை நாடுகளுடனான உறவு மேம்படாமல் இருப்பது நெருடலாகவே உள்ளது. பாகிஸ்தானுடனான நட்புறவு கிட்டத்தட்ட சீர்குலைந்துவிட்டது. சீனாவுடனான உறவோ எல்லையில் மோதலாக நீடிக்கிறது. காஷ்மீர் பிரச்னைக்கோ, சீனாவுடனான எல்லைத் தகராறுக்கோ தீர்வு காணும் வாய்ப்பு அண்மையில் தென்படவில்லை.

அண்டைநாடுகளான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதும், இலங்கையில் நிலையற்ற அரசியல் சூழல் ஏற்பட்டிருப்பதும் நமக்கு நல்லதல்ல. மாலத்தீவுகள், நேபாளம், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளும் இலங்கையில் நேரிட்ட பொருளாதார வீழ்ச்சியைப் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகலாம் எனப் பலரும் அஞ்சுகின்றனர்.

அண்டைநாடுகளில் நிலையற்ற தன்மை நிலவும்போது,  பயங்கரவாதம் பெருகும் ஆபத்தும், அதிக அளவிலான அகதிகள் வருகை என்ற சிக்கலும் நேரிட வாய்ப்புள்ளது. உக்ரைன் மீதான ருஷ்யாவின் தாக்குதலால் ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் பற்றாக்குறை, பணவீக்கம் உயர்வு போன்ற பிரச்னைகள் நிலவுகின்றன. தொலைதூர நாடுகளின் விவகாரங்களால் நாமும் பாதிப்புக்குள்ளாவோம் என்பதற்கு இது உதாரணம்.

அதேபோல, பருவம் தவறிய மழைப்பொழிவு, புயல்கள், வெள்ளச்சேதம், கடல்மட்டம் உயருதல், வெப்ப அலைகளின் தாக்கம் போன்ற பருவநிலை மாற்றக் கோளாறுகளையும் உலகம் சந்திக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்கிருமி எவ்வாறு உலகப் பொருளாதாரத்தை சீர்குலையச் செய்தது என்பதை கோவிட்-19 தொற்றுப் பரவலின்போது நாம் கண்டோம்.  

அதேபோல, நமது நாட்டிலும் உலக அளவிலும் பரவலாகிவரும் தாராளமயமாக்கம் குறித்தும் நாம் கவலை கொண்டாக வேண்டும். பிற நாடுகளில் செயல்படும் இஸ்லாமியர்களுக்கு எதிரான, அந்நியர்களுக்கு எதிரான வலதுசாரி சக்திகள் நம் நாட்டின்மீது கண் வைக்கலாம். நமது நாட்டிலும் இதே எண்ணத்துடன் நிகழும் செயல்பாடுகளால், பன்முகத்தன்மையும் மதச்சார்பற்ற பண்பும் கொண்ட நமது ஜனநாயகம் மீதான மரியாதை குறையக்கூடும்.

அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா நம் நாட்டிற்கு வந்திருந்தபோது,  “இந்தியாவில் சமத்துவம், மத சுதந்திரம், கருத்துரிமை ஆகியவை பேணப்படும் வரை மட்டுமே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கும்” என்று சொன்னதை நினைவுகூர வேண்டும்.

வருங்காலத்தில் உலகம் நிலையற்ற தன்மையைச் சந்திக்கப் போகிறது. அதனை நாம் எதிர்கொள்வதற்கு ஒற்றுமையாக இருப்பது அவசியம். கடந்த கால சாதனைகளைக் கொண்டாடும் அதே நேரத்தில்,  இதுவரை நாம் செய்துள்ள தவறுகள் யாவை, தற்போது எங்கே தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.

உலக நாடுகள் நம்மை மதிக்கக் காரணமான இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள நெறிமுறைகளையும் மக்களாட்சியின் மாண்பையும் பாதுகாக்க நாம் மேற்கொள்ளும் உறுதியே, வரக்கூடிய நிலையற்ற தன்மையிலிருந்து நம்மைக் காக்கும்.  

குறிப்பு:
கட்டுரையாளர், நெதர்லாந்துக்கான முன்னாள் இந்தியத் தூதர்

தினமணி (05.08.2022)

One Response to “வெளியுறவுக் கொள்கையின் அடித்தளம்”

  1. agni ram (@agniram1) August 5, 2022 at 9:21 AM #

    தூதர் சிபாரிசு மூலம் பணிக்கு சேர்ந்தவரோ
    சுத்த பிதற்றல்
    பொருளாதாரத்தில் இந்தியா பங்களாதேசத்திற்கு பின்னால் உள்ளது

    Like

Leave a comment