தர்மபுரி மாவட்டத்தின் உடனடித் தேவைகள்

6 Aug

தன்னார்வ அமைப்பு ஒன்று, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க, பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியின் நிலை குறித்து ஓர் ஆய்வு செய்தது. அப்போது, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, தர்மபுரியில் பணியாற்றும் பத்திரிகையாளர் என்ற முறையில், 2022 பிப்ரவரியில் நான் அளித்த தனிப்பட்ட அறிக்கை இது…

தர்மபுரி மாவட்டம், தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்று. நீர்வளம், விவசாயம், தொழில்வளம் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதால், இந்த மாவட்ட மக்கள் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்வது வழக்கமாக உள்ளது.

இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட அம்சங்கள் உடனடித் தேவை:

  1. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி
  2. விவசாயத்துக்குத் தேவையான நீர்வளம்
  3. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தொழில்கள்.
  4. வனவளம், சுற்றுலாவை மேம்படுத்துதல்

1. அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி

இந்தப் பகுதியின் நிலத்தடிநீர் அதீதமான பூளூரைடு குறைபாட்டுடன் இருப்பதால், மக்கள் பல நோய்களுக்கு ஆட்பட்டு வந்தனர். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வாயிலாக இந்தச் சிக்கல் ஓரளவு சரிசெய்யப்பட்டுள்ளபோதும், மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி இன்னமும் கிடைக்கவில்லை.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலமாக மாவட்டத்தின் விடுபட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்த முடியும். தற்போது மாநில அரசு அதற்கான முயற்சிகளில் (ஒகேனக்கல் மூன்றாவது குடிநீர்த் திட்டம்) இறங்கி உள்ளது. ஆனால், அண்டை மாநிலமான கர்நாடகம் காவிரி நீரின் பயன்பாட்டை வேறு வழிகளில் திருப்ப எதிர்ப்புத் தெரிவிக்கிறது. இது விஷயத்தில் மத்திய அரசு மக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும்.

2. விவசாயத்துக்குத் தேவையான நீர்வளம்

4,496 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த மாவட்டத்தில் வனப்பகுதியின் பரப்பளவு மட்டும் சுமார் 1,700 சதுர கி.மீ. (38 %). மாநிலத்தின் வனப்பகுதியில் சுமார் 17.2 % தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது. ஆண்டு சரசரி மழையளவு 850 மி.மீ. மட்டுமே.

இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை, சுமார் 16 லட்சம் (2021 ஆண்டு நிலவரம்). இதில் 74 சதவிகிதத்தினர் விவசாயம் சார்ந்து வாழ்கின்றனர். இவர்களில் 43 % விவசாயிகள்; 31 % விவசாய கூலித் தொழிலாளர்கள். தர்மபுரி மாவட்டத்தின் பிரதானத் தொழில் விவசாயமாக இருந்தபோதும், அதற்குத் தேவையான போதிய மழையளவோ, நீர்வளமோ இங்கு இல்லை. எனவே வறட்சியான மாவட்டமாகவே தர்மபுரி கருத்தில் கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தின் சில பகுதிகள் தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் வறட்சி தாண்டவமாடுகிறது. சுமார் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது (2000 ஆண்டு நிலவரம்).

அதேசமயம், இந்த மாவட்டத்தில் பல ஆறுகளும் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளும் உள்ளன. காவிரி, தென்பெண்ணை, தொப்பையாறு, வாணியாறு, மார்க்கண்ட நதி, தோப்பூர் ஆறு, சனத்குமார நதி, கம்பையநல்லூர் ஆறு, பாம்பாறு ஆகியவை இந்த மாவட்டத்தின் ஆறுகள். இவற்றில் காவிரியில் மட்டுமே ஆண்டு முழுவதும் நீர் பாய்கிறது. ஆனால், காவிரி ஆற்றின் நீர்மட்டம், மேட்டுப்பாங்கான தர்மபுரி மாவட்டத்துக்கு எந்தப் பயனும் அளிப்பதில்லை. தர்மபுரி மாவட்டம் வழியாகப் பாய்ந்தாலும், காவிரியால் இந்த மாவட்ட விவசாயிகளுக்கு எந்தப் பயனும் இல்லை.  கர்நாடகத்திலிருந்து ஓடிவரும் தென்பெண்ணையில் ஓரளவு நீர் இருந்தாலும் அதன் பாசனப் பகுதி மிகவும் குறைவு; கர்நாடகத்தின் தயவில், அம்மாநிலக் கழிவுநீரின் கசிவோடையாக இந்த ஆறு மாறி இருக்கிறது. பிற ஆறுகளில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீரைக் காண முடியும்.

எனவே, ஆறுகளை நம்பி இங்கு விவசாயம் செய்ய முடியாது. மழைக்காலங்களில் விதைக்கும் மானாவாரிப் பயிர்களே இங்கு அதிகம் விளைகின்றன. அதில்  கொள்ளு, உளுந்து, பட்டாணி, பச்சைப் பயறு, துவரை, நெல், இஞ்சி, அவரை,  காலிபிளவர், காராமணி, மொச்சை, சோளம், கேழ்வரகு, கம்பு, பருத்தி, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வெங்காயம், ஆமணக்கு, கடுகு, மஞ்சள் போன்றைவை விளைவிக்கப்படுகின்றன. 

