அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம்

21 Aug

தினமணி- இளைஞர்மணியில் தொடராக நான் எழுதிய இந்திய விஞ்ஞானிகள் குறித்த 120 கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பொள்ளாச்சி அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தால், 670 பக்கங்களுடன், மூன்று தொகுதிகளாக, ரு. 750 விலையில் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. அந்நூலில் வெளியாகியுள்ள எனது முன்னுரை இது...

அக்கினிக் குஞ்சுகள்’ நூலின் முன்னுரை

ஆக்கமும் நோக்கமும்…      

தினமணி நாளிதழின் இணைப்பிதழாக செவ்வாய்தோறும் வெளிவரும்  ‘இளைஞர்மணி’யில் வெளியான இந்திய விஞ்ஞானிகள் குறித்த கட்டுரைத் தொடரின் தொகுப்பே இந்த நூல்.

2015 அக்டோபர் 27ஆம் இதழில் துவக்கிய இந்தத் தொடர் 2018 டிசம்பர் 20இல் நிறைவடைந்தபோது, 120 கட்டுரைகள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்தக் கட்டுரைகளை எழுதத் துவங்கியபோது இவ்வளவு கட்டுரைகளை எழுதுவேன் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் இதனை ஒரு தொடராகவே நான் கற்பனை செய்யவில்லை.

இளைஞர்மணியில் பத்து முக்கியமான இந்திய விஞ்ஞானிகளைப் பற்றி எளிய முறையில் அறிமுகம் செய்யலாம் என்பதே முதலில் திட்டமாக இருந்தது. ஆனால், அதற்காக இணையத்திலும் நூலகத்திலும் அடிப்படைத் தரவுகளைத் தேடியபோது, கட்டுரைகளின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்தது. அதனால்தான் இந்தக் கட்டுரைத் தொடருக்கு தனிப்பட்ட தலைப்பு கொடுக்கப்படவில்லை.

எனது இந்த எழுத்துப்பணி உற்சாகமாகத் தொடர மூவர் முக்கியமான காரணம். தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன், தினமணி இணைப்பு இதழ்களின் பொறுப்பாசிரியர் திரு.பாவை.சந்திரன், இளைஞர்மணி தயாரிப்பைக் கவனித்துவந்த முதன்மை உதவி ஆசிரியர் திரு. என்.ஜீவா ஆகியோரே அந்த மூவர். இவர்களது ஆதரவும் ஆலோசனைகளூம் தான் என்னை தொடர்ந்து எழுதத் தூண்டின.

நமது விஞ்ஞானிகளைப் பற்றிய அடிப்படைத் தரவுகள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே கிடைத்தன. அவற்றைத் தொகுத்து, உண்மையான தகவலா என்பதைச் சரிபார்த்து, புதிய கலைச் சொற்களுடன் கட்டுரைகளை எழுதுவது ஒவ்வொரு வாரமும் எனக்கு புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக இருந்தது. இதற்கு வாய்ப்பளிப்பதாக எனது சென்னை அலுவலகப் பணி அமைந்தது.

இவ்வாறாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெளியான இந்தக் கட்டுரைகளை எங்கள் ஆசிரியர் பாராட்டி மெச்சியதுடன் இதனை நூலாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்றும் அறிவுறுத்தினார்.

அதேசமயம், ’விஞ்ஞானபாரதி’ அமைப்பின் தமிழகத் தலைவர் திரு.பி.கிருஷ்ணமூர்த்தி இந்தக் கட்டுரைகளை தினமணியில் படித்து மகிழ்ந்ததுடன், இதனை நூலாக வெளியிடுமாறு, பொள்ளாச்சியில் உள்ள அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையப் பொறுப்பாளர்களிடம் பரிந்துரைத்தார். அதன் பதிப்பாசிரியர் திரு. சிற்பி.பாலசுப்பிரமணியம் ஐயா இதனை தொலைபேசியில் தெரிவித்தபோது மிகவும் மகிழ்ந்தேன்.

ஏனெனில், அருட்செல்வரின் கல்வி நிறுவனமான நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் வார்ப்புத் தான் (1986- 1989, இயந்திரவியல் பிரிவு) நான்.  என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. சி.ராமசாமி ஐயா, எனக்கு பட்டய வகுப்பில் தொழிலக மேலாண்மைப் பாடம் கற்பித்த ஆசிரியரும் கூட. ஆகவே இருமடங்கு மகிழ்வுடன் இந்த வாய்ப்பை ஏற்றேன்.

இதனை நூலாக வெளியிட அனுமதி அளித்த தினமணி ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் அவர்களுக்கும், எக்ஸ்பிரஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குநர் திரு. மனோஜ்குமார் சொந்தாலியா அவர்களுக்கும் எனது பணிவான நன்றிகள்.

இந்த நூலை மிகவும் திறம்படச் செம்மைப்படுத்தியுள்ள பதிப்பாசிரியர் திரு. சிற்பி. பாலசுப்பிரமணியம் ஐயா, நூல் வடிவமைப்புச் செய்துள்ள திரு. பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இந்த நூலில், நமது பழம்பெரும் விஞ்ஞான சாதனையாளர்களில் துவங்கி, உலகை வலம் வரும் தற்போதைய இளம் விஞ்ஞானிகள் வரை 120 பேர், 12 துணைத் தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளனர். இந்தப் பரந்த உலகில் பாரதம் யாருக்கும் சளைத்த நாடல்ல என்பதை இந்த நூலைப் படிக்கும் எவரும் உணர முடியும். நமது சாதனையாளர்களை அறிவதன் மூலம், அவர்களை வெல்லும் பெருஞ்செயல்களைப் புரியும் ஊக்கம் இளம் தலைமுறைக்குக் கிடைக்கும் என்பதே இந்த நூலின் நோக்கம்.

நமது இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்லதோர் வழிகாட்டியாக, வல்லதோர் வழித்துணையாக நமது விஞ்ஞானிகள் விளங்குகின்றனர். எத்தனையோ விஞ்ஞானிகள் இந்த ஞானபூமியில். அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்!

-வ.மு.முரளி / திருப்பூர் / 14.02.2019

காண்க: அக்கினிக் குஞ்சுகள்

2 Responses to “அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம்”

Trackbacks/Pingbacks

  1. எனது ஆசிரியரின் பாராட்டு | வ.மு.முரளி - November 6, 2022

    […] காண்க: அக்கினிக் குஞ்சுகள் -நூல் அறிமுகம் […]

    Like

  2. அக்கினிக் குஞ்சுகள்- நூல் விளம்பரம் | வ.மு.முரளி - November 9, 2022

    […] அக்கினிக் குஞ்சுகள்- நூல் அறிமுகம் […]

    Like

Leave a comment