மா சாகுபடியும், மலர்ச் சாகுபடியும் அண்மைக்காலமாகப் பெருகி வருகின்றன. கால்நடை வளர்ப்பு துணைத் தொழிலாக இருப்பதால்தான் இம்மாவட்ட விவசாயிகள் தாக்குப் பிடிக்கின்றனர். எனவே இந்த மாவட்ட விவசாயிகளிடம் அதிக செழிப்பைக் காண முடிவதில்லை.

கர்நாடகத்தில் பருவமழைக் காலத்தில் அதிக மழைப்பொழிவு ஏற்படுகையில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அந்தச் சமயத்தில் ஆண்டுதோறும் பல நூறு டி.எம்.சி. தண்ணீர் வீணாக காவிரியில் ஓடி வங்கக் கடலில் கலக்கிறது. அதனை தர்மபுரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் திசைதிருப்ப வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. குறிப்பாக, ஒகேனக்கல் பகுதியில் வெள்ளத்தின் அளவு 2 லட்சம் கன அடியாக இருக்கும்போது, அங்கிருந்து, நீரேற்றுமுறை மூலமாக, பென்னாகரம் அருகில் உள்ள மடம் கிராமத்தில், கெண்டையன்குட்டை ஏரிக்கு நீரைத் திருப்பி அனுப்பினால், அங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரைக் கொண்டுசெல்ல முடியும். இதற்கு சென்ற அதிமுக ஆட்சியில் ரூ. 350 கோடி மதிப்பில் திட்டம் தீட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படுமானால், தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் வேதனை குறையும். காவிரி உபரி நீரைப் பயன்படுத்துவதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் வாய்ப்பில்லை.

3. வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தொழில்கள்

வேளாண்மை தவிர்த்து பட்டுப்புழு வளர்த்தல், கால்நடை வளர்ப்பு ஆகியவை இங்கு பிரதானமாக உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் 112 பெரிய தொழிலகங்களும், 10880 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளதாக (31.07.2021 நிலவரம்) மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.

அண்டை மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள ஒசூர் தொழில்வளத்தில் சிறந்து விளங்குவதால், இம்மாவட்ட மக்கள் அங்கு அதிக அளவில் வேலைக்குச் செல்கின்றனர். சென்னை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற தொழில்வளமுள்ள பிற மாவட்டங்களுக்கு குடும்பத்துடன் இடம் பெயர்வோரின் எண்ணிக்கையும் அதிகம். இதனால், இந்த மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

இம்மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் அதிகம் உள்ளதால், அவற்றை முறைப்படுத்துவதன் மூலமாக பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். அதேபோல மா சாகுபடிக்கு கூடுதல் மானியமும் கவனமும் அளிக்கப்பட்டால், மாங்கூழ் தொழிற்சாலைகளை அதிகரித்து, ஏற்றுமதி மூலமாக இந்த மாவட்டத்தை முன்னேற்ற முடியும்.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சிப்காட் தொழில்பூங்கா விரைவில் அமைக்கப்படுமானால், பல்லாயிரம் பேருக்கு உள்ளூரில் வேலைவாய்ப்புக் கிடைக்கும். தற்போது அதற்கான முயற்சிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள எர்ரபையா ஊராட்சிக்கு உள்பட்ட நெக்குத்தியில் ராணுவ ஆராய்ச்சி மையம் அமைப்பதாக கடந்த 2021 இல் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு ரூ. 4,500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டு, சுமார் 900 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணி துவங்கியது. ஆனால், அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அத்திட்டத்தை மறுஆய்வு செய்து செயல்படுத்தினால், பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில் ஆயிரக் கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்; இப்பகுதியின் பொருளாதாரமும் உயரும்.

4. வனவளம், சுற்றுலாவை மேம்படுத்துதல்

1,700 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இயற்கையான வனவளம் இருந்தபோதும், இம்மாவட்டம் வறுமையில் தவிக்கிறது. வனப்பொருட்களை வணிகப்படுத்துவதில் அரசின் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வனப்பகுதி கிராமங்களில் வாழும் வனவாசி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து ஒடுக்கப்பட வேண்டும். தவிர, வன விளைபொருட்கள மீதான அவர்களின் உரிமைகள் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களை வனத்துறையினர் தொந்தரவு செய்வது கூடாது.

அதியமான் கோட்டை போன்ற தொல்லியல் சின்னங்கள், மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் போன்ற பழமையான திருக்கோயில்கள், ஒகேனக்கல் அருவி, மலையேற்றத்துக்கு உகந்த பசுமையான மலைச்சிகரங்கள் என, சுற்றுலா வளர்ச்சிக்கேற்ற பல மையங்கள் இங்கு உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி சுற்றுலாத் திட்டங்களைத் தீட்டினால், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பண்பாட்டுப் பகிர்வு மூலமாக இம்மாவட்டம் மேலும் சிறப்படையும்.

.

.

Leave a comment